கு.சா. கிருஷ்ணமூர்த்தி
"இவர் தமிழில் செய்யுள் புனைந்தளிக்கும் கவிஞர் மட்டுமல்ல; அதற்கு மேல் நல்ல இசைஞானமும் உடையவர்! இவருடைய இசைப்பாடல்களை இசைப் பேரறிஞர்கள் எம்.எம். தண்டபாணி தேசிகர், கே.பி. சுந்தராம்பாள், மதுரை சோமசுந்தரம், சி.எஸ்.ஜெயராமன், சீர்காழி கோவிந்தராஜன், நாடகக் கலைஞர் ஔவை தி.க. சண்முகம் ஆகியோர் பல்லாயிரவர் குழுமியுள்ள இசையரங்குகளிலேயும், நாடக அரங்குகளிலேயும் பாடி, என்னை மறந்து கேட்டு நான் ரசித்ததுண்டு." ம.பொ.சிவஞானம் அவர்களால் இவ்வாறு பாரட்டப்பெற்றவர், கும்பகோணம் சாமிநாதன் கிருஷ்ணமூர்த்தி என்னும் கு.சா. கிருஷ்ணமூர்த்தி. இயல், இசை, நாடகம் என்று முத்தமிழிலும் முக்கிய பங்களிப்புகளைத் தந்திருக்கும் இவர், மே 19, 1914ல் சாமிநாதன்-மீனாட்சியம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தார். மூன்றாம் வகுப்புக்குமேல் கல்வி கற்க இயலவில்லை. எம். கந்தசாமி முதலியார் தலைமைப் பொறுப்பில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து 'பால பார்ட்' வேடங்களில் நடிக்கத் தொடங்கினார். நடிப்பு, பாடல்கள், வசனம் எழுதுவது, நாடக, திரைக்கதை ஆக்கம், இசை என நாடகக் கலையின் அனைத்துக் கூறுகளையும் அங்கே திறம்படக் கற்றார். வாலிபப் பருவத்தில் முக்கிய வேடங்கள் தேடி வந்தன. இவரது வசன உச்சரிப்பும் பன்முக ஆற்றலும் புகழ்பெற்ற நாடகக் கலைஞர்களைக் கவர்ந்தன. அவர்கள் ஸ்பெஷல் நாடகங்கள் நடத்த மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, பர்மா முதலிய நாடுகளுக்குச் செல்லும்போது இவரை அழைத்துச் சென்றனர். சில ஆண்டுகளுக்குப் பின் குடும்பச் சூழலால் நடிப்பை விட்டு விலகி புதுக்கோட்டையில் ஒரு பதிப்பகமும் படக்கடையும் தொடங்கினார். ஓய்வு நேரத்தில் பத்திரிகைகளுக்குக் கவிதைகள் எழுதியதோடு, 'ஆண்டாள்', 'போஜன்' முதலிய படங்களுக்குப் பாடல்கள் எழுதினார்.

குடும்பத்தில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் தாக்கத்தால் 'அந்தமான் கைதி' என்ற தலைப்பில் ஒரு நாடகத்தை எழுதி, அதனைத் தன் நண்பர்களைக் கொண்டு அரங்கேற்றினார். நாடகத்தின் ஒரு பிரதியை ஔவை ஷண்முகம் அவர்களுக்கு அனுப்ப, அவர் அதனைப் படித்துவிட்டு தானே நாடகமாக்க முன்வந்தார். தமிழ்நாடெங்கும் அந்த நாடகம் மேடையேற, அதன்மூலம் பிரபலமானார் கு.சா.கி. எம்.ஜி.ஆர். நடிக்க 'அந்தமான் கைதி' படமானபோது அதற்கு கதை-வசனம், பாடல்கள் எழுதும் வாய்ப்பு இவருக்குக் கிடைத்தது. தொடர்ந்து , திரைப்பட வாய்ப்புகள் வந்தன. இவரது திறமையைக் கண்ட ஜூபிடர் சோமு இவரைச் சென்னைக்கு வரவழைத்தார். ஜூபிடர் நிறுவனத்தின் படங்களுக்குப் பாடல், வசனம் எழுதும் வாய்ப்பை வழங்கினார். ஜூபிடர் நிறுவனத்தார் ஜே.எஸ். ரங்கராஜுவின் 'சந்திரகாந்தா' கதையை படமாக்க ஏற்பாடு செய்தபோது, அதில் சுண்டூர் இளவரசன் என்ற முக்கிய கதாபாத்திரத்தில், பி.யு. சின்னப்பா நடிக்க கு.சா.கி. காரணமானார். டைரக்டர் கே. சுப்பிரமணியத்தின் மருமகன், 'ஒன்றே குலம்' என்ற படத்தைத் தயாரித்தபோது அதற்கு கதை, வசனம் எழுதினார். அப்படத்தில் கு.சா.கி.யால் செவிலிப் பெண் வேடத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வஹீதா ரஹ்மான் பிற்காலத்தில் பெரும்புகழ் அடைந்தார். உவமைக்கவிஞர் சுரதா, கு.மா. பாலசுப்பிரமணியம், ஏவி.எம். ராஜன், அவிநாசிமணி ஆகியோரைத் தமிழ்த்திரைக்கு அறிமுகப்படுத்திய பெருமையும் இவருக்கு உண்டு.

