மகாகவி பாரதியின் பெயர்த்தி லலிதா பாரதியின் மகன், பாரதிக்கு கொள்ளுப்பேரன் என்பதோடு, பாரதியின் அரிதான பல பாடல்களுக்கு இசையமைத்துப் பாடியிருக்கிறார் ராஜ்குமார் பாரதி. ஃப்யூஷன், நாட்டியம், கர்நாடக சங்கீதம், சுலோகங்கள், தமிழிசை எனப் பற்பல குறுந்தகடுகளைப் பாடி வெளியிட்டிருக்கிறார். அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, அரபு நாடுகள், சிங்கப்பூர், மலேசியா, இலங்கை என உலகின் பல நாடுகளுக்கும் பயணித்து இசைப்பணி ஆற்றிவருகிறார். ராமகிருஷ்ண மடத்துக்காக பகவத் கீதை முழுவதையும் நான்கு பாகங்களில் தந்திருக்கிறார். ஸ்ரீ தத்தா பீடம், மைசூர் மற்றும் ஸ்ரீ சிருங்கேரி மடத்தின் ஆஸ்தான வித்வான். சங்கீதகான சுதாநிதி, சங்கீதசுதாகரா, கானகலா பாரதி உள்ளிட்ட பல பட்டங்கள் பெற்றவர். சத்யபாமா பல்கலைக்கழகத்தின் கௌரவ டாக்டர் பட்டம் பெற்றவர். 'ரமண ஒளி' என்ற தொலைக்காட்சித் தொடருக்கு இவரமைத்த இசை மிகப் பாராட்டுப்பெற்ற ஒன்று. ஒலிப்பதிவு, இசைக்கோர்ப்பு வேலைகளில் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருந்தவரை ஒரு பின்மாலையில் சந்தித்தோம். அதிலிருந்து...
*****
கே: நீங்கள் பொறியியல் படித்தவர். இசைதான் வாழ்க்கை என்று தீர்மானித்தது எப்போது, ஏன்? ப: சிறுவயதிலிருந்தே வீட்டில் இசைச் சூழல் உண்டு. எல்லோருமே நன்றாகப் பாடுவார்கள். நான், அம்மாவிடம் இசை கற்றேன். கிண்டி பொறியியல் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்றேன். படிக்கும்போதே அனைத்திந்திய ரேடியோ, மியூசிக் அகாடமி மற்றும் சபாக்கள் நடத்தும் போட்டிகளில் பங்கேற்றுப் பரிசு பெற்றிருக்கிறேன். ஆனால், இசையைத் தொழிலாக எடுத்துக்கொள்ள அப்போது முடிவு செய்யவில்லை. காரணம், அந்தக் காலத்தில் இசையை முழுமையாக நம்பி வாழ்க்கை நடத்த முடியாத சூழல். அதே சமயம் இசையை விட்டுவிடக் கூடாது என்ற எண்ணம் இருந்ததால் சென்னையை விட்டு வேறெங்குமே வேலைவாய்ப்புகளை ஒப்புக் கொள்ளவில்லை.
காரணம், சென்னையில் நிறைய சபாக்கள். கச்சேரிக்கு நல்ல வரவேற்பு. அதனால் சென்னையில், ஒரு சாதாரண கம்பெனியில் குறைந்த சம்பளத்தில் வேலைக்குச் சேர்ந்தேன். வேலை முடிந்த பிறகு கச்சேரி செய்வேன். அப்படியே மெல்ல மெல்ல வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அப்போதுதான் பாரதி நூற்றாண்டு விழா வந்தது. சென்னைத் தொலைக்காட்சியில் என்னை பாரதியாரின் கொள்ளுப்பேரன் என்று அறிமுகப்படுத்தி பாரதி பாடல்களைப் பாடும் வாய்ப்பைத் தந்தார்கள். எம்.எஸ். பெருமாள் அதன் தயாரிப்பாளர். டி.வி. அப்போது ரொம்ப பவர்ஃபுல் மீடியா. மறுநாள் நான் வெளியே சென்றபோது எல்லோரும் என்னை அடையாளம் கண்டுகொண்டார்கள். வாய்ப்புகள் வந்தன. ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் வேலையா? பாட்டா? என்னும் கேள்வி வந்தது.
