தேர்ந்தவன் வெல்வான்! தொழில் தேர்ச்சி இல்லாதான் தோற்பான்!!
"எஸ் ஹவ் மே ஐ ஹெல்ப் யூ?" ஒட்டவைத்த புன்சிரிப்போடு, ரோபோபோல அந்த ரிசப்ஷன் பதுமை கேட்டாள்.
"வந்து, வந்து, இங்க ஒருத்தங்களை பாக்கணும்."
"யாரைப் பார்க்கணும்?" நுழைவுப் பதிவேட்டை நீட்டியவாறே கேட்டாள்.
"சரியா தெ.. தெரியாது. அவங்க இங்கதான் வேலை பண்றாங்கனு நெனைக்கிறேன். அவங்க பேர் கேந்திரா."
பெயரைக் கேட்டதும் ரிசப்ஷனிஸ்ட் சேரிலிருந்து முள் குத்தியதுபோல படக் என்று எழுந்து, "வெல்கம் டு கேந்திரா மோட்டார்ஸ் மிஸ்டர் பரத்" என்றாள். அவளுடைய பதற்றம் இப்போது பரத்தை அதிர்ச்சியாகத் தொற்றிக்கொண்டது.
"என் பெயர் உங்களுக்கு எப்படித் தெரியும்? அமேசிங்!"
"கேந்திரா மேடம் நீங்க அவங்களைத் தேடி வருவீங்கன்னு சொன்னாங்க. ஷி வாஸ் எக்ஸ்பெக்டிங் யூ. அவங்க போர்டு மீட்டிங்க்ல இருக்காங்க. உங்களை அவங்க ரூம்ல வெயிட் பண்ணச் சொன்னாங்க. விசிட்டர் என்ட்ரி போட்டுட்டுப் போகலாம், வாங்க" என்று இன்னும் பணிவோடும் குழைவோடும் வரவேற்றாள்.
பரத்துக்கு "ஷி வாஸ் எக்ஸ்பெக்டிங் யூ" என்ற வார்த்தைகளுக்கு அப்புறம் அவள் சொன்ன எதுவும் காதில் விழவில்லை. அவளைப் பின்தொடர்ந்து பதினாறாவது மாடியில் கேந்திராவின் அலுவலக அறைக்குள் நுழைந்தான். பிரமிப்பாக இருந்தது. அவன் மொத்த வீட்டு சைசுக்கு கேந்திராவின் அலுவலக அறை இருந்தது. விசிட்டர்கள் உட்காருவதற்கு, அந்தரங்க காரியதரிசிக்கு, பிரத்தியேக மீட்டிங்குகளுக்கு என்று தனித்தனியாக ஏற்பாடுகள் அந்த அறையை ஒட்டி அமைந்திருந்தன. பரத்தை வரவேற்பறையில் உட்கார வைத்துக் குளிர்பானம் கொடுத்துவிட்டு, "மேடம் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துருவாங்க, நான் அவங்களுக்கு டெக்ஸ்ட் பண்ணிடறேன். உங்களுக்கு வேற ஏதாவது தேவைன்னா இந்த ஃபோன்ல 7 டயல் பண்ணுங்க" என்று இன்னும் மிரட்சியிலிருந்து விடுபடாத பரத்திடம் சொல்லி, காற்றில் கரைவது போல, அந்த ரிசப்ஷனிஸ்ட் லிஃப்டில் மறைந்து போனாள்.
"கேந்திரா என்ன ஒரே டென்ஷன்? சில் அவுட் யா. இதெல்லாம் நாம காலேஜ் ப்ராஜெக்ட் அசைன்மெண்ட் பண்ற மாதிரிதான்."
"இல்லை வினய், திஸ் இஸ் சம்திங் டிஃபரென்ட். இது வேற ஒரு பரிட்சை. அடுத்த பத்து வருஷத்துக்கான ப்ரபோசலை திடீர்னு ஒருநாள்ல நாம குடுப்போம்னு நிச்சயம் அப்பாவோ, போர்டோ எதிர்பார்க்கலை. இட்ஸ் இம்பாசிபிள். ஆனா அவங்க ஏன் இந்த டெஸ்டை நமக்கு வெச்சிருக்காங்கனு எனக்குப் புரியலை. உனக்குப் புரியுமானு பாத்தா நீ அதைபத்தி எல்லாம் யோசிக்கவே இல்லைன்னு தோணுது."
