இசையமைப்பாளர், இசை ஆசிரியர், இசைக்கலைஞர், பாடகர், இசை ஆல்பங்கள் தயாரிப்பவர் என்று பல்வேறு முகங்களை கொண்டு விளங்கும் கன்னிகேஸ்வரன் அடிப்படையில் ஒரு தகவல் தொழில்நுட்ப வல்லுநர். தற்போது அமெரிக்காவில் சொந்தமாக 'Data Warehousing' துறையில் கன்சல்டிங் செய்கிறார். இசையின் மேல் இவருக்கு ஏற்பட்ட ஈடுபாட்டினால் நம் இந்திய இசையுடன் மேற்கத்திய இசையை இணைத்து பல்வேறு இசை நாடகங்களைத் தயாரித்து வழங்கியிருக்கிறார். இவற்றை இந்தியர்கள் மட்டுமல்லாமல், அமெரிக்கர் களும் ரசிக்கக்கூடிய வகையில் அமைப்பது தான் இவரது வெற்றி.
கன்னிகேஸ்வரன் இந்திய மண்ணின் பாரம்பரியத்தை மேற்கில் பரப்பும் ஒரு பாலமாகத் திகழ்கிறார் என்று சொல்லலாம்.
'தென்றல்' வாசகர்களுக்காக அவரைச் சந்தித்து உரையாடியபோது...
கே: நீங்கள் ஒரு தகவல் தொழில்நுட்ப மாணவர். எப்படி உங்களுக்கு இசைத் துறையில் ஈடுபாடு ஏற்பட்டது?
ப: பள்ளிக்கூடம் படித்துக் கொண்டிருக்கும் போதே கர்நாடக சங்கீதத்தை கற்றுக் கொள்ள ஆரம்பித்தேன். வாய்ப்பாட்டு, வயலின் கற்றுக் கொண்டேன். ஐ.ஐ.டி.யில் படிக்கும் காலத்தில் கிதார் போன்ற கருவிகளை வாசிப்பதில் ஆர்வம் ஏற்பட்டு அதையும் கற்றுக் கொண்டேன். அதே சமயத்தில் மெல்லிசைக் குழுவிலும், கல்லூரி விடுதியில் நடைபெறும் மெல்லிசை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றுப் பாடிய அனுபவமும் நிறைய உண்டு.
பிறகு மேல்படிப்பிற்காக அமெரிக்காவிற்கு வந்தபின் இசையில் ஆர்வம் அதிகரித்தது. திரைப்படப் பாடல்கள் என் ஆர்வத்தை மேலும் தூண்டின. மேற்கத்திய இசையைக் கேட்கும் வாய்ப்பும் எனக்குக் கிட்டவே, அதிலும் ஈடுபாடு ஏற்பட்டது. மேற்கத்திய இசையைக் கற்றுக் கொண்டேன். மெல்ல மெல்ல நானே இசையமைக்கவும் கற்றுக் கொண்டேன். இப்போது சின்சின்னாட்டி பல்கலைக்கழக இசைக்கல்லூரியில் இந்திய இசைக் கோட்பாடு மற்றும் வரலாறு என்ற பட்ட நிகர்நிலைப் பயிற்சிக்குக் கற்பிக்கிறேன்.
கே: Choir Group என்ற அமைப்பை எப்போது தொடங்கினீர்கள்?
ப: 1991-92 காலகட்டத்தில் என் முதல் இசை ஆல்பமான 'திருவரங்கம்' வெளி வந்தது. நாலாயிர திவ்யபிரபந்தத்தில் உள்ள பாசுரங்களுக்குப் புதுமையான வகையில் இசையமைத்துப் பாடினோம். அதற்குப் பாராட்டுக் கிடைத்தது.