எனது குருநாதர் டி.வி. கோபாலகிருஷ்ணன், "நீ முன்னுக்கு வரணும்னா இந்த வேலையை விட்டு ஒழி" என்பார். "எப்படி சார், வேலையை விட்டு இதற்கு வருவது?" என்பேன். அவர், "என்ன, என்மேல் நம்பிக்கையில்லையா? சங்கீதத்தின்மேல் நம்பிக்கையில்லையா?" என்பார். நான் "இருக்கு சார், ஆனா சங்கீதத்தையே முழுநேரத் தொழிலா எடுத்துக்க முடியுமா?" என்பேன். "விடு. எல்லாம் நன்னா நடக்கும்" என்பார். அதன்படி அந்தச் சூழல் வந்தபோது, வேலையை விட்டுவிட்டேன். இசை என் வாழ்க்கையானது.
கே: அதன்பின் தொடர்ந்து நிறைய வாய்ப்புகள் வர ஆரம்பித்ததா? ப: வேலையை விட்ட புதிதில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. அப்போது சிலசமயம் ஒரு நிகழ்ச்சியும் இருக்காது. அடடா, இதை நம்பி வேலையை விட்டுவிட்டோமே என்றெல்லாம் தோன்றும். ஆனால் நான் அப்படி நினைத்து மருகின சில நாட்களிலேயே மளமளவென்று ஓய்வு ஒழிச்சலே இல்லாத அளவுக்குக் கச்சேரிகள் புக் ஆகிவிடும். பலமுறை இப்படி நிகழ்ந்திருக்கிறது. அப்புறம் வாய்ப்புகள் வர, வர எல்லாம் சரியாகிவிட்டது.
கே: இசையமைப்பாளர் ஆனது எப்படி? ப: 1992ல் அமெரிக்கா சென்றிருந்தேன். மாலதி ஐயங்கார் என்பவரின் பரதநாட்டிய அரங்கேற்றத்திற்குப் பாடச் சென்றேன். அவருக்கு அதற்கு முன்னால் நான் பாடியது கிடையாது. ஏதோ ஒரு நிகழ்ச்சியில் நான் பாடுவதைக் கேட்டுவிட்டு, நான்தான் பாட வேண்டும் என்று மிகுந்த ஆவலோடு அழைத்திருந்தார். அத்தோடு வேறு சில கச்சேரிகளுக்கும் அவர் ஏற்பாடு செய்து கொடுத்தார். அப்படி ஒரு கச்சேரிக்கு நீங்களே மியூசிக் போடுங்கள் என்றார். நானும் செய்தேன். அதை வேறொரு நடனக் குழுவினர் பார்த்துவிட்டு "அது மிகவும் நன்றாக இருந்தது. எங்களுக்கும் மியூசிக் செய்து கொடுங்கள்" என்றனர். செய்தேன். ஆனால் உடனே பெரிதாக ஒன்றும் இசையமைக்கும் வாய்ப்புகள் வந்துவிடவில்லை. கச்சேரிகளுக்குத்தான் நான் முக்கியத்துவம் கொடுத்து வந்தேன். 2001ல் திடீரென என் குரலில் ஒரு பிரச்சனை!