"இந்தக் கம்பெனியோட மொத்த ஜாதகத்தையும் என் அனாலடிக் டேடாபேஸ்ல போட்டு, இதுவரை இருந்த வளர்ச்சி, வீழ்ச்சி இனிமே எப்படி ட்ரெண்ட் இருக்கும் எல்லாம் அனலைஸ் பண்ணி வெச்சிருக்கேன். இந்தியாவுக்கு வெளிலே, ரொம்ப மிஞ்சிப்போனா சவுத் ஏஷியாவுல நம்ம ப்ராடக்ட்ஸை நம்பர் ஒன்னா ஆக்கலாம். அதுக்குத் தேவை நல்ல உற்பத்தி திட்டம். நஷ்டமாகுற ப்ராடக்ட்சை உற்பத்தி பண்றதைத் தூக்கிட்டு, நல்ல மார்க்கெடிங் திட்டத்தோட லாபம் தர்ற ப்ராடக்டை மட்டும் விக்கணும். இதுல, இருபது சதவீதம் ஆள் குறைப்பும் பண்ணிடமுடியும். ரெண்டு வருஷத்துல ஸ்டாக் மதிப்பு 100% மேல போயிடும்."
கேந்திரா அசந்து போய்விட்டாள். வினய் இப்படித்தான் விளையாட்டுத்தனமாகவே, செய்ய வேண்டியதைச் செய்துவிடுவான். அவன் பெரிதாக முயற்சி எடுப்பதுபோலத் தெரியாது, ரொம்ப மெனக்கெடுவதும் கிடையாது. நிச்சயம் நாளைய தேர்வுக்கு அவன் அவளை முந்திவிட்டான். "ஐ எம் இம்ப்ரெஸ்ட் வினய். ஆல் தி பெஸ்ட். நீ சொன்ன ப்ளான் நிச்சயம் செயல்படுத்தக்கூடியது தான். ஆனால் இது ரொம்ப கிட்டப்பார்வை திட்டமா இருக்கு. ரெண்டு வருஷத்துல பெரிய லாபம் கிடைக்கும்னு சொன்னது சரிதான், ஆனா இது நிரந்தர வளர்ச்சியைப் போக்கிடும். நம்ம போட்டி கம்பெனிகள் மூணே வருஷத்துல நம்மளை தூக்கி சாப்டுடுவாங்க."
"அதை அப்ப பாத்துக்கலாம், இந்த ப்ளானை நான் எப்படி ப்ரெசண்ட் பண்றேன்னு பாரு. வேணும்னா இதை நாம ரெண்டு பேரும் சேந்து ஒரே ப்ளானா ப்ரெசண்ட் பண்லாமா?"
"இல்லை வினய், தாங்க்ஸ். அப்பா ஒத்துக்க மாட்டார். தவிர நான் இந்த ப்ரபோசலை மனசார ஒத்துக்கலை."
"ஓகே பேப்ஸ் டேக் கேர். என்று ஐரோப்பியர் பாணியில் அவளை மெலிதாக அணைத்து கன்னத்தை ஒத்தினான். அப்போது கேந்திராவின் செல்ஃபோனில் செய்தி வந்தது: "மிஸ்டர் பரத் உங்களுக்காகக் காத்திருக்கிறார்." கேந்திரா அவசர அவசரமாக, பதினாறாவது மாடிக்கு லிஃப்டில் இறங்கினாள்.
போர்டு மீட்டிங்க் முடிந்தவுடன் மற்ற டைரக்டர்கள் விடைபெற்றுப் போனபிறகு, கம்பெனி செக்ரடரி வேதாந்தம், விஷ்வனாத் மற்றும் கோபால்ரத்னம் மட்டும் தங்கள் பிரத்தியேக மீட்டிங்கைத் தொடர்ந்தனர்.
"விஷ்வா, நானே எதிர்பார்க்கலை இது என்ன 24 மணிநேர விஷப்பரிட்சை. பசங்க தேறுவாங்களா?"
