BATM: முத்தமிழ் விழா
ஜூலை 19, 2014 அன்று வளைகுடாப் பகுதி தமிழ் மன்றம் சார்பில் முத்தமிழ் விழா சான் ரோமான் நகரில் நடைபெற்றது. மன்றத் தலைவர் திரு. சோலை அழகப்பன் வரவேற்புரை வழங்கினார். சான்ஃபிராசிஸ்கோ இந்தியத் தூதரக அதிகாரி திரு. பாஸ்கர் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். திரு. அசோக் சுப்ரமணியம் ஒருங்கிணைப்பில் குழந்தைகள் இனிய குரலில் 'கவிஞன் கண்ட கனவு' என்ற தலைப்பில் பாரதியாரின் தேசபக்தி மற்றும் தமிழின் பெருமை பற்றிய பாடல்களைப் பாடினர்.

விரிகுடாப் பகுதியில் முதல்முறையாக உள்ளூர் மக்களைக் கொண்டு 'நீயா? நானா?' மாதிரி விவாதமேடை நடைபெற்றது. திரு. அறிவொளி தலமையில் "உண்ண உண்ண திகட்டாதது, உடல் ஆரோக்கியத்துக்கு உகந்தது சைவமா? அசைவமா?" என்ற தலைப்பில் விவாதம் நடந்தது. நிகழ்ச்சியின் முத்தாய்ப்பாகக் கலைஞர்கள் அம்மாபேட்டை கணேசன் மற்றும் ஹரிகிருஷ்ணன் வழங்கிய தோல்பாவைக் கூத்து நடைபெற்றது. ராமாயணத்தில் வாலி வதம் படலத்தைக் கூத்தாக வழங்கினர்.

இளம் பாடகர்களைக் கண்டறியும் பாடல் போட்டிக்கான தேர்வும், அமரர் கல்கியின் 'சிவகாமியின் சபதம்' நாடகத்திற்கான நடிகர்கள் தேர்வும் நடைபெற்றன. வளைகுடா பகுதித் தமிழ்மன்றம் நவம்பர் மாதம் 8ம் தேதி சாபோட் கல்லூரியில் தமிழர் திறமையை வெளிக்கொண்டு வர ஒரு பெரிய நிகழ்ச்சியை நடத்த உள்ளது. வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவையின் அடுத்த ஆண்டு விழா விரிகுடாப் பகுதியில் நடைபெறும் என அறிவிக்கப் பட்டது.

சதுக்கபூதம்,
சான் ரமோன்

© TamilOnline.com