கே: ஆ... என்ன அது? ப: என் குரல் பிரச்சனையால் திடீரெனப் பாட முடியாமல் போய்விட்டது. வாயைத் திறந்தால் சத்தமே வராது. பாடுவதை நிறுத்த வேண்டியதாயிற்று. எனக்கோ இசையைத் தவிர வேறெதுவுமே தெரியாது. அப்போதுதான் என்மீது நம்பிக்கை வைத்து எனக்கு இசையமைக்கும் வாய்ப்புகளை மாலதி ஐயங்கார் போன்ற நண்பர்கள் ஏற்படுத்தித் தந்தார்கள். ஒவ்வொன்றாக வாய்ப்புகள் வர ஆரம்பித்தன. அந்தக் காலத்தில் ராமநாதபுரம் கந்தசாமிப் பிள்ளை என்ற ஒரு பெரிய மிருதங்க வித்வான் இருந்தார். அவரது கச்சேரிகளில் நான் பாடியிருக்கிறேன். ஒருநாள் அவர் சொன்னார், "தம்பி, இந்த ஏழு சுரங்களை உண்மையா நீங்க நம்பி வந்துட்டீங்கன்னா, அது என்னிக்கும் உங்களுக்கு சோறு போட்டுக் காப்பாத்தும். கை விடாது" என்று. அவரைத்தான் அப்போது நான் நினைத்துக் கொண்டேன். அவர் சொன்னது உண்மையானது. இசையை நம்பி வந்து பாட முடியாமல் போன எனக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தது. அன்றிலிருந்து இன்றுவரை 29 வருடமாக எனக்கு இசைதான் சாதம் போட்டுக் கொண்டிருக்கிறது. காரைக்குடி மணி சாரிடம் இதுபற்றிச் சொன்னபோது அவர், "அதுதான்யா சங்கீதத்தின் மகிமை. அது அப்படிப் பண்ணும்" என்றார்.
ஆனால் ஒரு விஷயம். இதற்காக நான் ஏதும் செய்யவில்லை. அதது தானாக நடந்தது. ஆனால் இதெல்லாம் எப்படி நடக்கிறது என்று நாம் ஆராய முடியாது. அதை இயற்கையோ, படைப்போ என்ன பெயர் வேண்டுமானாலும் சொல்லிக் கொள்ளலாம். எது எஞ்சினியரிங் கல்லூரியிலிருந்த என்னை பாடும் படியாகச் செய்ததோ, எது எனது குரலில் பிரச்சனையாக்கி பாட முடியாமல் செய்ததோ, எது என்னை இசையமைப்பாளர் ஆக ஆக்கியதோ அதுவே என்னை இன்னும் இசைத் துறையில் வைத்திருக்கிறது. இது எப்படி என்று காரணம் கேட்டால் சொல்ல முடியாது. நம்மால் புரிந்து கொள்ள முடியாது. அதற்கு முயல வேண்டியதும் இல்லை. இதை ஆராய்ச்சி செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. தேவையும் இல்லை. அதற்கு நாம் உண்மையாக இருந்தால்போதும். அவ்வளவுதான்.
கே: குரலில் பழுது என்றீர்களே, அதற்கு என்ன காரணம்? இப்போது நீங்கள் பாடுகிறீர்களா? ப: குரலில் பிரச்சனை எதனால் வந்தது என்பது ஆரம்பத்தில் தெரியவில்லை. பின்னால் தெரிய வந்தது, அது ஒரு நியுராலாஜிகல் ப்ராப்ளம் என்று. முன்பு பேசவே முடியாது. குரல் எழும்பாது. தற்போது எவ்வளவோ பரவாயில்லை. ஆனால் நான் தற்போது அதிகம் பாடுவதில்லை. குரல் ஒத்துழைப்பை வைத்துக் கொஞ்சம் கொஞ்சம் பாடுகிறேன்.
கே: உங்கள் குருநாதர்கள் பற்றிச் சொல்லுங்களேன்! ப: என் அம்மாதான் என் முதல் குரு. அவரிடம் ஐந்து வயதில் இசை கற்றேன். வள்ளியூர் குருமூர்த்தி அவர்களிடம் 12 ஆண்டுகள் பயின்றேன். பின்னர் டாக்டர். பாலமுரளி கிருஷ்ணாவிடம் இரண்டு ஆண்டுகள் தில்லானா கற்றுக்கொண்டேன். பின் திரு. டி.வி. கோபாலகிருஷ்ணனிடம் ஹிந்துஸ்தானி, கர்நாடக இசை இரண்டுமே கற்றுக்கொண்டேன்.
