ஒரு நாய் படுத்தும் பாடு!
ராஜாராமன் சென்னையிலிருந்து வந்த மனைவி மைதிலியையும் மாமியார் செளந்தரம்மாளையும் ஸ்டேஷனிலிருந்து கூட்டிக்கொண்டு, தன் வீட்டிற்குள் நுழையும் போதே மாடிக் குடித்தனக்காரர்களுடைய நாயின் ஓலம் அவர்களை எதிர் கொண்டழைத்தது. உண்மையில் அந்த ஓலத்தை அழுகை என்று சொல்ல வேண்டும். அந்த நாய் ஏனோ அடிக்கடி அழுகையை எழுப்பும் ஜந்துவாய் இருந்தது. ராஜாராமன் தனியாய் இருந்தபொழுதே இதை அவனால் சகிக்க முடியவில்லை. இப்பொழுது தன்னுடன் தனிக்குடித்தனம் தொடங்குவதற்கு வந்த தன் மனைவியையும், அதைத் தொடங்கி வைப்பதற்கு வந்த தன் மாமியாரையும் அழைத்துக்கொண்டு வீட்டிற்குள் நுழைந்த பொழுது இந்த ஓலம் கர்ண கொடூரமாய் தொனித்தது.

ராஜாராமனுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்புதான் கல்யாணமாகியிருந்தது. அவன் ஹைதராபாத்தில் தேசப்பாதுகாப்புப் பகுதியின் ஆராய்ச்சி நிலையத்தில் ஒரு ஆராய்ச்சியாளனாய் இருந்தான். கலியாண மான பிறகு அவன் ஒரு வீட்டை அமர்த்திக் கொள்ளவும் அவனுடைய மனைவி இப்பொழுது அவனுடன் குடித்தனம் நடத்த வருகிறாள்.

அவர்கள் வண்டியை அனுப்பிவிட்டு, சாமான்களை வீட்டில் ஒருபுறமாய் வைத்து விட்டு, முகங்கழுவி வந்தபோதும் நாயின் ஓலம் நின்றபாடில்லை.

''என்ன விடாமல் இப்படி?" என்று கேட்டாள் செளந்தரம்மாள்.

''அந்த நாயை அவர்கள் மத்தியானம் வீட்டில் கட்டிவிட்டு வெளியே போய் விடுகிறார்கள். ஒருநாள் தவறாமல் இந்தத் தலைவலிதான். இன்று சனிக்கிழமை விடுமுறை. சினிமா காலைக்காட்சிக்குப் போயிருப்பார்கள்,'' என்றான் ராஜாராமன்.

அன்றிரவு அவர்களுடைய தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு நாய் குரைத்தவாறே இருந்தது.

''என்ன இது, ராவும் பகலுமா!'' என்றாள் மைதிலி.

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமையானதால், ராஜாராமன் வேலைக்குப் போகவில்லை. வீட்டை ஒழுங்குபடுத்துவதிலேயே பொழுது சரியாய்ப் போய்விட்டது. ஹோட்டலுக்குப் போய்ச் சாப்பிட்டு விட்டு வந்தார்கள். வீட்டில் நுழைந்த போது நாயின் ஓலம் காதுகளில் நுழைந்தது.

''நாயை வைத்துக் கொண்டு, அதை ஏன் இப்படி அழவிடுகிறார்கள்? சரியாய்ப் பார்த்துக் கொள்ள முடியும்னா வைத்துக் கொள்ள வேணும், இல்லாவிட்டால் ஒரு ஜந்துவை வைத்துக் கொண்டு இப்படிச் செய்வானேன்?'' என்றாள் மைதிலி.

''இல்லாவிட்டால், அதை ஒரு கிணறு குளத்திலாவது போட்டுவிட வேண்டும்!'' என்றான் ராஜாராமன்.

''பாவம் ஏன் இப்படிப் பேசறேள்?'' என்றாள் செளந்தரம்மாள்.
'
'நீங்கள் இரண்டு நாளாய்த்தான் இங்கே இருக்கிறீர்கள். நான் ரெண்டு மாசமாய் இருக்கிறேன். சகிக்கவில்லை. ஒவ்வொரு ராத்திரியும், முன் ஜாமம், நடு ஜாமம் ஒன்று விடாமல் இந்த குரைப்பு. என்னிக்காவது மத்தியானம் வீட்டிலிருந்தால் இந்தப் பயங்கர அழுகை'' என்றான் ராஜாராமன்.