அந்த ஆல்பம் வெளியான பிறகு நான் வசிக்கும் சின்சின்னாட்டியில் என்னைச் சுற்றியிருந்த இசை ஆர்வமிக்க நண்பர் களுடன் சேர்ந்து Choir Group-ஐ ஆரம்பித்தேன். நோக்கம் இசைக்கான பயிற்சி வகுப்புகளை நடத்துவதுதான். எதிர்காலத்தில் நாடகங்கள் போடும் போது அவர்களை மேடையில் தைரியமாகப் பாடுவதற்குத் தயார் செய்தோம். 1992-ல் நாங்கள் இதை ஆரம்பிக்கும் போது வெறும் 20 அங்கத்தினர்கள் தான் இருந்தனர்.
கே: உங்கள் தயாரிப்பில் உருவான நிகழ்ச்சிகள் பற்றிச் சொல்லுங்கள்...
ப: 1994-ம் ஆண்டு என்று நினைக்கிறேன். முதன்முதலாக 'பசந்த்' (Basant) என்கிற மிகப் பெரிய Musical Theatre Production ஒன்றை தயாரித்தோம். 'பசந்த்' என்றால் தமிழில் வசந்தகாலம் என்று அர்த்தம். புகழ்பெற்ற பாலே (ballet) மற்றும் கிராமிய நடனங்களை எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் நடன இயக்குநர்களைக் கொண்டு காட்சிகளை வடிவமைத்தோம். இதுதான் எங்கள் முதல் பெரிய தயாரிப்பு. நல்ல வரவேற்பு கிடைத்தது.
இதற்குக் கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து 1996-ல் 'தி புளு ஜுவல்' (The Blue Jewel) என்ற நிகழ்ச்சியை சின்சின்னாட்டியில் (Cincinnati) உள்ள சர்ச் ஒன்றுடன் இணைந்து தயாரித்தோம். சுற்றுச்சூழல் என்கிற கருவை எடுத்துக் கொண்டு, மேற்கத்திய இசையில் நம் இந்திய யுக்திகளைப் பயன்படுத்தி அந்த நிகழ்ச்சியைத் தயாரித்து அளித்தோம். சர்ச்சில் இருந்து 30 பேர் எங்களுடன் இந்நிகழ்ச்சியில் பாடினார்கள்.
இதைத் தயாரிக்க நான்கு மாதங்கள் ஆயின. நல்ல வரவேற்புக் கிடைத்ததைத் தொடர்ந்து இதையே 1997 மற்றும் 1999-ம் ஆண்டுகளிலும் நடத்தினோம்.
கே: சமீபத்தில் நீங்கள் தயாரித்து அளித்த 'சாந்தி' க்கு வரவேற்பு எப்படி இருந்தது?
ப: 'சாந்தி' எங்களின் மற்ற இரண்டு தயாரிப்புகளைவிடப் பெரியது. சாந்தி ஆரடோரியோ (Oratorio) போன்றது என்று சொல்லலாம். இசை, சமுதாய நோக்கு மற்றும் தத்துவப் பின்னணியைக் கொண்டது. மொத்தம் 140 பேர் இந்நிகழ்ச்சியில் பாடினார்கள். பாடகர்களில் 90 பேர் இந்தியர்கள். 50 பேர் அமெரிக்கர்கள். முதலில் நிறையப் பேருக்கு - முக்கியமாக அமெரிக்கர்களுக்கு - எங்கள் தயாரிப்புப் பற்றி மின்னஞ்சல்கள் அனுப்பினோம். என்னுடன் கேதரைன் ரோமா என்பவர் உதவியாக இருந்தார். நான் இசையமைக்க அவர் நடத்தினார். பெரும் புகழ்பெற்ற இந்துஸ்தானி இசைக் கலைஞர் லக்ஷ்மி சங்கர் அவர்கள் சாந்தி நிகழ்ச்சியில் முதன்மைப் பாடகராக பாடியது எங்களின் பெரும் பாக்கியம்.
