மாற்றம் என்பது...
சென்னையில் மட்டும் அக்டோபர் 26 ஒரே நாள் இரவில் 20 செ.மீ. மழை பெய்துள்ளது. காற்றும் மழையும் வலுவாக இருக்கின்றன. அன்றையத் தேதிவரை மழையின் காரணமாக மட்டுமே 56 பேர் இறந்துபோயினர். வழக்கம்போல இன்னும் 48 மணி நேரத்துக்கு மழைபெய்யும் என்று வானிலைத் துறை கூறிவிட்டது. சிதம்பரம், திருச்சி ஆகிய ஊர்கள் தீவுகளாகிவிட்டன. காவேரி வரும் வழியில் 500க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ளத்தில். என்றுமே தண்ணீர் கண்டிராத பாலாறு மற்றும் வைகை நதிகளில் வெள்ளம்!

தமிழ்நாட்டில் மட்டுமா, கர்நாடகம், ஆந்திரம், ஒரிஸ்ஸா, வங்காளம்... என்று வெள்ளம் பாதித்த மாநிலங்களின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. போதாததற்கு பூகம்பத்தால் நிலைகுலைந்த காஷ்மீர் பகுதிகளில் பெய்யும் மழை நிவாரணப் பணிகளுக்குத் தடையாக இருக்கிறது. குளிர் வேறு அவர்களை வாட்டுகிறது. வானமே கூரையாக, உற்றார் உறவினரைப் பலிகொடுத்துவிட்டு இருக்கும் அவர்களது நிலைமை வார்த்தைகளுக்கு அப்பாற்பட்ட சோகம்.

'நிலம் ஓர் ஆலயமணி போல அதிர்ந்துகொண்டே இருக்கிறது' என்று சுனாமிக்குப் பின் ஒரு நிலநடுக்க வல்லுநர் கூறியதுதான் நினைவுக்கு வருகிறது. உலகமெங்கும் காட்டுத்தீ, எரிமலை வெடிப்பு, தொடர் புயல்கள்...

மனிதனின் வரம்பு மீறல்கள்தாம் காரணமா? இயற்கை தன்னளவிலே அறிவோடு இயங்கிப் பழிவாங்க வல்ல சக்தியா? அறிவியல் எல்லாவற்றையுமே முன்கூட்டி உணர்ந்து தடுக்கும் வல்லமையை இனிவரும் நாட்களிலாவது மனிதனுக்குத் தந்துவிடுமா? அத்தகைய வல்லமை இல்லாதிருக்கும்போதே தன்னை அளவற்ற பெருஞ்சக்தியாக மனிதன் கருதுவதில்தான் பிரச்சனையே துவங்குகிறதா?

பல கேள்விகளுக்கு விடைகிடைக்காத இந்தத் தருணத்தில், நாம் ஓர் அசாதாரணமான காலகட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம் என்று மட்டும்தான் சொல்லத் தோன்றுகிறது.

******


தென்றல் ஆறாவது ஆண்டில் காலெடுத்து வைக்கிறது. சற்றும் பரபரப்பில் ஈடுபடாமல், ஆரவாரமில்லாமல் தனது தரத்தை இவ்வளவு நாள் காப்பாற்றி வருவதில் ஆசிரியர் குழுவுக்கும் பதிப்பாளருக்கும் மிகுந்த பெருமை உண்டு. 'தமிழ்நாட்டில் கூட இத்தகைய பத்திரிகை கிடையாது' என்று சாதாரண வாசகரும், பிரபல எழுத்தாளர்களும் அவ்வப்போது எங்களுக்குக் கடிதங்கள் எழுதும்போது எங்களது பொறுப்பு அதிகமாவதை உணர்கிறோம்.

அதே சமயத்தில் இதனைச் சாத்தியமாக்கியதில் விளம்பதாரர்கள், எழுத்தாளர்கள், வாசகர்கள் என்று அனைவருக்கும் பெரும்பங்கு உண்டு. அவர்களுக்கு எமது நன்றி. வரும் ஆண்டிலும் ஆதரவைத் தொடரவேண்டும்.

மாற்றம் என்பது வளர்ச்சியின் அடிப்படை நியதி. இன்னும் என்ன மாற்றங்கள் செய்யலாம் என்று ஆசிரியர் குழு யோசித்து வருகிறது. நீங்கள் உங்கள் யோசனைகளை எழுதலாமே. பரிசீலித்துத் தகுந்தவற்றை நடைமுறைக்குக் கொண்டு வருவோம்.

வாசகர்களுக்கு தீபாவளி மற்றும் ரமலான் வாழ்த்துகள்.

'தென்றல்' ஆசிரியர் குழு
நவம்பர் 2005

© TamilOnline.com