கே: இசைக்கும், நாட்டியத்துக்கும் என்ன வேறுபாட்டைக் காண்கிறீர்கள்? ப: இசை என்பது ஒரு டைமன்ஷன் என்றால் நாட்டியம் என்பது இரண்டு டைமன்ஷன். ஆடியோ மற்றும் விஷுவல். பாடகரானால் பாடுவதோடு பொறுப்பு தீர்ந்துவிடுகிறது. ஆனால் கம்போஸராக இருக்கும்போது நிறைய பொறுப்பு இருக்கிறது. பாடகர்கள், இசைக்குழுவினர், வாத்தியக் கலைஞர்கள் என எல்லோரையும் ஒருங்கிணைத்துப் பணியாற்ற வேண்டியிருக்கிறது. நிறைய சவால்கள் இருக்கின்றன. ஒரு டெய்லர் நேர்த்தியாக அளவெடுத்து, துணி தைத்துக்கொடுப்பது போல. இது எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.
கே: நிறைய ஆல்பங்கள் தயாரித்தளித்திருக்கிறீர்கள், அல்லவா? ப: ஆம். திருப்பதி தேவஸ்தானத்தில் சாய்கிருஷ்ணா என்பவர் கேட்டுக் கொண்டதேற்கேற்பச் சில ஆல்பங்கள் செய்திருக்கிறேன். தனிப்பட்ட முறையில் கேட்டவர்களுக்காகச் செய்து கொடுத்திருக்கிறேன். எல். கிருஷ்ணனுக்கு முன்பு நான் நிறையப் பாடியிருக்கிறேன். பக்தி இசையில் அவர் கிங். நான் குரல் பழுதுபட்டுப் பாடமுடியாமல் இருந்தபோது அவர் என்னைக் கூப்பிட்டு, "நீ வீட்டில் சும்மா இருக்க வேண்டாம். இங்கு வா. என்னோடு இரு. மியூசிக் அசிஸ்ட் பண்ணு" என்று ஒரு தகப்பன் ஸ்தானத்தில் இருந்து கூப்பிட்டார். நானும் அவர் கூடவே போனேன். வயது வித்தியாசம் பார்க்காமல் நண்பர்போலப் பழகினோம். அவர் மூலமாக நிறைய ஆல்பங்களுக்கு மியூசிக் போட்டிருக்கிறேன்.
கே: பாரதி பாடத்தில் பாடிய அனுபவம் குறித்துச் சொல்லுங்களேன்! ப: நான் 'ஏழாவது மனிதன்' படத்தில் பாடியிருக்கிறேன். கன்னடத்தில் நிறைய படங்களுக்குப் பாடியிருக்கிறேன். சினிமாவில் பாடுவது ஒரு நல்ல அனுபவம்தான் என்றாலும், கர்நாடகக் கச்சேரியில் கிடைக்கும் நிறைவு அதில் கிடைக்காததால் நானாகவே சினிமாவுக்குப் பாடுவதைக் குறைத்துக் கொண்டுவிட்டேன்.
ஒருநாள் இயக்குநர் ஞானராஜசேகரன் எங்களை அழைத்தார். நானும் அம்மாவும் அவரைப் பார்க்கப் போனோம். அவர் 'பாரதி' படத்தின் முழு ஸ்கிரிப்டையும் எங்களிடம் படித்துக் காட்டினார். எங்கள் கருத்துக்களைக் கேட்டார். இளையராஜாதான் இசை என்று சொன்னார். பின்னர் நாங்கள் புறப்பட்டு வந்துவிட்டோம். அப்போதுகூட அந்தப் படத்தில் பாடுவது குறித்து பேச்சு எதுவுமே எழவில்லை. சில நாட்களுக்குப் பிறகு ஹிந்துவில் 'பாரதி' படத்தைப் பற்றி ஒரு கட்டுரை வந்திருந்தது. அதில் கடைசி வரியில் "Will the poet's great grandson also be singing in this film? என்ற கேள்வியோடு முடித்திருந்தார்கள்.
