திருவெண்காடு ஸ்வேதாரண்ய சுவாமி ஆலயம்
நாகை மாவட்டம் சீர்காழி வட்டத்தில் உள்ள தலம் திருவெண்காடு. காவிரி வடகரைத் தலங்களுள் பதினான்காவது. காசிக்குச் சமமான ஆறு தலங்களுள் ஒன்று. பிற ஐந்து தலங்களாவன: ஐயாறு, மயிலாடுதுறை, திருவிடைமருதூர், சாய்க்காடு, ஸ்ரீவாஞ்சியம். திருமறை மற்றும் கல்வெட்டுக்களில் இத்தலம் வெண்காடு, திருவெண்காடு என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வடமொழியில் ஸ்வேதாரண்யம். (ஸ்வேதம் என்றால் வெண்மை; ஆரண்யம் என்றால் காடு) தில்லையில் ஆடுமுன் இத்தலத்தில் ஆடியதால் இதற்கு ஆதிசிதம்பரம் என்ற பெயருமுண்டு. வேதங்கள் பூஜித்ததால் 'வேத வெண்காடு' என்றும், சுவேத மன்னன் வழிபட்டதால் சுவேதவனம் என்றும் இத்தலம் அழைக்கப்படுகிறது.
உமை, திருமகள், விஷ்ணு, சூரியன், சந்திரன் உள்ளிட்ட பலர் வழிபட்ட திருத்தலம் இது. இத்தலத்தில் புதன் வழிபட்டு சாப நிவர்த்தி பெற்றார். அதனால் புதனுக்கு தனிச் சன்னிதி இங்குண்டு.
புததோஷம் நீங்க இங்கு வந்து பரிகாரம் செய்து வழிபட்டுச் செல்கின்றனர். இத்தலம் பற்றிய வால்மீகி ராமாயணத்தில் இடம் பெற்றுள்ளதிலிருந்தே இதன் பெருமையையும், பழமையையும் உணர்ந்து கொள்ளலாம். சமயக் குரவர் நால்வரும் இத்தலத்தைப் போற்றிப் பதிகம் பாடியுள்ளனர். இத்தலத்தில் பிறந்து வாழ்ந்தவர்தான் பட்டினத்தடிகள் என்னும் திருவெண்காடர். நாயன்மார்களுள் ஒருவரான சிறுத்தொண்டரின் இளமைக்காலம் இவ்வூரிலேயே கழிந்தது.

சிவபெருமான் இத்தலத்தில் ஆனந்த தாண்டவம் புரிந்தார். அவரது ஒன்பது தாண்டவ க்ஷேத்திரங்களுள் முதன்மையானது இது. சிதம்பரத்தில் இறைவன் நிர்குணமாக ஆடி முக்தியைத் தருகிறார் என்றால், இங்கே சகுணமாக ஆடி அருள்புரிகிறார். சக்தி பீடங்களுள் இத்தலமும் ஒன்று. ஆரூரில் பிறக்க முக்தி. காசியில் இறக்க முக்தி. தில்லையில் தரிசிக்க முக்தி. அண்னாமலையை நினைக்க முக்தி. வெண்காடோ இந்நான்கையும் உள்ளடக்கிய தலம் என்பதால் இதற்கு முக்தி நகர், முக்தி வாயில் என்ற பெயர்களும் உண்டு.

இறைவனின் நாமம் ஸ்வேதாரண்யேஸ்வரர் என்னும் திருவெண்காடர். சுயம்புமூர்த்தி. வெண்காட்டுத் தேவர், வெண்காட்டீசர், வெண்காட்டு நாயனார் எனப் பல பெயர்களுண்டு. அன்னை பிரம்ம வித்யாம்பிகை, தனிச்சன்னிதியில் அருள்பாலிக்கிறாள். பெரியநாயகி, மாதங்கி, வெண்காட்டு தேவ நம்பிராட்டி, நாச்சியார் எனப் பல பெயர்களுண்டு. பிரம்மனுக்கு வித்தையை போதித்ததால் பிரம்ம வித்யாம்பிகை. மதங்க முனிவருக்கு மகளாகப் பிறந்ததால் மாதங்கி. இறைவனை நோக்கித் தவம் புரிந்து, அவரையே கணவராகப் பெற்றதாகத் தலபுராணம் கூறுகிறது.

அக்னி தீர்த்தம், சூரிய தீர்த்தம், சந்திர தீர்த்தம் போன்றவை இத்தலத்தின் புண்ணிய தீர்த்தங்களாகும். இங்கு நீராடி இறைவனை வழிபடப் பாவம் போகும். முக்தி கிடைக்கும். ஆல், கொன்றை, வில்வம் என்பன இத்தலத்தின் தலவிருட்சங்கள். தீர்த்தங்கள் மூன்று, விருட்சங்கள் மூன்று அமைந்துள்ளது போலவே சிவ மூர்த்தங்களும் மூன்றாக இத்தலத்தில் அமைந்துள்ளன. ஸ்வேதாரண்யேஸ்வரர் தவிர்த்து நடராஜர் மற்றும் அகோர வீரபத்திரர் தலத்தின் சிறப்பு தெய்வங்களாக விளங்குகின்றனர்.

இக்கோயில் மிகமிகப் பெரியதாகவும், விசாலமானதாகவும் அமைந்துள்ளது. கிழக்கு கோபுரம் ஐந்து நிலைகளுடனும் மேற்குக் கோபுரம் ஐந்து நிலைகளுடனும் அமைந்துள்ளது. கோயில் மதிலைச் சுற்றி மாடவிளாகமும், அகன்ற தேரோடும் வீதிகளும் அமைந்துள்ளன. கீழ்கோபுரம் வழி நுழைந்தால் கொடி மரத்துப் பிள்ளையார், பலிபீடம், த்வஜ ஸ்தம்பம், நந்தியைக் காணலாம். தெற்கே அக்னி தீர்த்தம், அதன் கிழக்கே அக்னீஸ்வரர் சன்னதி அமைந்துள்ளது. தெற்குவெளிப் பிரகாரத்தில் சூரியனார் கோயில், சூரிய தீர்த்தம் அமைந்துள்ளது. அம்மன் சன்னதி மண்டபத்தின் இடதுபுறம் புதனுக்கு தனி சன்னதி உள்ளது. அம்மன் கோயிலுக்கு மேற்கே சம்பந்த விநாயகர் சன்னதி உள்ளது. கோபுரத்தை ஒட்டியுள்ள மண்டபத்தில் நடராஜரின் பல்வேறு ஆடல், பாடல்கள் சித்திரமாக வரையப்பட்டுள்ளன. மேற்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ நடராஜர் சபை, வடக்கு உட்பிரகாரத்தில் ஸ்ரீ அகோர வீரபத்திரர் சன்னதி உள்ளது. மூலஸ்தானத்தில் மகாலிங்கமாக இறைவன் எழுந்தருளியுள்ளான்.

பல கல்வெட்டுக்கள் இவ்வாலயத்தில் காணப்படுகின்றன. ஆடிப்பூர விழா, நவராத்திரி, சிவராத்திரி, ஆனித்திருமஞ்சனம், அன்னாபிஷேகம், கார்த்திகை தீபப் பெருவிழா என பல திருவிழாக்கள் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. பங்குனியில் அகோர வீரபத்திரருக்கு நடைபெறும் லட்சார்ச்சனை மிக விசேஷம். பழம்பெருமை மிக்க இக்கோயிலை தரிசித்து பயன் பெறுவோமாக!

சீதா துரைராஜ்,
சென்னை

© TamilOnline.com