ஆகஸ்டு 2014: வாசகர் கடிதம்
தமிழ்கூறும் நல்லுலக வித்தகர் பி.டி. சீனிவாச ஐயங்கார் விவரித்த தமிழின வரலாற்றை, தமிழ் மொழியின் மேன்மையை, இலக்கியச் சிறப்பை, தமிழரது பண்பாட்டு வளத்தை உலகமக்கள் தெரிந்து கொள்ளும் வண்ணம் எடுத்துரைத்த தென்றலுக்கு நன்றி. சேர, சோழ, பாண்டியர்கள் பற்றிய குறிப்பும், கல்லாக இறுகிவிட்ட நத்தையின் புதை படிவமே 'சாளக்கிராமம்' என்பது போன்ற கருத்துக்களும் புதையுண்டு போன நிஜங்களை வெளிப்படுத்தும் நெம்புகோலாகும் வைரவரிகளாகும். புதுக்கோட்டை மாவட்டத்தில்தான் அதிகமான கற்கால மனிதனின் ஈமச்சடங்கு எச்சங்கள் கிடைத்தன என்ற கருத்தின்மூலம் ஆதிமனிதன் குறித்து இவர் சொல்லியிருப்பது புதுக்கோட்டை மாவட்டத்தில் பிறந்த என் போன்றவர்களுக்கு தேனாக இனித்தது. பட்டை தீட்டிய தென்றலுக்குப் பாராட்டு.

- அரிமளம் தளவாய் நாராயணசாமி,
ஹூஸ்டன், டெக்சாஸ்

*****


தென்றல் வரும் திசைநோக்கித் தேடினேன்.
அன்றலர்ந்த மலர்போல வந்தது.
இன்றுவரை இதுபோலொரு நூல் கண்டதில்லை,
என்று நானென்ன சொல்ல? கதை
வென்றவர்க்கு என் நன்றியைச் சொல்ல வந்தேன்.
குன்றாக. மலைக்குன்றாக நின்று வளர
என் வாழ்த்துக்கள்

- குருப்ரியா,
தென்கலிஃபோர்னியா

*****


தங்கள் எழுத்தாளர் வரிசை மிகவும் அருமை. முதுபெரும் எழுத்தாளர் ரா.கி. ரங்கராஜன் ஒரு சிறந்த கதாசிரியர், பத்திரிகையாளர், திறமை உள்ளவர்களை ஊக்குவிப்பதில் வல்லவர் .இவர் அறிமுகப்படுத்திய யாரும் சோடை போனதில்லை. இவர் படைத்த மூலக்கதை சுமைதாங்கி, மறைந்த இயக்குனர் ஸ்ரீதருக்குப் பெருமை தேடித்தந்த படம். குமுதம் பத்திரிகையில் நீண்டகாலம் பணியாற்றியவர். எல்லோராலும் விரும்பப்பட்டவர். எளிய வாழ்க்கை மேற்கொண்டவர். அவருக்கு அஞ்சலி.

கே. ராகவன்,
டென்வர், கொலராடோ

*****


கடந்த 16 ஆண்டுகளாக நான் தொடர்ந்து அமெரிக்காவுக்கு வந்துகொண்டிருக்கிறேன். நான் தென்றலைப் படித்தேன், மிகவும் மகிழ்ச்சி தந்தது. பேரா. ஆரோக்கியசாமி பால்ராஜ் நேர்காணல் மிகச்சிறப்பு. அது நமக்கு ஒரு பாடம். நானும் கோயம்புத்தூர்க்காரன். இங்கு நமது மக்கள் செய்யும் சாதனைகளை இந்தியாவிலுள்ளவர்கள் அறிவதில்லை. அறியத் தந்தமைக்கு நன்றி, வாழ்த்துக்கள்.

A.V. ராமராஜ்,
சான் டியகோ, கலிஃபோர்னியா

*****


தமிழ் நாட்டிலிருந்து பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் தமிழர்களுக்காக வெளியிடப்படும் 'தென்றல்' மாத இதழைக் கண்டதும் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. தமிழ் நாட்டில் பிறந்து 60 ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்தும், தெரிந்திராத விஷயங்களை இந்த இதழில் கண்டு மகிழ்ந்தேன். அவை திரு. பி.டி. ஸ்ரீனிவாச ஐயங்கார் மற்றும் எழுத்தாளர் கம்பதாசன் பற்றியனவாகும். உங்களது சேவையைப் பாராட்டுகிறேன்.

அ.சீ.நரசிம்மன்,
சிகாகோ

© TamilOnline.com