சொல்லிவைத்த மாதிரி மறுநாள் இளையராஜா சாரின் அலுவலகத்தில் இருந்து ஃபோன் வந்தது. சுப்பையா என்ற அசிஸ்டெண்ட் பேசினார். "அண்ணன் உங்களை வந்து பார்க்கச் சொல்கிறார். வாருங்கள்" என்றார். நான் போய் ராஜா சாரைச் சந்தித்தேன். அவரும் "உங்களைச் சந்தித்ததில் ரொம்ப சந்தோஷம். நீங்கள் இந்தப் படத்தில் ஒரு பாடல் பாடவேண்டும் என்பது என் ஆசை" என்றார். நானும் அதுவரையில் அவரது இசையில் பாடியதில்லை என்பதால், "எனக்கும் உங்கள் இசையில் பாடுவதென்றால் சந்தோஷம்தான் சார்" என்றேன். அப்படித்தான், "கேளடா மானிடவா..:" பாடல் பதிவானது. (பாடலைப் பார்க்க/கேட்க: youtube.com/watch?v=AvNWE_9vbMM
ராஜா சாருக்கு நான் பாடியது அந்த ஒரே ஒரு பாடல்தான். அப்புறம் படத்தின் பிற பாடல்கள் பற்றி, இசை பற்றி எல்லாம் பேசினார். பாம்பே ஜெயஸ்ரீ பாடிய "நின்னைச் சரணடைந்தேன்" பாடலைப் பாடிக் காண்பித்தார். பாரதி படம், இசை பற்றிய பல கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார். அது ஒரு மறக்க முடியாத அனுபவம்.
கே: உங்கள் கச்சேரியில் நிகழ்ந்த சுவாரஸ்யமான சம்பவங்கள் ஏதாவது.... ப: திருப்பூரில் ஒரு கோயில் கச்சேரி. பாடிக் கொண்டிருக்கும்போது ஒரு சீட்டு வந்தது. பாடலை முடித்துவிட்டு அது என்னவென்று பார்த்தால், "கர்நாடக சங்கீதத்தை நிறுத்தவும். மெல்லிசைப் பாடல்களைப் பாடவும் - இவண்: காரியதரிசி" என்று இருந்தது. அன்று ஏனோ எனக்குக் கோபம் வரவில்லை. அவரை அழைத்து ஏன் இப்படி எழுதியிருக்கிறீர்கள் என்று கேட்டால், "ஆமாம். இப்படியே நீங்கள் கர்நாடக இசை பாடிக் கொண்டிருந்தால் பார்வையாளர்கள் எல்லோரும் எழுந்து போய்விடுவார்கள்" என்றார். "அவர்கள் எழுந்து போகவில்லையே. உட்கார்ந்துதானே இருக்கிறார்கள். நீங்களாக ஏன் இப்படித் தீர்மானம் செய்கிறீர்கள்?" என்று கேட்டேன். பின்னர் வரிசையாக நாலைந்து தெரிந்த பாடல்களைப் பாடி, பின்னர் கச்சேரிப் பத்ததியில் பாடி நிகழ்ச்சியை முடித்தேன். யாரும் எழுந்து போகாமல் இறுதிவரை இருந்து ரசித்தார்கள். பின்னர் அதே காரியதரிசி மேடையேறி, "இனிமேல் நீங்கள் இதுமாதிரிதான் பாடவேண்டும்" என்று கேட்டுக்கொண்டார். இப்படித்தான் ஆடியன்ஸின் நாடி பிடித்துப் பார்த்து மதுரை சோமு போன்றவர்கள் பாடினார்கள். அதே சமயம் இசையை அவர்கள் நீர்க்கவும் விடமாட்டார்கள். அது ஒரு கலை.
