சாஸ்தா தமிழ் அறக்கட்டளை: 'அனுபவம் புதுமை'
அக்டோபர் 4, 2014 அன்று, டாலஸ் நகரில் இயங்கிவரும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளை, இசையும் நடனமும் ஒருங்கே கலந்த 'அனுபவம் புதுமை' என்ற நிகழ்ச்சியை இர்விங் ஆர்ட்ஸ் சென்டரில் நடத்தவுள்ளனர். இதன்மூலம் திரட்டப்படும் நிதி உதவும் கரங்கள் உட்பட்ட தொண்டு நிறுவனங்களுக்குத் தரப்படும்.

பிரபு சங்கர் தலைமையிலான' The High Octavez இசைக்குழுவினரின் இன்னிசையுடன், தன்னார்வத் தொண்டர்கள் பங்கேற்கும் நாட்டிய நாடகம் முற்றிலும் புதுமையான அனுபவமாக இருக்கும் என்று அறக்கட்டளையின் இயக்குனர் வேலு ராமன் தெரிவிக்கிறார். அன்னம் சுப்ரமணியன் மற்றும் புவனா அருண் தலைமையில் நடனம் மற்றும் நாடக காட்சிகளில் உள்ளூர் நடனக் கலைஞர்கள், ப்ளேனோ தமிழ்ப்பள்ளி மாணவ மாணவியர் பங்கேற்கிறார்கள். இந்த நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதியைக் கொண்டு, உதவும் கரங்கள் அமைப்பிற்கு, 'டைம்' பத்திரிக்கை விருதுபெற்ற முருகானந்தம் கண்டுபிடித்து, தயாரித்து வினியோகிக்கும் 'சானிடரி நாப்கின்' உற்பத்தி இயந்திரங்கள் வழங்கப்படுகின்றன. உதவும் கரங்கள் அமைப்பில் பெண்களுக்குத் திருமணம், குழந்தைகளுக்குக் கல்வி போன்ற வகைகளுக்காவும் நிதியுதவி வழங்கப்படுகிறது. மேலும் சாஸ்தா தமிழ் அறக்கட்டளையின் சார்பில், திண்டுக்கல் சக்தி கலைக்குழுவினருடன் இணைந்து தாழ்த்தப்பட்ட பெண்களுக்கான மேம்பாட்டுத் திட்டம், உலகத் திருக்குறள் மையத்தின் அறப்பணிகள், அமெரிக்க அளவில் திருக்குறள் போட்டி நடத்துவது உள்ளிட்ட பல்வேறு அறப்பணிகளுக்கும் நிதியுதவி வழங்கப்படுகிறது.

நிகழ்ச்சி அறக்கட்டளை இயக்குனர்கள் வேலு ராமன், விசாலாட்சி வேலு தலைமையில் தன்னார்வத் தொண்டர் குழுக்கள் செய்து வருகின்றன. மேலும் தகவல்களுக்கு: www.sasthatamilfoundation.com

சின்னமணி,
டாலஸ், டெக்சஸ்

© TamilOnline.com