அவர் சிலருடன் இதுபற்றித் தொடர்பு கொண்டார். அவர்களிடம் இருந்து நல்ல பதில் கிடைத்தது. அதன் மூலம் நிறையப் பேர் வந்தார்கள். எங்கள் முதல் ஒத்திகை பிப்ரவரி 2004-ல் நடந்தது. நாங்கள் நாற்பது ஐம்பது பேரைத்தான் எதிர்பார்த்தோம். ஆனால் அன்றைக்கு சுமார் 80 பேர் வந்தார்கள். அமெரிக்கர்கள் ஒரு புதிய உத்தியை எடுத்துக் கொண்டால் அதில் முழுமையாகத் தங்களை ஈடுபடுத்திக் கொள்ளும் குணம் கொண்டவர்கள். அவர்களுக்கு வடமொழி உச்சரிப்பைத் தனியாக சொல்லிக் கொடுத்தோம். அவர்களிடம் இசையைப் பொறுத்தவரை எந்தவிதச் சிக்கலும் இல்லை. எழுதிக் கொடுத்துவிட்டால் பாடிவிடுவார்கள்.
இரண்டு வெவ்வேறு கலாசாரம் கொண்ட வர்கள். ஒரே பாட்டை இரண்டுவிதமாகக் கற்றுக் கொள்கிறார்கள் என்பது எனக்கு ரொம்பச் சுவையான அனுபவமாக இருந்தது. அதற்குப் பிறகு கான்சப்ட். எதுவாய் இருந்தாலும் நமக்குத் தம்பூரா பின்னணியில் ஒலிக்க வேண்டும். அது அவர்களுக்குக் காது குடைவது போல் இருக்கும். இது எங்களுக்கு வித்தியாசமான அனுபவம். இதற்கிடையில் நடுவில் எல்லோரும் சேர்ந்து ஒரு மதிய உணவு ஏற்பாடு செய்தோம். நம்ம ஊர் சாப்பாட்டை நாங்கள் செய்து கொண்டு வருவோம். அமெரிக்கர்கள் அவர்களின் உணவைத் தயாரித்து வருவார்கள். இந்த ஊடாட்டம் ரொம்ப நன்றாக இருந்தது.
பிறகு உடையலங்காரம் என்று வருகிற போது அமெரிக்கர்களாய் இருந்தாலும், இந்தியர்களாய் இருந்தாலும் சரி எல்லோரும் ஒரே நிற ஆடை அணிவது என்று முடிவு செய்தோம். ஆண்கள் மேற்கத்திய மரபுப்படி கறுப்பு உடை அணிந்தனர். பெண்கள் அனைவரும் ஒரே நிறப் புடவை அணிய வேண்டும் என்பதற்காக என் மனைவி சென்னையிலிருந்து அத்தனை புடவைகளையும் வாங்கி வந்தார். அமெரிக்கப் பெண்களுக்குப் புடவை கட்டுவதற்கான பயிற்சி அளிக்கப் பட்டது. இதெல்லாம் மிகச் சுவையான நிகழ்ச்சிகள். பாடுவதற்காக வருகிறார்கள், அங்கே ஒருவருக்கொருவர் நட்பு உருவாகிறது. முக்கியமாக நமது கலாசாரத்தை அவர்கள் அறிய வழி ஏற்படுகிறது.
'சாந்தி'யின் கரு அமைதி. இந்த உலகம் தோன்றிக் கோடிக்கணக்கான ஆண்டுகள் ஆகிவிட்டன. இதில் மனிதனுடைய ஆயுள்காலம் சுமார் 80 ஆண்டுகள்தாம். உலகத்தையும், அதன் தோற்றத்தையும் பார்த்து நாம் வியந்து நிற்கிறோம். நாமும் இதில் ஒரு பகுதிதான் என்கிற பிரக்ஞை நமக்குள் ஏற்படும்போது நம்முள் ஓர் அமைதியும், ஆச்சர்யமும் உண்டாகிறது. அமைதி நம்முள் இருக்கும் போது கற்பனை பொங்கிப் பாய்கிறது. நாம் வேறு, இந்த உலகம் வேறு என்று பார்க்கிற போது பிரிவினை உருவாகும்.