கே: பாரதியாரின் பாடல்களைத் திரையிசையில் சிறப்பாகக் கையாண்டவர் யார்? ப: ஜி. ராமநாதன். மற்றவர்களின் பாடல்களுக்கு இசையமைப்பது வேறு. பாரதியாரின் பாடல்களுக்கு இசையமைப்பது வேறு. பாரதி பாடலின் வரிகளே சக்தி வாய்ந்ததாக இருக்கும். இசையையும் தாண்டி நிற்கும் வல்லமை அதற்குண்டு. அதற்கு அமைக்கும் இசை மேலும் பாடலை சிறப்புறச் செய்வதாய் இருக்க வேண்டுமே தவிர, இசை அமுக்கிவிடக் கூடாது. இதில் கவனம் செலுத்தி, பாரதி பாடல்களை மிகச் சிறப்பாகக் கையாண்டவர் ஜி. ராமநாதன்.
கே: நீங்கள் எழுதிய கவிதைகள் குறித்து... ப: நான் அதிகம் கவிதைகள் எழுதியதில்லை. எப்போதோ எழுதுவேன். அவ்வளவுதான். கவிதை ரசனை உண்டு. எனது நிகழ்ச்சிகளுக்குத் தேவைஎன்றால் எழுதுவேன். கவிதை தானாக வரவேண்டும்.
கே: எத்தனை மொழிகளில் நீங்கள் பாடியிருக்கிறீர்கள் ப: தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு, சம்ஸ்கிருதம், பெங்காலி மொழிகளில் பாடியிருக்கிறேன்.
கே: பாரதி யானை மிதித்த அதிர்ச்சியில் இறந்துபோனார் என்பதாக ஒரு தகவல் பதிவாகியுள்ளது. அது சரியா? ப: யானை மிதித்த பிறகு ஆறுமாதம் அவர் உயிரோடிருந்திருக்கிறார். வேலை பார்த்திருக்கிறார். வயிற்றுப்போக்கு வந்து அதற்கு சரியாக மருந்து எடுத்துக் கொள்ளாததால்தான் அவர் காலமானார். ஆதிசங்கரர், இயேசுபிரான், சுவாமி விவேகானந்தர் எல்லாருமே இதே மாதிரியான வயதில் மறைந்தவர்கள்தான். அவர்கள் எல்லாம் அவதார புருடர்கள். வந்த வேலை முடிந்தவுடன் கிளம்பிச் செல்ல வேண்டியதுதான். அப்படித்தான் பாரதியும் மறைந்தார்.
கே: இசை சொல்லித் தருகிறீர்களா? ப: ஆமாம். ஆனால் ஐந்தாறு வருடங்களில் கச்சேரி மேடைக்குத் தயார் செய்துவிடலாம் என்ற நிலையில் உள்ள மாணவர்களுக்கு மட்டுமே சொல்லித் தருகிறேன். ஜெயா டிவியின் இசைநிகழ்ச்சி ஒன்றில் ரன்னர் அப் ஆக வந்த கார்த்திக் நாராயணன் எனது மாணவர். அவரும் ஒரு எஞ்சினியர்தான். நிறைய சபாக்களில் பாடியிருக்கிறார். நிறையப் போட்டிகளில் பரிசு வாங்கியிருக்கிறார். நல்ல திறமைசாலி. தற்போது இசையா, வேலையா என்ற டைலமாவில் அவரும் இருக்கிறார். அதுபோல சரத் பெங்களூரில் இருக்கிறார். நிறையக் கச்சேரிகள் செய்கிறார். மற்றொரு மாணவர் சிங்கப்பூரில் இருந்து பயில்கிறார். விஜய் நாராயணன் அமெரிக்காவில் இருந்து கற்றுக்கொள்கிறார். இவர் ஜெயா டிவி அமெரிக்காவில் நடத்திய நிகழ்ச்சியில் பரிசு பெற்றவர். மாணவர்களுக்கு நான் ஆன்லைனிலும் நேரடியாகவும் சொல்லித் தருகிறேன்.