இப்படி ஒவ்வொரு நாளும் நாயைப் பற்றிய பேச்சு இல்லாமல் இருக்காது. பின் வருமாறு நடக்கும்.

ஒருநாள்

ராஜாராமன் (காலையில் எழுந்திருக் கையில்) "இந்த நாய் ஓயாமல் குலைச்சுண்டு தூக்கத்தைக் கலைச்சுண்டே இருக்கு."

மைதிலி (மாலையில் ராஜாராமன் ஆபீஸிலிருந்து வருகையில்) "மத்தியானம் சித்தெ கண் அசரலாம்னு பார்த்தா, இந்த நாயின் அழுகை விடமாட்டேன்" என்கிறது.

மற்றொரு நாள்

மைதிலி: நாயைக் கேட்க முடிகிறதே யொழிய, பார்க்க முடிகிறதில்லை.

ராஜாராமன்: அவர்கள் அப்படி நாயைப் பார்க்க முடியாமல் வைத்திருப்பதால்தான் அதை எப்பவும் கேட்டுக் கொண்டிருக்க வேண்டியிருக்கு. அதை எங்கும் வெளியில் விடுகிறதில்லை. எப்போதும் உள்ளே கட்டிப் போட்டுடறா, அது அழாமல் என்ன பண்ணும்?

மற்றொரு நாள்

ராஜாராமன்: அது ஒரு தமிழ் நாய் தெரியுமா?

மைதிலி: அதென்ன? தமிழ்நாட்டிலேர்ந்து ஆந்திரப் பிரதேசத்துக்கு எக்ஸ்போர்ட்டா?

ராஜாராமன்: அதெல்லாம் தெரியாது ஆனால் அது ஒரு தமிழ் நாய்!

மைதிலி: அதெப்படித் தெரியறது?

ராஜாராமன்: அதுக்குப் பெயர் சின்னி.

மைதிலி: அதென்ன தமிழ்ப் பெயரா?

ராஜாராமன்: ஆமாம் நல்ல தமிழ்ப் பெயர் முக்கூடற் பள்ளுலே, பள்ளிகளின் பெயர்களைக் கோத்து வரும் பாடலிலே முதற்பெயர்.

மைதிலி: எஜமானர்கள் தமிழா!

ராஜாராமன்: அதை ஏன் கேட்கிறே பயங்கரமான பெயர்கள்? எஜமானன் பெயர் மார்த்தாண்டம் - தண்டத்துடன் அடிக்கவற மாதிரி இருக்கு. ஒரு அல்சேஷனுக்கு நன்னாப் பொருந்தும். எஜமானி பெயர் பிருஹதாம்பாள். மார்த்தாண்டத்துக்குச் சரியான பயங்கரமான பெயர்... இதைக் கேளு வேடிக்கையை! அவாளுக்கு ரெண்டு பெண் இருக்கா. ஒருத்தியை ஜில்லு, ஜில்லுன்னு கூப்பிடறா, ஒரு போமிரேனி யனுக்கு நல்ல பெயரா இருக்கும், இன்னொருத்தியை பில்லு பில்லுன்னு கூப்பிடறா. அந்தப் பெயரை எங்கேந்து பிடிச்சாளோ ஒரு டாபர்மன்னுக்குப் பொருந்தும். இப்படி நாய்க்கு சின்னின்னு தமிழ்ப்பெயரைக் கொடுத்துட்டு நாய்ப் பெயர்களைப் பெண்களுக்குக் கொடுத் திருக்கா. அதோட நாயின் அழுகையைக் கேட்டுண்டு இருக்கா.

இப்படி இரண்டு மாதங்கள் கழிந்தன. செளந்தரம்மாள் தனிக் குடித்தனத்திற்கு வேண்டிய ஏற்பாடுகளைச் செய்துவிட்டுச் சென்னைக்குப் புறப்பட்டாள்.

''சீக்கிரம் மறுபடியும் வாங்கோ'' என்று ஸ்டேஷனில் சொன்னாள் மைதிலி.