"கோபால் அவங்க நம்ம பசங்க. என் எதிர்பார்ப்பு சரின்னா, அவங்க நிச்சயம் ஜெயிப்பாங்க. இது ஒரு கேம். என்ன வெளையாட ரெடியா? என்ன வேதாந்தம் நீங்களும் இந்த கேமுக்கு தயாரா?" என்றபடி அவரைச் செல்லமாகத் தட்டினார்.
விஷ்வனாத்தை ரொம்பகாலம் அறிந்தவராதலால் எந்தச் சலனமும் காட்டாமல் அடுத்து அவர் என்ன சொல்லப்போகிறார் என்று வேதாந்தம் காத்துக்கொண்டிருந்தார். முதலாளி வர்க்கத்தை உள்ளும் புறமும் அறிந்தவர். முதலாளி தோளில் கை போடுகிறாரே என்று நாம் முதலாளி தோளில் திரும்பக் கைபோடக் கூடாது என்பதை நன்கு அறிந்தவர். "நீ வெளையாடாம விஷயத்தை சொல்லுப்பா" என்றார் கோபால் ரத்னம்.
"இனிமே நாம பேசப்போறது நம்ம மூணு பேருக்குள்ள மட்டும்தான் இருக்கணும். வேற யாருக்கும் தெரியக்கூடாது. நாம ரெண்டு பேரும் இந்தக் கம்பெனி இன்னும் பத்து வருஷத்துல என்ன பண்ணனும்னு ஒர் ப்ரபோசல் மூணு மாசம் முன்னால ஜெனிவாவுல தயார் பண்ணினோமே நினைவிருக்கா?"
"யெஸ் ரொம்ப ரகசியமா இருக்கணும்னு, விடுமுறைல போறோம்னு சொல்லிட்டு, ரெண்டு வாரம் மாஞ்சு மாஞ்சு ஸ்விட்சர்லேண்டுல பூட்டின அறைக்குள்ள உக்காந்து வேலை பண்ணினோமே. அதனாலே தான் நீ ஏன் கேந்திராவையும், வினயையும் அதே எக்சர்சைஸை அதுவும் ஒரே நாளில பண்ணச் சொன்னேனு எனக்குப் புரியலை."
"அவசரப்படாதே. நாம அந்த ப்ரபோசல்படி என்ன முடிவுக்கு வந்தோம்?"
"செலவுகளைக் குறைக்கறது, லாபகரமான பொருளை விக்கிறது, இந்தியா மார்க்கெட்டை முரட்டுத்தனமா குறிவெச்சு மொத்தமா வளைக்கிறது எல்லாம் பேசிட்டு, கடைசில இதெல்லாம் வழக்கமான முயற்சிகள்னு ஒதுக்கினோம்."
வேதாந்தத்துக்கு இப்போது இவர்கள் சம்பாஷணையில் ஆர்வம் வந்தது. "ஒதுக்கிட்டு?"
"டெலிகாம் துறைல ஐஃபோன், ஆண்ட்ராயிடு மாதிரி, சோஷியல் மீடியாவுல ஃபேஸ்புக் மாதிரி ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரில அதுலயும் எஞ்சின் தயாரிப்புல புயல்மாதிரி ஒரு புது ப்ராடக்டை கொண்டுவந்து மொத்த உலக மார்கெட்டையும் நம்ம பக்கம் திருப்பணும். அதுக்கு நாம ஆர் அண்ட் டில நிறைய முதலீடு பண்ணி, நம்முடைய நேரடி கவனிப்புல இன்னும் ஒரே வருஷத்துல புது ப்ராடக்டை லாஞ்ச் பண்ணனும்னு தீர்மானிச்சோம்."
"கரெக்ட் கோபால், எனக்கு செய்ததையே செய்துகிட்டு இந்த கார்ப்பரேட் ஸ்டாக்மார்க்கெட் பரமபத விளையாட்டு அலுத்துடுச்சு. இதுக்கெல்லாம் எத்தனையோ பேர் வந்துட்டாங்க. நாம படிப்பு முடிச்சுட்டு வெளில வந்தப்ப எவ்வளவு சாதனை வெறி நமக்குள்ள இருந்தது, ஞாபகம் இருக்கா?"