கே: உங்கள் வாரிசுகளின் ஆர்வம் என்ன? ப: எனது மகன் நிரஞ்சன் பாரதி. தமிழார்வம் மிக்கவர். வீட்டில்கூட ஆங்கிலச்சொல் கலந்து பேசினால் கோபித்துக் கொள்வார். சிறு வயதிலேயே நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார். ஓர் இளைஞன் காதலைப்பற்றி எழுதுவதில் ஆச்சரியமில்லை. அவர் மரணத்தைப் பற்றியும் எழுதியது என்னை யோசிக்க வைத்தது. அந்தக் கவிதைகள் ஒரு தொகுப்பாகப் பின்னர் வெளிவந்தன. பி.ஈ., எம்பிஏ முடித்தாலும்கூட அவருக்குக் கலைத்துறையில்தான் ஆர்வம். தற்போது ஒரு தனியார் தொலைக்காட்சியில் பணிபுரிகிறார். சினிமாவில் மங்காத்தா, வடகறி, நளனும் தமயந்தியும் போன்ற படங்களில் பாடல்கள் எழுதியிருக்கிறார். அவருக்கு நான் சொன்ன ஒரே அறிவுரை, "நீ சினிமாவுக்குப் பாடல் எழுது. ஆனால் எந்தப் பரம்பரையில் வந்திருக்கிறாய் என்பதை நினைவில் வைத்து, தரம் இறங்காமல் பார்த்துக் கொள்" என்பதுதான்.
என் மகள் வித்யா பாரதி நன்கு பாடுவார். குரல்வளம் உண்டு. கச்சேரிகள் செய்திருக்கிறார். எகனாமிக்ஸ் படித்திருக்கிறார். ஆனால், இசையைத் தொழிலாக எடுத்துக் கொள்ளவில்லை. நானும் வற்புறுத்தவில்லை. யார் யாருக்கு என்ன பிடித்திருக்கிறதோ அதைச் செய்வதுதான் நல்லது, இல்லையா?
சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்
*****
"பொன்னார் மேனியனே" ஒரு ஊரில் கச்சேரி. சற்று மந்தமான கூட்டம். தியாகராஜ கீர்த்தனை எல்லாம் பாடினேன், எடுபடவில்லை. திடீரென ஒரு தேவாரப் பாடல் நினைவுக்கு வந்தது. அதைக் கர்நாடக இசைச் சாயலில் பாடினேன். உடனே கூட்டத்தில் உற்சாகம், வரவேற்பு. கைதட்டல். "பொன்னார் மேனியனே" என்ற பாடல் அது. சபைக்கு ஏற்பப் பாடவேண்டும்; அதே சமயம் தரத்தைக் குறைக்கக் கூடாது. அப்படி இருந்தால் எவரும் ரசிப்பார்கள்.
இசைக்கு எவரும் அன்னியமில்லை ஒருமுறை குவைத்தில் ஒரு ஜுகல்பந்தி. கர்நாடக இசை பாடிய என்னுடன், ஹிந்துஸ்தானியில் பாட நண்பர் ரமேஷ் நாராயணன் வந்திருந்தார். நிறையக் குவைத்தியர்களும் வந்து உட்கார்ந்திருந்தனர். அவர்களுக்கு ராமா, கிருஷ்ணா என்று பாடினால் எப்படி புரியும் என்று யோசித்தோம். பொதுவாக இருவரும் சேர்ந்து கச்சேரி செய்யும்போது "மங்களம் ஹரி" என்று கர்நாடக இசையில் நானும், ஹிந்துஸ்தானியில் அவரும் பாடுவோம். இன்றைக்கு அப்படிப் பாடினால் இவர்கள் ரசிப்பார்களா என்று யோசித்தோம். அப்போது ரமேஷ் நாராயணன் "அல்லா.." என்று பாட ஆரம்பித்தார். எனக்கோ ஒன்றும் புரியவில்லை. சாய்ந்து உட்கார்ந்திருந்த ஷேக்குகள் நிமிர்ந்து உட்கார ஆரம்பித்தார்கள். அப்புறம் நானும் கர்நாடக இசையில் அல்லாவைப் பற்றிப் பாட ஆரம்பித்தேன். நல்ல வரவேற்பு!