நாம் எந்தமதத்தை அடிப்படையாகக் கொண்டு வாழ்ந்து வந்தாலும் அந்த மத நம்பிக்கைகள் நம்மை இந்த உலகத்தோடு தான் இணைக்கின்றன. சில நேரங்களில் மதங்களினாலேயே நம்முள் பிரச்சனைகள் ஏற்படுகிறது. சாந்தி என்னும் மனநிலைமை எது? சாந்தி இல்லாமல் இருக்கும் போது நடக்கிற நிகழ்வுகள் என்ன? இவற்றை ஆராய்ந்தது 'சாந்தி'.
இந் நிகழ்ச்சியின் போது ஆடிட்டோரி யத்தில் நாங்கள் 7 புரொஜக்டர்களை வைத்து நமது கோயில் கோபுரங்கள், சிற்பங்களையெல்லாம் காட்டினோம். இதைப் பார்த்த அமெரிக்கர்கள் "இந்தியா இப்படி இருக்கும் என்பது எங்களுக்கு தெரியாது" என்று சொன்னது நிகழ்ச்சியின் வெற்றி என்று சொல்லலாம்.
கே: templenet.com என்கிற இணையத் தளத்தை எப்போது உருவாக்கினீர் கள், உருவாக்கத் தூண்டுதல் என்ன?
ப: அமெரிக்காவில் பல்வேறு இடங்களைச் சுற்றிப் பார்க்கிற போது ஆங்காங்கே பல்வேறு நினைவுச்சின்னங்களைக் காண நேரிட்டது. அங்கு ஜனாதிபதி வாழ்ந்த இல்லம் முதல் 100 ஆண்டுகளுக்கு மேலான கட்டிடங்கள் வரை நினைவுச் சின்னங் களாக போற்றிப் பாதுகாக்கப்படுவதை கண்டேன். இங்கு நம் இந்தியாவில் குறிப்பாக நம் சென்னையில் பல வீடுகள் ரொம்பவும் பழமையானவை. இந்தியாவில் உள்ள பல கோயில்கள் ஆயிரம் ஆண்டு களுக்கு மேல் பழமையானவை. இப்படிப் பட்ட பழமைவாய்ந்த விஷயங்களுக்கு உலக அளவில் இதுவரை நாம் எந்தவிதமான விளம்பரமும் செய்தது இல்லை. ஆனால் மேலைநாட்டவர்கள் 150 வருட விஷயங் களுக்கே பெரிய விளம்பரங்கள் செய்து வருவது மட்டுமல்லாமல் அவற்றை நினைவுச் சின்னங்களாகவும் கொண்டாடுகிறார்கள். நாமும் ஏன் நமது புராதனங்களைப் போற்றக் கூடாது என்கிற எண்ணம் எனக்கு ஏற்பட்டது.
உதாரணத்திற்கு எகிப்து பிரமிடுகளின் பூமி என்று எல்லோராலும் அழைக்கப் படுக்கிறது. ஆனால் நம் இந்தியாவைப் பற்றி அமெரிக்காவில் உள்ள 100 பேரிடம் கேட்டு பாருங்கள்... உடனே அவர்கள் சட்டென்று சொல்வது ஏழ்மை, அல்லது அவர்கள் வேலையை இந்தியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள் என்றுதான் சொல்வார்கள். இந்தியர்களைப் பற்றி, இந்தியாவைப் பற்றி அவர்கள் தெரிந்து வைத்திருப்பது அவ்வளவுதான். இந்த அபிப்பிராயத்தை மாற்றி நம் கலாசாரத்தை, பண்பாட்டை, வாழ்க்கை முறையை அவர்களுக்குத் தெரியவைக்க வேண்டும் என்று நினைத் தேன். நம் கோயில்கள் ஆன்மிகத்தை மட்டும் சொல்லாமல் இசை, நடனம், வாழ்முறை என்று பல்வேறு நிலைகளைச் சிற்பங்கள் மற்றும் ஓவியங்கள் மூலம் பேசுகின்றன. இந்தச் செய்தியைப் பிற நாட்டினருக்குக் கொண்டு செல்ல வேண்டும் என்கிற நோக்கில் templenet என்கிற இணையத் தளத்தை 1996-ம் ஆண்டில் உருவாக்கினேன்.
