யார் முட்டாள்?
அமராவதியைப் பொன்னன் என்ற மன்னர் ஆண்டுவந்தார். திடீரென அவருக்கு ஒரு சந்தேகம் உதித்தது. அதைத் தீர்த்துக் கொள்ள எண்ணித் தனது அமைச்சரை வரவழைத்தார்.

அமைச்சரிடம், "அமைச்சரே, நீங்கள் புத்திசாலி என்பதை அறிவேன். நானும் ஒரு புத்திசாலி என்பதை இந்த நாடே அறியும். ஆனாலும் நம் நாட்டில் முட்டாள்களும் இருக்கக்கூடும் அல்லவா? அவர்களில் முதல் ஐந்து முட்டாள்களை நான் காண விரும்புகிறேன். நீங்கள் தேடிப் பார்த்து அழைத்து வாருங்கள்" என்றார்.

இதைக் கேட்ட அமைச்சருக்கு அதிர்ச்சியாகி விட்டது. பகல் என்றால் இரவும் இருக்கத்தான் செய்யும்; நல்லவர் என்றால் கெட்டவர்களும் இருக்கத்தான் செய்வார்கள். அதுபோல நாட்டில் புத்திசாலிகள் இருப்பது போலவே முட்டாள்களும் இருக்கத்தான் செய்வார்கள். இதில் சிறந்த முட்டாள்களை எப்படிக் கண்டுபிடிப்பது? ஆனாலும் தேடலைத் தொடங்கினார்.

பல நாட்கள் சென்றபின் தன்னுடன் மூன்று நபர்களைக் கூட்டிக்கொண்டு அரசவைக்கு வந்தார்.

"மன்னா, இதோ நீங்கள் கேட்ட முட்டாள்கள்!" என்று சொல்லி வணங்கி நின்றார்.

"அமைச்சரே, நான் ஐந்து பேரை அல்லவா அழைத்துவரச் சொன்னேன். மூன்று பேரை மட்டும் அழைத்து வந்திருக்கிறீர்கள்?" என்றார் மன்னர்.

"மன்னா, அவர்கள் அடுத்த அறையில் இருக்கிறார்கள். இவர்களைப் பார்த்தபின் கடைசியாக அவர்களைச் சந்திக்கலாம்."

"சரி.. சரி... இவர்கள் எந்த வகையில் முட்டாள்கள் என்று சொல்லுங்கள்."

"மன்னா, இவன் ஒரு மரத்தின் கிளையை வெட்டிக் கொண்டிருந்தான். ஆனால் அடிக்கிளையில் அமர்ந்து வெட்டாமல், நுனிக்கிளையில் அமர்ந்து வெட்டிக் கொண்டிருந்தான். கிளை முறியும்போது தானும் சேர்ந்து விழுவோம் என்பதுகூடத் தெரியாதவன் இவன். ஐந்தாவது முட்டாள் இவன்தான்."

"அடடா... அடுத்து..."

"இதோ இவன் தன் வீட்டுக் கூரைமேல் படர்ந்திருந்த கொடிகளைத் தின்பதற்குத் தனது மாட்டைக் கூரைமேல் இழுத்துக் கொண்டிருந்தான். பசுமாடு அப்படி ஏறமுடியாது என்பதும், ஏறினால் கூரை தாங்காது என்பதும் இவனுக்குத் தெரியவில்லை. இவன் நான்காவது முட்டாள்"

"ஓ!"

"இதோ இந்த ஆள் ஒரு மாட்டு வண்டியில் பெரிய மூட்டையைத் தன் தலைமேல் வைத்துக்கொண்டு போய்க்கொண்டிருந்தான். 'ஏனப்பா இப்படிச் செய்கிறாய்?' என்று கேட்டதற்கு 'என்னைச் சுமந்து செல்லும் மாடுகளுக்கு வலிக்கக்கூடாதல்லவா? அதனால்தான் இப்படி' என்றான். இவன்தான் நம் நாட்டின் மூன்றாவது சிறந்த முட்டாள்."

"சபாஷ், சரிதான். மற்ற இரண்டு பேரைச் சந்திக்க நான் ஆவலோடு இருக்கிறேன்" என்றார் மன்னர்.

"வாருங்கள். அடுத்த அறைக்குப் போவோம்" என்று அழைத்துச் சென்றார் அமைச்சர்.

அதில் நுழைந்த மன்னர் திடுக்கிட்டார். அங்கே ஒரு பெரிய நிலைக்கண்ணாடி மட்டுமே இருந்தது.

"என்ன இது அமைச்சரே! இங்கு யாருமே இல்லையே?!" என்றார் மன்னர்.

"மன்னா. கண்ணாடியை உற்றுப் பாருங்கள். நாம் இருவர் தெரிகிறோமே!"

"ஆமாம். அது சரி, நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள், நாம் முட்டாள்கள் என்கிறீர்களா?" மன்னர் குரலில் சினம்.

"ஆமாம், மன்னா. அதில் சந்தேகமே வேண்டாம். அமைச்சரவையில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் எவ்வளவோ இருக்க, அவற்றையெல்லாம் விட்டுவிட்டு முட்டாள்களைத் தேடிக் கடந்த பல நாட்களாய் நாடெங்கும் அலைந்து திரிந்து கொண்டிருந்த நான் முட்டாளே அன்றி வேறென்ன? நாட்டின் முன்னேற்றத்தைப் பற்றிச் சிந்திக்க வேண்டிய நீங்கள், அதை விட்டுவிட்டு முட்டாள்களைத் தேட என்னை அனுப்பிய நீங்கள், ஐவரில் முதலிடம் வகிப்பதும் உண்மைதானே" என்றார் அமைச்சர்.

"இல்லை அமைச்சரே, நீங்கள் முட்டாள்களைத்தான் காட்டியிருக்கிறீர்கள்" என்றார் மன்னர். அமைச்சர் திகைத்தார்.

புன்னகைத்த வண்ணம் அரசர் கூறினார், "நான் முட்டாள் என்பதை நாகரிகமாக உணரவைத்த நீங்கள் எப்படி முட்டாள் ஆவீர்கள்?"

அரவிந்த்

© TamilOnline.com