ஜூன் 15, 2014 அன்று திரு. பார்த்தாவின் கதை, வசனம், இயக்கம், நடிப்பில் அரங்கேறியது 'ஸ்டார் நைட்' நகைச்சுவை நாடகம். ஒரே மேடையில் ரஜனிகாந்த், கமல்ஹாசன், திரிஷா, வடிவேலு என எல்லா நட்சத்திரங்களையும் பார்த்தால் எப்படி இருக்கும்! அந்தப் பிரபல நடிகர்களைப் போலவே அருமையாக நடித்து ரசிகர்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தினார்கள் பார்த்தாவின் 'மிசிசாகா கிரியேஷன்ஸ்' குழுவினர். அன்று தந்தையர் தினம் வேறு. மைக்கல் பவர் பள்ளி அரங்கத்தில் நடைபெற்ற அந்த நாடகத்தின் நடிகர்களைப் பார்த்து, 'ஹா! ரஜனி', 'கமல் கமல்' என்று கூச்சல் அரங்கத்தை அதிரவைத்தது.
கதை இதுதான். திரைப் பிரபலங்கள் ஒரு கலைநிகழ்ச்சி நடத்தி உதவி புரிய விமானத்தில் வருகிறார்கள். நடுவழியில் விமானத்தில் ஒரு பிரச்சினை! வழியிலுள்ள ஒரு சிறு தீவில் இறங்கிவிடுகிறது. விமான பைலட் சோதனைக்குப்பின் விமானம் பழுதுபார்க்க இரண்டு மூன்று நாட்களாகும் என்கிறார். ஆக அந்தச் சிறு தீவில் எப்படி பிரபலங்களும் பிறரும் நாட்களைக் கழிக்கிறார்கள் என்பதுதான் கதை.
ரஜனியாக நடித்த பார்த்தா சங்கரன் கால்வரை புரளும் கறுப்புக்கோட்டுப் போட்டுக்கொண்டு, ஸ்டைலாக நடந்து, கண்களைச் சுருக்கிக் கொண்டு பேசியபோது சூப்பர்ஸ்டாராகவே ஆகிவிட்டார். கமல்ஹாசன் வேடத்தில் ஹேமந்த், திரிஷாவாக மது ரவீந்திரா எல்லாம் கனகச்சிதம். "இந்தப் பெண் திரிஷாவின் உறவினரா?" எனக் கேட்டார்கள். வடிவேலு வந்தாலே கோமாளித்தனம்தானே. "ஏடாகூடமா ஏதாவது சொல்லி மறுபடி கவித்திடாதீங்கையா" என்று கெஞ்சும்போது அரங்கம் அதிர்ந்தது. ஹூஸ்டனிலிருந்து வந்த கிருஷ்ணா சங்கர், வடிவேலுவாக வாழ்ந்தார் அந்த இரண்டு மணி நேரமும்.
விமானத்தில் வேறு பயணிகளும் இருப்பார்களே. கமல், ரஜனி பற்றி பேசிக்கொண்டே இருக்கும் வாணியாக ஸ்ரீநிதி; நார்னியாக சுப்பு; போலீசாக ராமசேஷன்; ஜானகி பாட்டியாகக் குளத்து சங்கர் எல்லோரும் அருமையாக நடித்தார்கள். விளம்பரத்தில் சங்கரின் பெயர் போடாமல் இருந்தால் பார்ப்பவர்கள் பாட்டியை ஒரு பெண்ணே நடிப்பதாக நம்பியிருப்பார்கள்.
நாடகத்தின் கடைசியில் பெரிய திருப்பம். அதைப் பைலட்டாக நடித்த ஆனந்தும், ஆகாஷாக, குமார் ராமகிருஷ்ணனும், ஆஷாவான அருணாவும், காமிரா ஸ்ரீனி சேஷாத்திரியும் நடத்தி வைத்தார்கள். என்ன திருப்பம் என்று கேட்கிறிர்களா? நீங்களே நேரில் பாருங்களேன். பார்த்தாவுக்கு ஒரு மின்னஞ்சல் தட்டுங்கள். அவர் உங்கள் ஊரில் எல்லாப் பிரபலங்களையும் கொண்டுவந்து இறக்கிவிடுவார். தொடர்புக்கு: www.mississaugacreations.com
அலமேலு மணி, டொரொன்டோ, கனடா |