1997-98-ல் சுமார் 11 மாதங்கள் இந்தியா வில் இருந்தேன். அப்போது பல்வேறு இடங்களுக்கு பயணம் செய்து தகவல்கள் சேகரித்து எழுத ஆரம்பித்தேன். பிறகு அமெரிக்கா திரும்பியபின் இணையத் தளத்தைத் மேலும் விரிவாக்கினேன். எட்டு வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டன.
கே: இத்தகைய நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்குவதற்கு உங்களுக்கான நேரத்தை எப்படி ஒதுக்குவீர்கள்...
ப: அலுவலுகத்திற்கு பஸ் அல்லது காரில் செல்லும் நேரத்தில் நிறைய விஷயங்களை சிந்தித்துக்கொண்டு செல்வேன். மற்றவர் களுடன் அந்த நேரத்தில் தொடர்பு கொண்டு என் சிந்தனைகளைச் சொல்வேன். தொடர்ந்து 7 அல்லது 8 மாதங்களுக்குக் கிடைக்கும் நேரத்தில் எல்லாம் அந்த நிகழ்ச்சித் தயாரிப்பிலேயே என் முழுச் சிந்தனையும் செலுத்துவேன். என் குடும்பத்தினரின் சிந்தனையும் முழுக்க முழுக்கத் தயாரிக்க விருக்கும் நிகழ்ச்சியைப் பற்றியே இருக்கும். என் மனைவி என்னுடைய நிகழ்ச்சிகளில் வீணை வாசிப்பார்.
கே: உங்களது சமீபத்திய படைப்பான 'சித்திரம்' (Chitram - A portrait of India) சொல்வது என்ன?
ப: சித்திரம் இன்னும் பல ஊர்களில் நடத்திக் காட்ட வேண்டிய நிகழ்ச்சி. அமெரிக்காவில் உள்ள Wright State University (Dayton, Ohio) எங்களிடம் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்கள் அறிந்து கொள்கிற மாதிரி நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்துத் தரமுடியுமா என்று கேட்டார்கள். அதே நேரத்தில் அந்த நிகழ்ச்சி பொழுது போக்கு அம்சம் கொண்டதாகவும் பயனுள்ள தாகவும் இருக்க வேண்டும் என்றும் சொன்னார்கள். அப்படி உருவானதுதான் 'சித்திரம்'. இந்தியக் கட்டிடக் கலை, ஓவியக்கலை, நடனங்கள், தொழில்நுட்பம், பன்முகக் கலாசாரம், முற்போக்குச் சிந்தனை, 5000 வருடம் பழமை யான ஆனால் வேறு யாருக்கும் காணாத தொடர்ச்சியுடன் விளங்கும் வரலாற்று வளம் பற்றி எல்லாம் இசை மற்றும் நடன வடிவத்தில் காட்டப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் மொத்தம் 20 பேர் நடன மாடுவார்கள். இதிலே பல்லூடகத்தை (மல்டிமீடியா) நிரம்பப் பயன்படுத்தியிருக்கிறோம்.
கே: எதிர்காலத் திட்டம் என்ன?
ப: 'சாந்தி' நிகழ்ச்சியை 'Cincinnati Association for the Arts' என்ற நிறுவனம் - 2600 பேர் அமரக்கூடிய Aronoff Center for the performing Arts என்கிற மாபெரும் கலையரங்கில் மார்ச் 2006ல் வழங்க இருக்கிறது. இது மிகப் பெருமை தரும் விஷயமாகும். 'சாந்தி' நிகழ்ச்சியை வேறு ஒரு இசைக்குழுவுடன் ஆலென்டவுன் பென்சில் வேனியாவில் மேடையேற்றும் முயற்சி நடந்துகொண்டு இருக்கிறது. இதுதவிர 'சித்திரம்' நிகழ்ச்சியையும் இன்னும் சில நகரங்களில் அரங்கேற்ற முயற்சி எடுத்துக் கொண்டுள்ளோம்.
