தமிழக உள்ளாட்சி தேர்தல்களை இரண்டு கட்டமாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்து அதற்கான ஏற்பாடுகளை செய்து முதல் கட்டமாக சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் தேர்தல் கடந்த 13ம் தேதி நடைப்பெற்றது.
மொத்தம் 28 ஆயிரம் உள்ளாட்சி அமைப்பு களில் உள்ள 67 ஆயிரம் பதவிகளுக்கான வாக்குப் பதிவு வழக்கம் போல் காலை 7 மணியளவில் தொடங்கியது. வாக்குத் பதிவு தொடங்கிய சில மணிநேரத்திற்குள்ளாகவே சென்னையில் பல்வேறு வாக்குசாவடிகளில் ஆயுதங்களுடன் வந்த ரவுடிகள் வாக்காளர் களை மிரட்டியதுமட்டுமல்லாமல், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த அரசு ஊழியர் களையும் மிரட்டி வாக்கு சாவடிகளை கைப்பற்றி கள்ளஓட்டுகளை போட்டனர். அன்று சென்னையில் பல வாக்குச்சாவடி களில் காலை 8 மணிக்கே வாக்குகள் பதிவு செய்யப்பட்டு வாக்குசாவடியை மூடி வைத்த நிகழ்வுகளும் நடைபெற்றன.
அ.தி.மு.க பொதுசெயலரும் முன்னாள் முதல்வருமான ஜெயலலிதா இதுப்பற்றி கருத்துத் தெரிவிக்கையில், '' இத்தேர்தலை ரத்து செய்து ராணுவத்தின் துணையுடன் மறுதேர்தல் நடத்தப்பட வேண்டும்'' என்று கூறினார்.
ஆனால் தி.மு.க தலைவரும், தமிழக முதல்வருமான மு.கருணாநிதி எனது பெயருக்குக் களங்கம் கற்பிக்கும் முயற்சியே இது என்று கூறியது மட்டுமல்லாமல் இந்த அராஜகத்தை அரங்கேற்றியது ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவும் அதன் கூட்டணி கட்சிகளும்தான் என்று குற்றம் சாட்டினார்.
அ.தி.மு.க மற்றும் அதன் தோழமை கட்சிகள் மட்டுமல்ல, தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான விஜயகாந்த் இத்தேர்தலில் தனது வாக்குரிமையை பதிவு செய்யாமல் புறக்கணித்ததுமட்டுமல்லாமல் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் வன்முறை மற்றும் கள்ள ஓட்டு சம்பவங்களும் நடைபெற்றுள்ளது. எனவே மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும், அதுவும் மத்திய தேர்தல் ஆணையத் தின் மேற்பார்வையில், ராணுவத்தினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியும் தேர்தலின் போது நடைபெற்ற வன்முறைகளும் ஆளும் தி.மு.கவை குற்றம் சாட்டியது .
ஆனால் சென்னை உள்பட தமிழகத்தில் முதல் கட்டவாக்குப்பதிவு நடைபெற்ற இடங்களில் உள்ளாட்சித் தேர்தல் அமைதி யாக நடைபெற்றதாக சென்னை மாநகர காவல்துறை ஆணையர் திருமதி லத்திகா சரண் கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இத்தேர்தலை ரத்து செய்ய வேண்டும் என்று அ.தி.மு.க சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது. அ.தி.மு.கவின் தோழமை கட்சியான ம.தி.மு.க, தி.மு.கவின் கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கட்சி, விஜயகாந்த்தின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் போன்ற கட்சிகளும் சென்னை உயர்நீதிமன்றத்தில் இத்தேர்தல் செல்லாது என்று அறிவிக்ககோரி வழக்கு தொடுத்தது.
இவ்வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் சென்னை மாநகராட்சி தேர்தலில் வெற்றி பெறும் கவுன்சிலர்கள் வழக்கின் இறுதித் தீர்ப்புக்கு கட்டுப்பட வேண்டும் என்று இடைக்கால உத்தரவு ஒன்றினை பிறப்பித்துள்ளது.
தொகுப்பு: கேடிஸ்ரீ |