நவம்பர் 5, 2005 அன்று விநித்ரா மணியின் நடன அரங்கேற்றம் சாண்டா கிளாரா கன்வென்ஷன் சென்டர் அரங்கத்தில் நடைபெற்றது. பிரபல லாஸ்யா நடனக் குழுமம் இதனை வழங்கியது. லாஸ்யாவின் இயக்குநரும், நாட்டியக் கலைஞருமான வித்யா சுப்ரமணியனிடம் 9 வருடங்களாக விநித்ரா நாட்டியம் பயின்று வருகிறார். லாஸ்யாவின் தயாரிப்புகளான 'சாகுந்தலம்' மற்றும் 'Living Seulptures' ஆகிய நடன நிகழ்ச்சிகளில் விநித்ரா பங்கேற்றிருக்கிறார். கடந்த கோடை விடுமுறையில் பிரபல நாட்டிய கலைஞர் அடையார் லக்ஷ்மண் அவர்களிடம் நாட்டியம் பயிற்சி பெறும் நல்வாய்ப்பும் விநித்ராவிற்குக் கிட்டியது. விநித்ராவின் அயராத உழைப்பும் குரு வித்யாவின் பயிற்றுவிக்கும் திறனும் வெளியாகும் விதத்தில் அரங்கேற்ற நிகழ்ச்சி சிறப்பாக அமைந்திருந்தது.
கம்பீர நாட்டையில் ஒலித்த மல்லாரியுடன் நடன நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து மகாராஜபுரம் சந்தானம் அவர்கள் இயற்றிய 'சதாசிவன் மைந்தனே' என்ற கணபதி துதிக்கும், மகாகவி பாரதியின் 'முருகா, முருகா' பாடலுக்கும் விநித்ரா நடன மாடினார். நடராஜப் பெருமானைத் துதிக்கும் 'கொஞ்சம் சதங்கை திகழும்' என்ற மதுரை முரளிதரனின் லதாங்கி ராக வர்ணத்திற்கு ஆடிய நடனம் மிகக் களையாக அமைந்தது.
'சுரைபண்டி'யில் விநித்ரா அமர்ந்த விதம், நறுக்குத் தெரிவித்தாற் போல அமைந்த அடவுகள், களைப்புச் சற்றும் தெரியாமல் அனாயசமாகப் பிடிக்கப்பட்ட நடனத் தோற்றங்கள் இவை யாவும் ரசிகர்களின் கரகோஷத்தைப் பெற்றன. 'நடனம் ஆடிடும் நடேசனுக்கு' வர்ணம், 'கண்டபேடவோ' என்ற புரந்தரதாசர் பாடல், பெஹாக் ஜாவளி ஆகியவற்றுக்கு ஆடிய நடனங்கள், அபி நயத்தில் விநித்ராவிற்கு இருந்த பயிற்சிக்கு எடுத்துக் காட்டாகத் திகழ்ந்தன. லால்குடி ஜெயராமனின் நளினகாந்தி ராகத் தில்லானாவிற்கு ஆடிய விநித்ரா சிவனின் நாட்டிய தாண்டவத்தையும், பார்வதியின் 'லாஸ்யம்' நிறைந்த நளினமான நடனத் தையும் மிக அழகாக வெளிப்படுத்தினார்.
பின்னால் பாடியஆஷா ரமேஷின் இனிய குரலும் சாந்தி நாராயணனின் வயலினும் நாராயணனின் மிருதங்கத்தோடு இணைந்து சிறந்த பின்னணி இசையை வழங்கின.
அழகிய புன்னகை தவழும் இன்முகம், பேசும் கண்கள், 'பளிச்'சென்று முத்திரைகள் பிடிக்கும் விரல்கள், தாளத்துடன் ஒருங்கிணைந்து விறுவிறுப்பாக ஆடும் பாதங்கள் இவை யாவும் வாய்க்கப் பெற்ற விநித்ரா மணியின் அரங்கேற்ற நிகழ்ச்சி ஒரு இனிய கவிதையைப் படிப்பதைப் போன்ற அனுபவத்தை ரசிகர்களுக்கு ஏற்படுத்தியது.
அருணா |