இன்னும் Templenet சம்மந்தமாக எல்லோரும் படிக்கும்படியான ஒரு புத்தகம் வெளிக் கொண்டுவர முயற்சி எடுத்துக் கொண்டிருக் கிறேன். அமெரிக்கர்கள் பெரும்பாலும் பணிபுரியும் நிறுவனங்களில் 'Cultural Diversity Workshops' நடத்தியுள்ளேன். இதன்மூலம் இந்தியாவைப் பற்றிய தவறான நோக்கங்களை அகற்றவும் முடிகிறது. இப்பணியை இன்னும் பெரிய அளவில் செய்ய வேண்டும் என்பது எனது விருப்பம்.
நம்முடைய பராம்பரியம் வளம் மிக்கது. இந்தியா ஒரு பொருளாதார வல்லரசாக மாறிவருகிறது. அது ஞானத்தின் பொக்கிஷமும் கூட. இப்படி இருகலாசாரங்களின் சிறந்த அம்சங்களை இணைத்து இன்னும் வளப் படுத்துவது எப்படி என்கிற அடிப்படைக் கேள்வி 'சாந்தி' போன்ற நிகழ்ச்சிகளில் எழுப்பப் படுகிறது. இத்தகைய 'Best of both the worlds' சிந்தனையை அடுத்த தலை முறையினருக்கு அழுத்தமாகக் கொண்டு செல்ல வேண்டும். அமெரிக்காவில் வாழும் புதிய தலைமுறை இந்தியர்களில் வருங்கால உலகத்தலைவர்கள் எத்தனை பேர் இருக்கிறார்கள் என்பது நமக்கு இன்று தெரியாது.
இந்தியப் பராம்பரிய சங்கீதங்கள் இந்துஸ்தானி, கர்நாடக சங்கீதம் என்கிற பாகுபாடு இன்று நிலவி வந்தாலும் அடிப் படையில் இரண்டும் ஒன்றே. இந்த அடிப்படையே 'ராகவித்யா'. நான் இந்தப் புதிய அணுகுமுறையில் ராகவித்யாவைக் கற்பிப்பதை வடநாட்டவரும் தென்னாட்ட வரும் ஒரே விதமான ஆர்வத்துடன் வரவேற்கின்றனர்.
'ராக வித்யா ஒர்க்ஷாப்' என்று சின்சின்னாட்டியிலும், ஆலன்டவுன் பென்சில்வேனியாவிலும் நடத்தி வருகிறேன். குறிப்பாக ஆலன்டவுனில் மேற்கத்திய இசை பயிலும் இந்திய சிறுவர்களிடம் இந்த ஒர்க்ஷாப் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. முறையாக சங்கீதம் கற்றுக்கொள்ளாதவர் களுக்கும் மரபு இசையை எளிதாக ரசிப்பதற்கும் இது மிகவும் பயன்படுகின்றது. தற்போது மின்னியாபோலிசிலும் இதைப் போன்ற ஒரு செயல்விளக்கப் பட்டறை நடத்த அழைப்பு வந்துள்ளது.
கே: உங்கள் தயாரிப்பில் உருவான ஆல்பங்கள் மற்றும் விருதுகள்...
ப: 'திருவரங்கம்' தவிர 'சபரி', 'பசந்த்', முருகன் மீது 'கந்தா', ஏவிஎம் நிறுவனத்தார் மூலம் 'ஐயப்பன்' ஆகிய இசைத் தொகுப்பு களை வெளியிட்டுள்ளேன். தற்போது 'ராக வித்யா பயிற்சி' என்கிற ஒரு இசைத் திட்டத்தை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளேன். ஒரு வருடத்திற்கு இரண்டு ஆல்பங்கள் கொண்டு வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறேன்.
