ஜூலை 20, 2014 அன்று ஆஸ்டினிலுள்ள 'ரக்ஷிதா நிருத்யாலயா' பரதநாட்டியப் பள்ளியில் திருமதி. பவித்ரா ராமதாஸின் மாணவி செல்வி. சங்கவை கணேஷின் அரங்கேற்றம் நடைபெற்றது. 5 வயதுமுதல் நடனம் பயின்று வரும் சங்கவையின் நளினமான அங்க அசைவுகளும் சட்டென மாறும் முகபாவங்களும் அவையோரை நெகிழச் செய்தன. விஷ்ணுவின் பத்து அவதாரங்களை பவுலி ராகத்தில் "ஸ்ரீமன் நாராயணா"வில் மிக அற்புதமாகச் சித்திரித்தார். குரு பவித்ரா ராமதாஸின் நட்டுவாங்கம், சுதேவ் வாரியாரின் வாய்ப்பாட்டு, சுதாமனின் மிருதங்கம், ரமணி தியாகராஜனின் புல்லாங்குழல், டி.எஸ். கிருஷ்ணமூர்த்தியின் வயலின் ஆகியவை அரங்கேற்றத்திற்கு சிறப்புச் செய்வதாக அமைந்தன.
சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுச் சங்கவையின் திறமையை வாழ்த்தி நாட்டியாலயா நடனப் பள்ளி நிறுவனர் திருமதி. வினிதா சுப்ரமணியன், இந்தியா ஃபைன் ஆர்ட்ஸ் நிறுவனர் டாக்டர். நாகராஜன் ஆகியோர் பேசினார்கள்.
தனக்கு அன்பளிப்பாக வந்த $2500ஐயும் தமிழ்நாடு அறக்கட்டளையின் TNF-ABC கல்வித் திட்டத்திற்குச் சங்கவை வழங்கினார். TNF சார்பாக சங்கவைக்கு நினைவுப் பரிசு வழங்கிப் பேசிய TNF துணைத்தலைவர் சோமலெ. சோமசுந்தரம், முல்லைக்குத் தேர் கொடுத்த வள்ளல் பாரியின் மகள் சங்கவையின் பெயர்கொண்ட ஆஸ்டின் சங்கவையின் பெயரிலும், செயலிலும் ஈகையைக் காண்பதாகவும் சங்கவையின் கொடையால் தமிழகத்தின் கிராமப்புற மாணவ, மாணவியர் பெரிதும் பயன்பெறுவர் என்றும் கூறினார்.
இரவி, ஆஸ்டின், டெக்சஸ் |