2014 ஜூன் 14-15 நாட்களில் பாண்டியாக் பராசக்தி ஆலயத்தில் 14ம் ஆண்டு வைகாசி விசாகத் திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்பட்டது. மிச்சிகன் பக்தர்கள் மற்றும் கோவில் நிர்வாகக் குழுவினரின் உதவியுடன் பழனியப்பன் மற்றும் பிரியா விழாவை ஒருங்கிணைந்து நடத்தினர். இதற்கான பாத யாத்திரையில் சென்ற ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் அதிக எண்ணிக்கையில் பங்கேற்றனர். பின்னர் ஆலயத்தில் கட்டப்பட்டிருந்த காவடிகளுக்கு காவடி பூசை நடைபெற்றது.
15ம் தேதி ஞாயிற்றுக் கிழமை வைகாசி விசாகத்தன்று காலை 9:30 மணி அளவில் விழா தொடங்கியது. அழகாக அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணியர் முன்செல்ல, குழந்தைகளும், பெரியவர்களும் காவடி மற்றும் பால்குடங்களோடு ரதத்தைத் சந்நிதிக்குக் கொண்டு சென்றனர். பின்னர் பன்னீர், சந்தனம், பால், பஞ்சாமிர்தம், விபூதி அபிஷேகங்கள் நடந்தேறின. திருப்புகழ் சேர்ந்திசையும், குழந்தைகளின் பஜனைப் பாடல்களும் விழாவுக்கு இனிமை சேர்த்தன. ஆலய ஸ்தாபகர் டாக்டர். குமார் முருகனின் பெருமை மற்றும் ராஜ கோபுரத்தில் பிரதிஷ்டை செய்ய இருக்கும் விக்கிரகங்களைப் பற்றி உரையாற்றினார். அடுத்து 'சொல்லின்செல்வி' திருமதி. உமையாள் முத்து முருகப்பெருமானை வழிபடுவதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார். பிரசாதம் வழங்கலோடு விழா இனிது நிறைவேறியது.
அழகம்மை மெய்யப்பன், பாண்டியாக், மிச்சிகன் |