திரைப்பாடல்களிலும் சிறந்த பங்களிப்பைத் தந்திருக்கிறார் கு.சா.கி. 'ரத்தக்கண்ணீர்' படத்தில் சிதம்பரம் ஜெயராமன் இசையமைத்துப் பாடிய "குற்றம் புரிந்தவன்" பாடல் இவருக்கு பெருமை சேர்த்த ஒன்று. "நிலவோடு வான் முகில் விளையாடுதே", "எளியோரைத் தாழ்த்தி வலியோரை வாழ்த்தும்" போன்ற பாடல்கள் காலத்தால் நிலைத்தவை. 'அம்பிகாபதி', 'அருமை மகள் அபிராமி' போன்ற படங்களுக்கு இவர் எழுதிய பாடல்கள் குறிப்பிடத்தக்கன. நாடகத் துறைக்கு இவர் ஆற்றியிருக்கும் சேவை அளப்பரியது. புராண, வரலாற்று நாடகங்களுக்கே முக்கியத்துவம் கொடுத்து வந்த காலத்தில் சமூக நாடகங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர் கு.சா.கி. இதுபற்றி, "சமூக நாடக முன்னேற்றத்திற்கு நாடகக் குழுவினரை ஊக்குவித்த பெருமை அந்தமான் கைதிக்கே உரியது. நாடகப் பேராசிரியர் திரு. சம்பந்த முதலியார் அவர்களுக்குப் பிறகு நானறிந்த வரையில் அப்படியே மேடையேற்றத்தக்க ஒரு சிறந்த நாடகத்தை வெளியிட்ட பெருமை தோழர் கு.சா.கி. அவர்களுக்கே உரியது" என்று பாராட்டுகிறார் ஔவை டி.கே. ஷண்முகம். அந்நாடகம் நூலாக வெளியான போது அதனைப் பாராட்டி அப்போதைய முதல்வர் அறிஞர் அண்ணா, "நண்பர் கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களின் 'அந்தமான் கைதி' என் உள்ளத்தைத் தொட்டீர்த்த ஏடுகளில் ஒன்றாகும். பொருந்தா மணத்தின் கொடுமையையும், சமூக சீர்த்திருத்தவாதிக்கு நேரிடும் கஷ்டத்தையும் உருக்கமாக விளக்கிக் காட்டும் இந்நூல், படித்திட மட்டுமல்லாது நடித்திடவும் ஏற்றதோர் நாடகநூல். திரைப்படமாகவும் இதனைக் கண்டு களித்திட எனக்கு வாய்ப்புக் கிடைத்தது. நண்பர் கு.சா.கி. அவர்களுக்கு என் பாராட்டுதலை வழங்கி மகிழ்கிறேன்" என்று வாழ்த்தியிருக்கிறார். 'கலைவாணன்', 'என் காணிக்கை' போன்ற நாடகங்களும் புகழ்பெற்றனவாகும். முதன்முதல் தமிழ் வளர்ச்சிக் கழகம் நாடக நூலுக்கென்று வழங்கிய பரிசு 'அந்தமான் கைதி'க்கே கிடைத்தது. தமிழ்நாடு சங்கீத நாடக சங்கத்தின் சிறந்த நாடக ஆசிரியருக்கான விருதையும் இதற்காக கு.சா.கி. பெற்றார்.

கு.சா.கி.யின் கவிதைகள் நவமணி, உமா, இந்திரா, சண்டமாருதம், கலைவாணி, செங்கோல், தமிழ்நாடு போன்ற இதழ்களில் வெளியாகின. அவற்றில் சில தொகுக்கப்பட்டு 'பருவமழை' என்ற பெயரில் நூலாக வெளியாயிற்று. தமிழ் வளர்ச்சித் துறையின் தமிழ் வளர்ச்சிக்கான 1978ம் ஆண்டின் சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசு அந்நூலுக்குக் கிடைத்தது.

தெருவுக்குத் தெரு கட்சிகள் தொடங்கப்பட்டு சமூக நலன் சீரழிவதைக் கண்டு மனம் பொறாமல்,

"ஊருக்கு நூறுகட்சி உண்டு பண்ணி
ஒற்றுமையைக் குலைக்காதீர்..."


என்று சாடுகிறார்.

"எங்கள் பாரதநாடு - இதற்கு
எந்த நாடும் இணையில்லை எனப் பாடு
எந்த நாட்டையும் பறிக்க எண்ணாது
எதிர்ப்பு வந்தால் அஞ்சிப் பதுங்கிடாது
சிந்தையாலும் பிறர்க்கின்னல் செய்யாது
செயலிலும் சொல்லிலும் மாறுபடாது


என்று பாரதத்தின் பெருமையைப் பேசுகிறார்.

