குழந்தை இலக்கியப் பிதாமகரும், அறுபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாகக் குழந்தைகளுக்காக இறுதிமூச்சுவரை எழுதிக் கொண்டிருந்தவருமான வாண்டுமாமா அமரரான செய்தியைத் தென்றல் மூலம் அறிந்து கொண்டேன். அவர் எங்கள் ஊரான அரிமளத்தில் பிறந்தவர். குழந்தைகளுக்கான அவர் கதைகளில் வீரமும், விவேகமும் வெளிப்படும். புதிர்கள் பலரது புருவங்களை உயர்த்தும். அறிவியல் கதை வாழ்வியலை வெளிப்படுத்தும். 65 கால வரலாற்றில் 250க்கும் அதிகமான படைப்புகளை குழந்தைகளுக்குத் தந்திருக்கிறார். வாண்டுமாமாவின் ஆசான்கள் அவரை மனதுக்குள் மெச்சினாலும், வெளிப்படையாகத் திட்டத் தயங்கியது இல்லையாம். மூன்று தலைமுறைகளைக் கடந்து நான்காம் தலைமுறை வாசகர்களையும் தன் பிடியில் வைத்திருந்தவர் வாண்டுமாமா.
அரிமளம் தளவாய் நாராயணசாமி, ஹூஸ்டன்
*****
எழுத்தாளர் எம்.எஸ். அப்துல் காதர் என்கிற கழனியூரன் பற்றியும், அவர் எழுதிய 'ஒண்டி வீரன்' சிறுகதையையும் ஆகஸ்ட் மாதத் தென்றலில் படித்து மகிழ்ந்தேன். திருநெல்வேலியில் உள்ள 'கழுநீர்குளம்' என்ற கிராமம், தென்றல் மூலம் உலகம் முழுவதும் அறியப்படுகிற கிராமம் ஆகியுள்ளது. ஜி.க்ஷி.வரதராஜன் நேர்காணல் மிகவும் அருமை. குழந்தை இலக்கியப் பிதாமகர் வாண்டுமாமாவின் பெயர் கிருஷ்ண மூர்த்தி என்பது யாருக்கும் தெரியாது. ஆனால் கதைகள் பிரசித்தம். விவசாயத்தில் சாதனை செய்து கொண்டிருக்கும் நல்லகீரை ஜெகன்னாதனின் நேர்காணல் மிகவும் முக்கியமானது. மக்களுக்கு விழிப்புணர்வூட்டும் அவரது திட்டங்கள் படிக்கப் பிரமிப்பாக உள்ளன. நிறைய நல்ல விவரங்களைக் கொடுக்கும் தென்றலுக்கு நன்றி. தென்றலின் அனைத்துப் பகுதிகளும் அமோகமாக இருந்தன.
சசிரேகா சம்பத், யூனியன் சிடி, கலிஃபோர்னியா
*****
ஹூஸ்டன் சந்திரமௌலி தென்றலில் அளித்த டி.வி. வரதராஜன் பேட்டி மிகவும் ரசிக்கத்தக்கதாக இருந்தது. பல வருடங்களுக்கு முன் 'வணக்கம் தமிழகம்' நிகழ்ச்சியில் அவரும், திருமதி. உமா பத்மனாபனும் என்னைப் பேட்டி கண்டனர். சாதாரணமாக பேட்டிகளின் ஆரம்பத்தில் 'உலகப் பிரசித்தி பெற்ற' என்று அறிமுகப்படுத்த ஆரம்பித்து என்னிடம் ரகசியமாக 'மேம்... உங்கள் பெயர் என்ன?' என்று கேட்கப்பட்ட அனுபவங்களிலிருந்து மாறுபட்டு என்னைப்பற்றி அத்தனை தகவல்களையும் டி.வி.வ. விரல்நுனியில் வைத்திருந்து ஆச்சரியம் தந்தார். மிகச் சரளமாகக் கேள்வி கேட்டார். தமிழ் நாட்டின் பிரபல புள்ளி பேட்டி எடுக்கிறாரே என்று நான் லேசாக பயந்தேன். அதுதான் அவரை நான் முதன்முறையாகச் சந்தித்ததும். ஆனாலும் என்னவோ காலங்காலமாக நாங்கள் நண்பர்கள் என்பதுபோல் என்னை நினைக்க வைத்துவிட்டார். அந்தத் திறமைதான் அவருடைய மிகப்பெரிய வெற்றிக்குக் காரணமோ என்று அப்போது நினைத்தேன். எல்லாவற்றிற்கும் மேலாக அவரும் என்னை மாதிரியே திருவல்லிக்கேணி ஆள் என்றால் அதைவிட வேறு என்ன சொல்லவேண்டும்?
கீதா பென்னெட் |