ஒரு வினாடி விஷ்வனாத்துக்கும் கோபால்ரத்னத்துக்கும் தங்கள் இளமைப்பருவமும், சிந்தனை வேகமும் மனதுக்குள் ஓடி முகத்தில் ஒரு பிரகாசம் தோன்றியது.
"அதையெல்லாம் இந்த கார்ப்பரேட் நிர்வாகச் சுழல்ல சிக்கிட்டு தொலைச்சிட்டமே. வருஷா வருஷம் புது எஞ்சின் கொண்டுவரோம். ஆனால் சும்மா புதுப்பேரு, தோற்றத்துல சின்ன மாற்றம், விலை மாற்றம் இப்படித்தானே நகாசு பண்றோம். 1900ம் வருஷம் ஃபெர்டினண்ட் ஃபோர்டு முதல் ஹைப்ரிட் எஞ்சின் கண்டுபிடிச்சார். ஆனா 1997ம் வருஷம்தான் மக்கள் டொயோட்டா மூலமா ஹைப்ரிட் என்ஜின் பொருத்தின வண்டியை உபயோகப்படுத்த முடிஞ்சது. கிட்டத்தட்ட ஒரு செஞ்சுரி காத்திருக்க வேண்டி இருந்தது. 75% எரிபொருளை சிக்கனம் பண்ற, எந்த எரிபொருளையும் ஏத்துக்கற ஒரு எஞ்சினை நாம உருவாக்கணும். நான் இதுல நேரடியா முனைஞ்சாதான் இதைச் சாதிக்கமுடியும்."
"கான்செப்ட் நல்லாத்தான் இருக்கு, ஆனா இப்ப தினப்படி நிர்வாகம், இருக்கிற தயாரிப்பு, விற்பனை, இன்வெஸ்டர் கான்ஃபரன்ஸ் இதுக்கே நமக்கு நேரம் போதலையே. எப்படி நாம புது எஞ்சின் டிசைன், ஆராய்ச்சியை பாத்துக்கறது?"
"நான் நாளைக்கு என் மேனேஜிங்க் டைரக்டர் போஸ்டை ரிசைன் பண்ணப்போறேன். எனக்கடுத்து அந்தப் பதவியை நீ எடுத்துக்கணும். ஆனா, உடனடியா செகண்ட் இன் கமேண்ட் யாருன்னும் டிசைட் பண்ணி உன் போஸ்டை அசைன் பண்ணனும்."
கோபால்ரத்னத்துக்கு எப்படி அதை எடுத்துக்கொள்வது என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் படிப்புமுடித்து, ஒரே மாதிரி துறையில் முன்னுக்கு வந்தாலும், விஷ்வனாத்தின் ஆளுமையும் சாதுர்யமும் அவருக்கு இல்லாததால் எப்போதும் இரண்டாம் நிலையிலேயே இவ்வளவு காலம் இருக்கவேண்டி வந்தது. அதை கோபால்ரத்னம் சரியான முறையில் எடுத்துக்கொண்டாலும், அவருக்கும் விஷ்வனாத்துக்கும் இருந்த வித்தியாசத்தை அவருக்கு மிகவும் வேண்டப்பட்டவர்கள் சமயத்தில் குத்திக்காட்டாமல் இல்லை. ஆகவே எதிர்பாராமல் வந்த இந்த நம்பர் 1 பதவி அவருக்கு நம்பமுடியாத அதிர்ச்சியாகவே இருந்தது.
"இதை எப்படி எடுத்துக்கறதுனு தெரியலை. ஆனால் இது ஒரு குறுகியகால ஏற்பாடுனா நான் சம்மதிக்கிறேன். சரி, என் போஸ்டை யாருக்கு குடுக்கறது?"
"நல்ல கேள்வி, அதுக்குத்தான் கேந்திராவுக்கும், வினய்க்கும் இந்த பரிட்சையை வெச்சேன்."
"புரியலை."