''நாயின் தொந்தரவாலே சீக்கிரம் போய் விடலாம்னு தோணித்தா? இந்த தொந்தரவை நான் சீக்கிரம் தீர்த்து விடறேன். நீங்கள் மறுபடியும் சீக்கிரம் வாருங்கள்'' என்றான் ராஜாராமன்.

ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு திரும்பியவுடன் மைதிலி, ''ஏன்னா சீக்கிரமா இந்த நாய் உபத்திரத்துக்கு ஏதாவது வழி பண்ணுங்கோ...'' என்றாள்.

''என்ன செய்யச் சொல்றே?''

''அம்மா சொன்னா, வீட்டுலே நாய் அழறதே நல்லதுல்லே ஏதேனும் சாவு வரும்னு''

''இப்போ என்ன செய்யலாம்?''

''அந்த வீட்டுக்காராளோட பேசிப் பாருங்கோ...''

''என்னத்தைப் பேசறது?''

''யோசித்துப் பேசணும்''

''யோசித்து என்னத்தைப் பேசறது? பேசாத அந்த நாயைத் தூக்கி அதென்ன ஆறு... மூஸி ஆறுன்னு சொல்றாளே.. அதுலே கொண்டுப் போய் போட வேண்டியதுதான்.''

''வீணாப் பண்ணமுடியாததெப் பேசி என்ன பிரயோசனம்?"

"செய்ய முடியாதது என்ன? செய்ய முடியறதுதான். அவா சும்மா நாயை வீட்டுலே விட்டுட்டுப் போறாளே சில நாள் வெளிலே, பால்கனிலே கட்டிட்டுப் போயிடறாளே, நாயைத் திருடிவிடறது."

''செய்யற காரியமா சொல்லுங்கோ''

''செய்யற காரியம்தான். ரெண்டு கல்லே கயிறுலெ கட்டி அந்தக் கயிறே அதன் கழுத்துலே சுத்தி, ஏரிக்கரை ரோட்டுக்குப் போய் ஹ¤ஸ்ஸெய்ன் ஸாகர்லே போட்டுட வேண்டியதுதான்.''

''இதென்ன வேடிக்கையாய்ப் பேசிண்டே இருந்தால்..''

''வேடிக்கையில்லே நிஜம்தான் சொல்றேன் கேளு, நான் அந்த மார்த்தாண்டத்துடன் பேசி, அந்த நாயைப் பணம் கொடுத்து வாங்கி விடறேன். அப்புறம் நான் சொன்னபடி செய்துவிடறேன்.''

மைதிலி ஆச்சரியத்துடன் அவனைப் பார்த்தாள்.

''ஆமாம், நான் சொன்னதைச் செய்து காட்டறேன்.''

மறுநாளே ராஜாராமன் அவன் சொன்னதின் முதற்பகுதியைச் செய்து விட்டான். அதாவது அந்த நாயைத் திரு. மார்த்தாண்டனிடமிருந்து விலை கொடுத்து வாங்கி விட்டான். அவருக்கு சனியன் விட்டது என்றிருந்தது போலும், உடனே சம்மதித்து விட்டார்.

ஆனால் ராஜாராமனுக்கு அவன் சொன்ன சதியின் இரண்டாம் பகுதியைச் செய்வது அவ்வளவு சுலபமாயில்லை. அந்தப் பகுதியைத் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்தான். நாட்களும் சென்று கொண்டே இருந்தன. ஆனால் திட்டமிட்டிருந்த காரியத்தை முடிக்கும் வரையில் நாயைப் பட்டினி போட்டுக் கொண்டிருக்க முடியுமா?

''வீட்டில் ஒரு ஜந்துவை வைத்துக் கொண்டு அதைப் பட்டினி போடுவதா?'' என்றாள் மைதிலி.

''ஆமாம். இருக்கிற வரைக்கும் சரியாய் வச்சுப்போம். ஆடு, மாடு சாப்பிடறவாகூட அதைக் கொல்றவரைக்கும் நன்னா தீனிபோட்டு வச்சுக்கறா. ஆனா, நம்ப புண்ணிய பூமி, பாரத தேசத்துலே ஜந்துக்களுக்கு அந்த ஏமாத்தம் கூட நம்மவர்கள் செய்யறதில்லை கொல்லற வரைக்கும் பட்டினி போட்டு, கால்களை முடங்க வச்சு, படாத பாடு படுத்திவிட்டுக் கொல்லறா.''