எல்லாம் மனதுதான் காரணம். அப்போதுதான் பாரதியாரை நினைத்துக் கொண்டேன். அவர் பாடாத தெய்வம் எது? "ஈசன் வந்து சிலுவையில் மாண்டான்" என்று இயேசு கிறிஸ்துவைப் பற்றி பாடியிருக்கிறார். "அல்லா... அல்லா... அல்லா..." என்று பாடியிருக்கிறார். அதுமாதிரி விசாலமான மனது மனிதர்களுக்கு வேண்டும்.
லண்டனில் ஒருமுறை ஒரு ஃப்யூஷன் கான்செர்டிற்குப் போயிருந்தோம். அங்கே ஷாரன் ரோஸ் (Sharon Rose) என்று ஒரு பாடகர். அவருடன் இணைந்து பாடியது மறக்க முடியாதது. லண்டன் ஸ்கூல் ஆஃப் மியூசிக் நிகழ்ச்சிகளுக்காக நான் அடிக்கடி லண்டன் செல்வது வழக்கம். எனது நண்பர் "சமுத்ரா" என்று ஓர் இசைக்குழு வைத்திருந்தார். அவர் ஒருமுறை நாம் ஃப்யூஷன் மாதிரி செய்யலாம். நீங்கள் வாருங்கள் என்று அழைத்தார். நானும் போயிருந்தேன். ஆடியன்ஸில் நிறைய ஐரோப்பியர்கள். அவர்கள் ரசிக்கும்படியாகவும், தரத்திலிருந்து தாழாமல் அதற்கேற்பப் பாடினேன். நல்ல வரவேற்பும் பாராட்டும் கிடைத்தது.
- ராஜ்குமார் பாரதி.
*****
ஒளி அவருக்குப் பிடிக்கும் ஒரு கவிஞராக, மனிதராக, எழுத்தாளராக, சிந்தனையாளராக பலவிதங்களில் பாரதி என்னைப் பாதித்திருக்கிறார். அவர் நூற்றாண்டுகள் தாண்டிச் சிந்தித்தவர். இன்றைக்கும் அவரது சிந்தனைகளில் பலவற்றை நாம் எட்ட முடியவில்லை என்பது உண்மை. அன்பு, ஒளி, காற்று, தீ இதையெல்லாம் அடிக்கடி அவர் பயன்படுத்தியிருப்பார். அன்பு என்பது universal quality. அன்பைப் பற்றி நிறைய இடங்களில் அவர் பேசுகிறார். "அன்பினை கைக்கொள்", "உலகத் துயர் யாவும் அன்பினால் போகுமன்றே", "அன்பு செய்தல் தொழில்" என்றெல்லாம் பாடியிருக்கிறார். பாடுவது மட்டுமல்ல; அப்படியே வாழ்ந்துமிருக்கிறார். எழுத்துக்கும், செயலுக்கும் பேதமிருக்கவில்லை.
ஒளி அவருக்கு மிகவும் பிடிக்கும், அது இருளை விரட்டும் என்பதால். அது மாதிரிதான் 'தீ'. அதற்குத் தூய்மைப்படுத்தும் தன்மை இருப்பதால். தீ எல்லாவற்றையும் தனதாக்கித் தானாகி நிற்கும் என்பதால் அவருக்குத் தீயைப் பிடிக்கும். Oneness எனப்படும் ஒருமையுணர்வை அவர் மிகவும் விரும்பியிருக்கிறார். பல தெய்வங்களைப் பற்றிப் பாடியிருப்பினும், "அறிவே தெய்வம்" என்று உரைத்திருக்கிறார். காக்கைச் சிறகு, பச்சை மரங்கள், தீ என எல்லாவற்றிலும் இறைவனைக் கண்டவர் அவர். பாரதியின் கவித்திறன், மொழியாளுமை, மொழிமீதான விருப்பம், கற்பனை, இரக்கம், எல்லாவற்றையும் பாடுந்திறன் என்று அவரது தாக்கங்கள் எனக்கு நிறையவே உண்டு.
- ராஜ்குமார் பாரதி. |