1998-ம் ஆண்டில் கலைகளுக்கான கவர்னர் விருதுக்கு என்னைப் பரிந்துரைத் தனர். 2003-ம் ஆண்டு ஒஹையோ ஆர்ட்ஸ் கவுன்சில் Individual Artist's Fellowship விருதை அளித்தது. தொடர்ந்து 2004-ம் ஆண்டும் அவர்களே 'சாந்தி' தயாரிப்புக்கு நிதி ஒதுக்கீடு செய்தனர். மேலும் சின்சின்னாட்டியில் உள்ள Fine Arts Fund மூலம் இத்தகைய தயாரிப்புகளுக்கு நிதி உதவி கிடைக்கப்பெற்றது. 1996-ல் சின்சின்னாட்டி நகரம் 'The Blue Jewel' நிகழ்ச்சியை உருவாக்கப் பொருளுதவி வழங்கியது.
கே: இந்தியாவில் நீங்கள் செய்த முக்கியப் பணிகள் என்ன?
ப: இரண்டு பெரிய பணித்திட்டங்களை நான் இந்தியாவில் செய்திருக்கிறேன். அகமதாபாத்தில் 'தர்ப்பணா இன்ஸ்ட்டியூட் ஆ·ப் பைன் ஆர்ட்ஸ்' என்கிற அமைப்பை நடத்திவரும் மல்லிகா சாராபாய் அவர் களுடன் பணியாற்றும் வாய்ப்பு 1997-98ல் கிடைத்தது. அப்போது அங்கு உள்ள இராஜஸ்தானியக் குழுவினருடன் இணைந்து அவர்களது கிராமிய இசை மற்றும் மேற்கத்திய இசை இரண்டையும் கலந்த நவீன இசையை உருவாக்கி, நிகழ்ச்சி ஒன்றைத் தயாரித்தோம். இதற்கு மல்லிகா சாராபாய் நடனவடிமைத்துக் கொடுத்தார். அங்கு நடைபெற்ற விழாவில் 'ஜீவன் தால்' (Jeevan Taal) என்கிற பெயரில் அதை வழங்கினோம். நல்ல வரவேற்பு கிடைத்தது.
அதே காலகட்டத்தில் 'ஆடவல்லானின் ஐந்து சபைகள்' என்கிற பெயரில் நடன நாடகம் ஒன்றைத் தயாரித்தேன். நடராஜருக்குச் சிதம்பரம், திருவாலங்காடு, மதுரை, குற்றாலம், திருநெல்வேலி என்று ஐந்து அரங்கங்கள் இருக்கின்றன. அவற்றைக் கனகசபை, வெள்ளிசபை, ரத்தினசபை, சித்திரசபை, தாமிரசபை என்று சொல்வார்கள். இவை ஐந்தையும் ஆய்வு செய்து வடிவில் வடிவமைத்து நாட்டிய நிகழ்ச்சி தயாரித்தேன். இதற்குக் கலைமாமணி சரஸ்வதி சுந்தரசேன் நடன வடிமைத்துக் கொடுத்தார். பேரூர் நாட்டியாஞ்சலி விழாவில் இதை அரங்கேற்றினோம்.
டெம்பிள்நெட் வலைத்தளம்
கிட்டத்தட்ட 2000 பக்கங்களில் இந்தியாவில் உள்ள பல கோயில்களையும், அவற்றின் வரலாறுகளையும், புராணங் களையும், சிற்ப வேலைப் பாட்டையும் எடுத்துச் சொல்கிறது www.templenet.com
மாநில வாரியாகவும், சமய வாரியாக வும் பல அடையாளங்கள் கொண்ட இத்தளத்தில் செய்திகள் உள்ளன. தேவாரப் பாடல் பெற்ற தலங்கள், ஆழ்வார்களால் துதிக்கப்பட்ட தலங்கள், மிகப் பழமை வாய்ந்த கோயில்கள் ஆகியவை இதில் சிறப்பான இடத்தைப் பெறுகின்றன. இதைத் தவிர கோயில் களுடன் இணைந்த பாடல்களின் ஒலிப்பதிவு போன்ற இதர விஷயங்களும் இங்கே கிடைக்கும்.
தற்போது இதனை நாள் ஒன்றுக்கு மூவாயிரம் பேருக்கு மேல் பார்வையிட்டுச் செல்கிறார்கள்.
சந்திப்பு : கேடிஸ்ரீ தொகுப்பு : மதுரபாரதி |