அரங்கேற்றம்: அனிகா ஐயர்
ஜூலை 19, 2014 அன்று செல்வி அனிகா ஐயரின் பரதநாட்டிய அரங்கேற்றம் Upper Dublin High School, Fort Washington, Pennsylvania வளாகத்தில் நடைபெற்றது. அனிகா, கடந்த 9 ஆண்டுகளாக குரு திருமதி. வசந்தி நாகராஜனிடம் நடனம் பயின்று வருகிறார். நடராஜப் பெருமானுக்கு புஷ்பாஞ்சலி செய்தபின், "ஆனந்த நர்த்தன கணபதிம்" பாடலில் விநாயகப் பெருமானை கண்முன்னே நிறுத்தினார். அலாரிப்பில் அனைவரையும் தாள அசைவுகளால் கட்டிப் போட்டார். ஜதிஸ்வரத்தில், சொல்கட்டுக்கு ஏற்ப அழகாக நடனமாடினார். விஷ்ணுவின் அவதாரங்களைச் சித்திரித்தது தோடயமங்கலம் ராகமாலிகா, தாளமாலிகா. "நீ மனமிரங்கி வந்தருள்வாய்" என்ற ஆண்டவன்பிச்சை அவர்களின் வர்ணத்தில் அபிநயம், நிருத்தம் இரண்டையும் கலந்து, பக்தி பாவத்தை அழகுற வெளிப்படுத்தினார். இடைவேளைக்குப் பின் "போ சம்போ" ஸ்துதியில் தன் கம்பீரமான நடனத்தால், ஆடற்கடவுளின் ஆசியை வேண்டினார். "பாக்யாத லக்ஷ்மி பாரம்மா" பதத்தில், ஆசை, பாசம், பரபரப்பு, கவனம், கவலை, துள்ளல் எனப் பலவிதமான உணர்ச்சிகளைக் காட்டி ஆடியது மனதைக் கொள்ளை கொண்டது. "தாயே யசோதா"வுக்குப் பின்னர் கற்பகாம்பாளைப் போற்றிய தில்லானா, மங்களம் என நிகழ்ச்சியை அனிகா நிறைவு செய்தார்.

நிகழ்ச்சியை அழகாகத் தொகுத்து வழங்கினார் ஷோபா நாராயணன். அரங்க வாயில், மேடை ஆகியவற்றைக் கலைநயத்துடன் அமைத்திருந்தார்கள் அனிகாவின் தாய் லக்ஷ்மியும் தந்தை ரமேஷும். குரு திருமதி. வசந்தி நாகராஜன் (நட்டுவாங்கம்), திருமதி. சாவித்திரி ராம்நாத் (பாட்டு), திரு. முரளி பாலச்சந்திரன் (மிருதங்கம்), திரு. பாலச்சந்தர் கிருஷ்ணராஜ் (புல்லாங்குழல்),திரு. ரகு ஜெயதீர்த்தா (வயலின்) என அனைவரும் நிகழ்ச்சிக்கு பக்கபலமாக இருந்தனர்.

குரு வசந்தி நாகராஜன் 13 வருடங்களாக நாட்டியம் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கிறார். அது மட்டுமின்றி, சின்மயா மிஷனில் சேவகி, பள்ளி ஆசிரியை, உணவுத்திட்ட நிபுணர் எனப் பல துறைகளில் வித்தகராகவும் இருக்கிறார். அனிகா சிறு வயதிலிருந்தே ஃபிலடெல்ஃபியாவில் உள்ள Cradles and Crayons என்னும் தன்னார்வ நிறுவனத்திற்குத் தனது நடன நிகழ்ச்சிகளின் மூலம் நிதி திரட்டி உதவி செய்து வருகிறார். அரங்கேற்றத்தில் கிடைத்த வெகுமதிகளையும் அந்த நிறுவனத்திற்கே வழங்கினார்.

லதா சந்திரமௌலி,
காலேஜ்வில், பென்சில்வேனியா

© TamilOnline.com