"நாம தீர்மானம் செஞ்சு வெச்சிருக்கிற மாதிரியே, புது ப்ராடக்ட் தயாரிக்கிறது, அதுக்கான இன்வெஸ்ட்மெண்ட், ஃபோகஸ் இதெல்லாம் யாருடைய ப்ரபோசல்லை அப்படியே இருக்கோ, அவங்களுக்கு உன்னோட போஸ்டை குடுக்கலாம்னு நான் நினைக்கிறேன். உன்னுடைய சம்மதம் தேவை."
"நல்ல ஐடியா. ரெண்டு பேருமே நாம நெனைக்கிற மாதிரி ப்ரபோசல் குடுக்காட்டி?"
"திங்க் பாசிடிவ். நிச்சயம் யாராவது ஒருத்தர் நாம யோசிச்ச மாதிரி யோசிப்பாங்கனு தோணுது. அதை ஒரே நாள்ல யோசிச்சு, நல்லா ப்ரெசன்டும் பண்ணினா, நிச்சயம் இந்த கம்பெனியோட அடுத்த லீடரா வர்ற தகுதி அவங்களுக்கு இருக்குனு தெரிஞ்சிடும். அது வினயோ? கேந்திராவோ? இது நமக்குள்ள சீக்ரட்டா இருக்கணும். அப்பதான் இது நிஜமான டெஸ்டா இருக்கும்" கண் சிமிட்டினார் விஷ்வனாத்.
தான் தலைமைப் பொறுப்பு ஏற்பதைவிட, தன் மகன் தனக்குப் பிறகு தலைமைப் பதவிக்கு வருவதற்கான சாத்தியம் இருப்பதை நினைத்து கோபால்ரத்னம் மேலும் மகிழ்ந்தார்.
"இட் இஸ் எ டீல்" என்றார் கோபால் ரத்னம்.
"வேதாந்தம், என்னோட ரெசிக்னேஷன் ஃபார்மாலிடிஸ், வேண்டிய அப்ரூவல் இதெல்லாம் ரொம்ப கான்ஃபிடென்ஷியலா ரெடி பண்ணுங்க. அப்படியே ஒரு அனலிஸ்ட்ஸ் மீட்டிங் ஏற்பாடு பண்ணுங்க."
"யெஸ் சார், வில் டூ."
விஷ்வனாத் மானசீகமாக உலக வரைபடத்தில் இன்னும் சில வருஷங்களில் பரந்து விரியப்போகும் கேந்திரா மோட்டார்ஸ் சாம்ராஜ்யத்தை அப்போதே பார்த்தார். போர்டு ரூமுக்கு வெளியே இன்னும் விஷ்வனாத் சொன்ன தகவல்களை முழுதும் ஜீரணிக்காமல் கொஞ்சம் மூச்சை உள்ளிழுத்து நிதானத்துக்கு வர திறந்த பால்கனிக்குள் நுழைந்தார் கோபால்ரத்னம்.
"ஹல்லோ கோபால், என்ன ரொம்ப டென்சா இருக்கீங்க," பிடித்துக்கொண்டிருந்த விலை உயர்ந்த சிகரெட்டின் மிச்சத்தைக் காலால் அழுத்தியவாறே, சக்ரவர்த்தி அவரை வரவேற்றார்.
"ஹலோ சக்கி, என்ன இன்னும் இங்கேயே இருக்கீங்க?"
"ஜஸ்ட் ரிலாக்சிங், கெளம்பவேண்டியதுதான். உங்களை பாத்ததும் நல்லதுதான். நான் நாளைக்கு போர்டு மீட்டிங்க் வரலை. இன்னிக்கே பேங்களூர் போறேன்."
போர்டு மீட்டிங்கில் சக்ரவர்த்தியை சட்டென்று விஷ்வனாத் வெட்டிவிட்டதை மனதில் வைத்துத்தான் அப்படி அவர் சொல்கிறார் என்று நினைத்து, "விஷ்வா சொன்னதை சீரியசா எடுத்துக்காதீங்க சக்கி. உங்களுக்கு அவரை நல்லா தெரியுமே" என்றார்.
"அதெல்லாம் இல்லை எனக்கு வேலை இருக்கு. தவிர மீட்டிங்க்ல இருந்து மட்டும் என்ன செய்யப்போறோம். ஆனா நான் உங்க வெல்விஷர். என்ன சொன்னீங்க எனக்கு விஷ்வாவை நல்லா தெரியுமேவா? வெரி ட்ரூ. எனக்கு அவரை நல்லா தெரியும். உங்களுக்குத்தான் அவரை நல்லா தெரியலைனு தோணுது."
