வேலை இல்லா பட்டதாரி - இது விமர்சனமல்ல!
படத்தின் நிறைகளைப் பற்றி தியேட்டருக்குப் போய் பாத்தவங்கள்லேர்ந்து திருட்டு VCD பாத்தவங்க வரைக்கும் தனுஷ் நடிப்பு சூப்பர், தனுஷ் பாடல் வரிகள் சூப்பர், அனிருத் இசை சூப்பர் இத்யாதி இத்யாதின்னு புகழ்மாலை சூட்டியாச்சு. அவங்க சொல்லாத விஷயம் இது.

நல்லாப் படிக்கற பையனுக்கு நகம் கடிக்கற பழக்கமோ இல்ல பாடம் நடத்தும்போது குறும்பு செய்யற பழக்கமோ இருந்தா அத டீச்சர் பெருசா கண்டுக்க மாட்டாங்க. அந்த மாதிரி இந்த படத்துல சில மோசமாக் கண்டிக்க வேண்டிய குறைகள் இருக்கு. படம் வெற்றிப் படமா அமைஞ்சதாலயோ என்னவோ யாரும் கண்டுக்கல. நாங்க உடுவமா!

உதாரணத்துக்கு சில சகிச்சுக்கவே முடியாத காட்சிகள்:
தண்ணி அடிக்கறதவிடப் பெரிய தப்பு, அந்தப் பழக்கம் இல்லாத ஒருத்தரக் கட்டாயப்படுத்திக் குடிக்க வைக்கறது. இன்னும் கொடுமை அண்ணனே தம்பிக்கு (அதுவும் தம்பிக்கே தெரியாம) கோக்ல மதுவக் கலந்து குடிக்க வைக்கறது. என்ன நியாயம் சொன்னாலும் ஏத்துக்கவே முடியாத காட்சி இது.

கண்றாவி! தன் பையன் பக்கத்து வீட்டுப் பொண்ணோட சில்மிஷம் பண்றத அப்பா பாத்துட்டு சிரிச்சுகிட்டே திரும்பி தன் இன்னொரு பையன்கிட்ட சொல்லிக் கேலி பண்றாராம். சம்பாதிக்க ஆரம்பிச்சுட்டா பையன் என்ன செஞ்சாலும் அப்பாக்கள் கண்டுக்க மாட்டாங்களா என்ன?

கொடுமை! செத்துப்போன தன் அம்மாவின் இதயம் பொருத்தப்பட்ட பொண்ணுகிட்ட, எங்க அம்மாக்கு சிகரட் பிடிக்கறது புடிக்காது. அதனால நீங்க சிகரட் பிடிக்காதீங்கன்னு அட்வைஸ் பண்ணிட்டு, இவர்மட்டும் ரயில் எஞ்சின் மாதிரிப் புகை விட்டுக்கிட்டே, இல்ல புடிச்சுகிட்டே, இருப்பாராம்.

இந்தக் காட்சியெல்லாம் இல்லாம படம் எடுத்திருந்தாலும் இதே வசூல் மழையை இந்தப் படம் குவிச்சிருக்கும்னு யாராவது தனுஷுக்குப் புரியவச்சா நல்லா இருக்கும்.

ஸ்ரீவித்யா,
ரிச்மண்ட், வர்ஜீனியா

© TamilOnline.com