இப்படி நான்கு வாரங்கள் கழிந்தன. ராஜாராமனுக்கு ஆராய்ச்சி நிலையத்தில் அதிகவேலை என்று சொன்னான்.

ஸ்ரீ ஹரிகோட்டையில் தேசப் பாதுகாப்பு சம்பந்தமாய் ஏதோ சாதனங்களை நிறுவ வேண்டியிருந்தது. அது சம்பந்தமாய் நிலையத்தில் வேலை, பிறகு ஸ்ரீஹரி கோட்டைக்கே போக வேண்டியிருந்தது. அங்கு ஒரு வாரம். திரும்பி வந்த பிறகு பிரயாணக் களைப்பு, அதிலிருந்து நீடித்த அசதி, ஆராய்ச்சி நிலையத்தில் நிறுவிய சாதனங்கள் சம்பந்தமாய்த் தொடர்ந்து ஆராய்ச்சிகள் இப்படி ராஜாராமனுக்கு மேலும் இரண்டு மாதங்கள். நாய் ஸம் ஹாரத்திற்கு அவகாசம் கிடைக்கவில்லை. நாயின் உயிரும் அப்படியே நீடித்துக் கொண்டு வந்தது.

''இதெப் பாருங்கோன்னா அவர் நாயை சரியாவே கவனிச்சுக்கல்லே இப்போ எவ்வளவு நன்னாயிருக்கு பார்த்தேளோ?''

''ஆமாம் தோலும் மயிரும்கூட பளபளன்னு ஆயிருக்கு. சின்னி! சின்னி! சின்னி!''

''நல்ல புத்திசாலியான நாய், பாருங்கோ நீங்க கூப்பிட்டேள்னு, உங்களையே பார்த்துண்டு இருக்கு.''

''ஆமாம், நான் கொஞ்ச நாள்லே அதனுடைய கொலைகாரனாகப் போறேன்னு அதுக்குத் தெரியுமா?'' ஒரு வாரம் கழிந்தது.

''போன மூணு நாளா அது சரியாவே சாப்பிடல்லே''

''நான்கூடச் சரியாச் சாப்பிடலே''

''போங்கோன்னா டாக் ·புட்னு ஏதோ சொல்லறாளே, வாங்கிண்டு வாங்கோ.''

''நாயை நன்னா புஷ்டியாக்கிட்டு ஏரில்லே போடறதுக்கா?''

''போங்கோன்னா ஆகாரம் போட்ட கையாலே ஒரு சீவனைக் கொல்லறதா?''

''சரி, நாய்க்காக ஸ்பெஷல் வைட்டமின் விக்கறா, வாங்கிண்டு வரட்டுமா?''

''வாங்கிண்டு வாங்கோ.''

ஒருவாரம் கழிந்தது. ஞாயிற்றுக்கிழமை.

''இதெப் பார்த்தாயா? நாய் மத்தியானம் அழறதேயில்லை.'' என்றான் ராஜாராமன்.

''ராத்திரியிலே கூட குரைக்கிறதில்லை.. வாசல்லே யாரோ வறா பாருங்கோ..''

''ஓ, மார்த்தாண்டம்! வாங்கோ வாங்கோ! இதெப் பாருங்கோ உங்க நாய் சின்னி, அதோ பாரு, உன் பழைய மாஸ்டர்!''

''ராஜாராமன், இந்த நாய் விஷயமாத்தான் பேசணும்னு வந்தேன். ஒரே தொல்லையாய் இருக்கு. ராத்திரியே தூங்க விடறதுல்லே, எப்போ பார்த்தாலும் குலைச்சுண்டு இருக்கு. மத்தியானம் வேறே அழறது சகிக்கல்லே, நியூஸன்ஸா இருக்கு..'' என்றார் மார்த்தாண்டம்.

''எக்ஸ்கியூஸ்மி, மிஸ்டர் மார்த்தாண்டம், அதுக்காக என்ன செய்யச் சொல்றேள்? வாயில்லா ஜந்து. அதெ நீங்களே வச்சுண்டு இருந்தா சும்மாதானே இருப்பேள்? அப்படியே இப்பவும் இருங்கோ!" என்றான் ராஜாராமன்.

புரசு பாலகிருஷ்ணன்

© TamilOnline.com