இவர் கவியரங்குகளில் கவிதை பாடியிருக்கிறார். சொற்பொழிவு ஆற்றியிருக்கிறார். சென்னைப் பல்கலைக்கழகத்தில் இவர் நிகழ்த்திய உரை 'தமிழ் நாடக வரலாறு' என்ற நூலாக வெளிவந்தது. நாடகக் கலையின் தோற்றம், அடைந்த மாற்றங்கள் எனத் துவங்கி புராண, வரலாற்று நாடகங்கள், சமூக சீர்த்திருத்த நாடகங்கள், அவற்றின் தன்மைகளையும், உத்திகள், தெலுங்கு, மலையாள, கன்னட நாடகங்களின் வளர்ச்சி, அதற்குழைத்தவர்களையும் பற்றி அந்நூல் விரிவாக ஆராய்கிறது.

கு.சா. கிருஷ்ணமூர்த்தி செய்தவற்றில் தமிழிசை வளர்ச்சிக்கு ஆற்றிய தொண்டு மிகவும் முக்கியமானது. இவரது தமிழிசைப் பாடல் தொகுப்புகள் முன்னணிக் கலைஞர்களால் மேடைதோறும் பாடப்பட்டன. டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா, செம்மங்குடி சீனிவாச ஐயர், டாக்டர் எஸ். இராமநாதன், சீர்காழி கோவிந்தராஜன் உள்ளிட்ட பல இசைக்கலைஞர்களது பாராட்டையும், அன்பையும், மதிப்பையும் ஒருங்கே பெற்றவர் இவர். வள்ளலாரின் பாடல்களை ராக-தாள-சுரக் குறிப்புடன் ''அருட்பா இசையமுதம்', 'அமுதத் தமிழிசை' ஆகிய பெயர்களில் குருவாயூர் பொன்னம்மாளுடன் இணைந்து இவர் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. "சாகித்திய கவனம் செய்யும் கலை எல்லோருக்கும் கைவரப் பெறுவதில்லை. இந்தக் கலை பூர்வ ஜென்மப் பலனால் சிலருக்கே வாய்க்கிறது. பொதுவாகக் கவிஞர்கள் புதிய புதிய கவிதைகள் செய்ய விரும்புவது இயற்கை. ஆனால் மற்றொரு கவி எழுதிய சாகித்தியங்களுக்கு நாம் உயிர் கொடுப்பது மிகவும் கடினமானது. இந்த விஷயத்தில் ஸ்ரீ கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் முயன்று சாதித்திருக்கும் "அருட்பா இசையமுதம்" என்ற இந்நூல் மிகவும் பாராட்டத்தக்கதாகும்" என்று குறிப்பிடுகிறார், நூலின் ஆசியுரையில் திருமதி. டி.கே. பட்டம்மாள். "எனது பெருமதிப்பிற்குரிய உயர்திரு கு.சா. கிருஷ்ணமூர்த்தி அவர்களை நாற்பது ஆண்டுகளாக நன்கு அறிவேன். அதுவும் புதுக்கோட்டை மிருதங்க-கஞ்சிரா மகாமேதை தட்சிணாமூர்த்தி ஐயா அவர்களின் இல்லத்தில் முதன்முதலாகச் சந்திக்கும் பாக்கியம் பெற்றேன். அப்போதே அவர்கள் எழுதிய பல பாடல்களை மனப்பாடம் செய்துவிடுவேன். கூடவே பாடிக் கொண்டிருப்பேன். பாடல்கள் எழுதுவது மட்டுமின்றி, அவர்கள் அழகாகப் பாடுவதிலும் திறமை பெற்றவர் என்பதை இசையுலகம் நன்கறியும்" என்று புகழ்ந்துரைக்கிறார் மதுரை சோமு. 'இசையின்பம்', 'தமிழிசை முழக்கம்' போன்றவையும் கு.சா.கி. எழுதிய இசைப்பாடல்களின் தொகுப்புக்களாகும்.

தனி சமஸ்தானமாக இருந்த புதுக்கோட்டையை இந்திய அரசுடன் இணைக்க மக்கள் நடத்திய போராட்டத்தில் முக்கியப் பங்கு வகித்தவர் கு.சா.கி. .பிற்காலத்தில் தமிழரசுக் கழகத்தின் முன்னணித் தலைவரானார். முத்தமிழுக்கும் இவர் ஆற்றிய சேவைக்காக இவருக்கு 1966ல் 'கலைமாமணி' விருது வழங்கப்பட்டது. உடல் நலிவுற்ற இவர் 1990ம் ஆண்டு மே மாதம் 13ம் நாளன்று, 76ம் வயதில் காலமானார். இவரது நூல்கள் நாட்டுடைமை ஆக்கப்பட்டுள்ளன. இந்த 2014ம் ஆண்டு இவரது நூற்றாண்டு.

பா.சு.ரமணன்

© TamilOnline.com