கோபால்ரத்னம் யாரையும் முகத்தில் அடித்ததுபோல பேசிவிடுபவர் இல்லை. எல்லாரிடமும் அனுசரிக்கும் அவர் சுபாவம் பல நேரங்களில் அவருக்கு பிடிக்காத, ஒத்துக்கொள்ளாத விஷயங்களைக் கூட மற்றவர் அவர் முகத்துக்கு நேரே பேச வைத்துவிடும். சக்ரவர்த்தி ஆசாமிகளை நன்கு எடைபோடத் தெரிந்தவர். கோபால்ரத்னத்தின் உள்ளத்தில் கொஞ்சம் கொஞ்சமாக சந்தேக ஊற்றைக் கிளப்பினார். "எங்களுக்குதான் போர்டுல பேச்சு எடுபடற அளவு ஷேர் ஹோல்டிங் இல்லை. நீங்க விஷ்வாவுக்கு சமமான கோப்ரமோடர். ஆனா எப்பவும், எல்லா டெசிஷனும் அவர்தான் எடுக்கறார். இதுவரை லாபத்துல போயிட்டிருக்கு சரி. இதைவிட லாபத்துல போகற வாய்ப்பு இருக்கே, அதை யார் சொல்றது? உங்களை கடைசிவரை ரெண்டாவது எடத்துல வெச்சிட்டு, அடுத்து அவர் பொண்ணு கேந்திராவை கொண்டு வந்துடுவார் பாருங்க."
கோபால்ரத்னத்துக்கு வாய்வரை வந்துவிட்டது, "என் விஷ்வாவை எனக்குத் தெரியும். நான் நாளைலேருந்து இந்த கம்பெனியோட நம்பர் 1. பேச வந்துட்ட" என்று சொல்ல நினைத்தார். ரகசியம் காப்பாற்றப்பட வேண்டும் என்று "இதெல்லாம் உங்க அனாவசிய கற்பனை. அப்படியே கேந்திராவை கொண்டு வந்தாலும், அவளும் என் வீட்டுப் பெண்தான்."
"குட் ஜோக். என்ன வினய், கேந்திரா கல்யாணம் ஆச்சுன்னா கண்ட்ரோல் எல்லாம் உங்களுக்கு வரும்னு நெனைக்கறீங்களா? ஐ ஹேவ் மை ஓன் டவுட் அபவுட் தெயர் மேரேஜ். அப்படியே நடந்தாலும் வினய், விஷ்வா, கேந்திரா கண்ட்ரோலுக்குப் போயிடுவான். சரி நான் சொல்றதை நீங்க நம்ப வேண்டாம். லெட் அஸ் ப்ளே திஸ் கேம்" சிரித்தவாறே மீண்டும் ஒரு சிகரெட்டை பற்றவைத்தார். "இவரும் ஒரு கேமா?" என்று கோபால் அசுவாரஸ்யமாக அவரைப் பார்த்தார்.
நாளைக்கு விஷ்வா, கேந்திராவோட ப்ரபோசலை அப்ரூவ் பண்ணி அவளை அடுத்த லீடரா அறிவிப்பார்னு நான் சொல்றேன். அப்படி நடந்தா, அடுத்து உங்க ஷேர் ஹோல்டிங்சையும், எதிர்காலத்தையும் காப்பாத்திக்க என்ன பண்ணனும்னு என்கிட்ட நீங்க கேக்கணும். நாளை நைட்டே, எனக்கு ஃபோன் பண்ணனும். நான் சொல்றதுபோல நாளைக்கு நடக்கலைனா, இந்த போர்டுலேருந்து நான் ரிசைன் பண்ணிட்டு, என்னோட மொத்த ஷேர்சையும் உங்களுக்கு வித்துடறேன்." யோசிக்காமல், "இட்ஸ் எ டீல்" என்று சுரத்தில்லாமல் சொன்னார் கோபால்ரத்னம்.
(தொடரும்)
சந்திரமௌலி |