வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் நடத்திய குழந்தைகள் தினவிழா
நவம்பர் 5, 2005 அன்று குழந்தைகள் தின விழாவை வளைகுடாப் பகுதித் தமிழ் மன்றம் சான் ஓசே நகரத்தின் CET அரங்கத்தில் சிறப்பாகக் கொண்டாடியது. அறிவன் தில்லைகுமரன் மற்றும் ஹன்சா கோபால் ஆகியோரின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி துவங்கியது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளரும், மன்றப் பொருளா ளருமான பாகீரதி சேஷப்பன் வரவேற்புரை ஆற்றினார். இளைஞர் ஒருங்கிணைப்பாளர் கோபால் குமரப்பன், சிவகாமி சாம்பசிவம் மற்றும் அரவிந்த் டில்லிதுரை ஆகியோருடன் இணைந்து நிகழ்ச்சியை விறுவிறுப்பாக நடத்தித் தந்தார். குழந்தைகள் ஆடல் பாடல்களின் இடையே, பாகீரதி அவர்கள் 2004-ம் ஆண்டு மன்ற செயற்குழு உறுப்பினர் களை அறிமுகப்படுத்தித் தமிழ் மன்றத்தின் சார்பாக சிறப்புச் செய்தார். பின்னர் 2006-ம் ஆண்டு செயற்குழு உறுப்பினர்கள் அறிமுகப்படுத்தி வைக்கப்பட்டனர்.

இந்த நாளின் மிகப்பெரிய சிறப்பு, ஐந்தாண்டுக் காலமாக அமெரிக்கத் தமிழர்களுக்கு நல்ல தமிழில் தரமான திங்களிதழை அளித்துவரும் தென்றல் இதழின் பதிப்பாளரான சி. கே. வெங்கட் ராமன் அவர்களுக்குத் தமிழ் மன்றம் சிறப்பு செய்ததுதான். வெங்கட்ராமன் அவர்களைத் தில்லை குமரன் அறிமுகப்படுத்த, தமிழ்ப் பண்பாட்டு மையத்தின் இயக்குனர் சிவகுமார் சேஷப்பன் தென்றலின் தமிழ்த் தொண்டைப் பாராட்டிப் பட்டயம் வழங்கிப் போற்றினார்.

நிகழ்ச்சியின் இடையே லீனா மணிமேகலை அவர்கள் இயக்கி நடித்த 'Love Lost' என்னும் குறும்படம் திரையிடப் பட்டது. கனவுப்பட்டறையைச் சார்ந்த லீனா இயக்கிய பல குறும்படங்கள் சனிக்கிழமை டிசம்பர் 3-ம் நாள் மதியம் 4:30 மணியளவில் ICC, மில்பிடஸ் அரங்கத்தில் திரையிடப் படவுள்ளன.

இறுதியில் கோபால் குமரப்பன் அவர் களின் நன்றியுரையுடன் விழா நிறை வடைந்தது.

தில்லை குமரன்

© TamilOnline.com