புரசு பாலகிருஷ்ணன்
தமிழில் பரவலாக அறியப்பட்ட எழுத்தாளர்களை மட்டும் நாம் தெரிந்து வைத்துக் கொண்டால் போதாது. அதையும் தாண்டித் தமிழில் எழுதியுள்ள பன்முகத் தன்மைமிகு எழுத்தாளர்களின் எழுத்துக் களுடனும் பரிச்சயம் கொள்வதும் அவசியம். தேர்ந்த வாசகர் என்பவர் பன்முக எழுத்து சார் அனுபவங்களுடன் அதன் அனுபவ வெளிகளுடன் ஊடாடி வரவேண்டும். வாழ்புலத்தின் நுட்பமான திரட்சிகளின் உள்வாங்கலுக்கு ஆட்பட வேண்டும். அப்பொழுதுதான் கலை மற்றும் இலக்கியம் தமக்கான பண்படுத்தலைச் செய்யும்.

அந்த வகையில் நாம் அறிய வேண்டியவர் களில் ஒருவரே புரசு பாலகிருஷ்ணன். இவர் மணிக்கொடியில் கதைகள் எழுதத் தொடங்கினார். அக்கால எழுத்தாளர்களின் அடையாள மரபுகளுக்கு உட்படாதவர். பாலகிருஷ்ணன் 1914-ல் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள மாங்குடி என்ற ஊரினருகிலுள்ள 'புரசக்கொடி' என்ற சிற்றூரில் பிறந்தார். இவரது தந்தையார் சி.சுப்பிரமணிய ஐயர். இவர் நோபல் பரிசு பெற்ற சர். சி.வி. இராமனின் சகோதரர்.

புரசு பாலகிருஷ்ணன் திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியிலும் சென்னை மாநிலக்கல்லூரியிலும் சென்னை மருத்துவக் கல்லூரியிலும் பயின்றார். பின்னர் அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளிலும் பயின்று மருத்துவத்துறையில் உயர் பட்டங்களைப் பெற்றார். பல்வேறு மாநிலங் களில் பணிபுரிந்து, மருத்துவத்துறைப் பேராசிரியராகவும் விளங்கினார்.

மருத்துவக் கல்லூரியில் மாணவராகப் பயின்ற காலத்திலேயே எழுத்துத்துறையில் ஈடுபட்டாலானார். குறிப்பாக ரஷ்யப் படைப்புகளின் தாக்கத்துக்கு உட்பட்டார். மனித அனுபவத் தெறிப்புகளை அதன் உணர்ச்சிகளை மிகவும் நுட்பமாக தனது எழுத்தில் கொண்டுவரும் படைப்பாளியாக இருந்தார். இவரது கதை சொல்லல் மனித மனங்களைப் பண்படுத்தும் ஒழுக்கம் சார் தன்மைகளை வளர்க்கும் புதிய பண்பாட்டு மறுமலர்ச்சிக்கான கூறுகளைக் கொண்டிருந்தது.

இவரது 'பொன் வளையல்' (1942, 1970), காதல் கடிதம் (1947), இரு நெருப்புகள் (1979), சிவநேசனின் சபதம் (1983) ஆகிய சிறுகதைத் தொகுப்புகள் கவனிப்புக்குரியன. 'காவிரிக் கதையிலே' (1981), 'மல்லிகையும் சம்பங்கியும்' (1984) என்ற நாவல்கள், கிருஷ்ணகுமாரி (1964) என்ற நாடகம், தமிழும் ஆங்கிலமும் (1947) என்ற கட்டுரை நூல், ஆண்டன் செகாவ் (1947) என்ற ஆய்வு நூல் முதலியனவும் இவரது படைப்புகளாகும்.

இவை தவிர The Gold Bangle and other stories (1966), Glimpse of Kalidasa (1970), Ramalinga poet and prophet (1984), kasi and other poems (1936) என்ற நூல்களும் இவருடையனவே.

புரசு பாலகிருஷ்ணன் பன்முக ஆளுமையுடன் விளங்கியுள்ளார். விஞ்ஞானம் சார்ந்த சிந்தனைக்கும் நடைமுறைக்கும் உட்பட்டிருப் பினும் கீழைத்தேச சிந்தனைகள் ஆன்மிக விடயங்களிலும் ஆழ்ந்த ஈடுபாடு மிக்கவராக விளங்கியுள்ளார். இவரது கதைக்களம் விரிவானது. அவற்றின் தன்மைகளைப் பல்வேறு கதையாடல்கள் சார்ந்து புரிந்து கொள்ளலாம். குறிப்பாக, சமுதாயம் காலந்தோறும் மாறும் இயல்புடையது. அந்த மாற்றங்களைப் படைப்பாளி தனது அனுபவம் சிந்தனை சார்ந்து வெளிப் படுத்துவார் என்ற நம்பிக்கை இவரது படைப்புகளில் தொனித்தது.

மருத்துவருக்குரிய நுண்ணுணர்வு உளவியல் அணுகுமுறை படைப்புத் திறனாக வெளிப்பட்டது. அதைவிட அக்காலத்து எழுத்தாளர்களின் தனித் தன்மைக்கும் மொழியழகுக்கும் புரசு பாலகிருஷ்ணனும் வளம் சேர்த்தவர்தான். ஆனால் தமிழ்ச் சிறுகதையின் பல்வேறு தளங்கள் சார்ந்து வெளிப்பட்ட கதை சொல்லிகளின் வீறு இன்னும் முழுமையாக அடையாளம் காணப்படவில்லை. அந்த வகையில் பலர் உள்ளனர். அவர்களுள் ஒருவரே புரசு பாலகிருஷ்ணன்.

தெ. மதுசூதனன்

© TamilOnline.com