1) 121, 225, 361, ... -- வரிசையில் அடுத்து வர வேண்டிய எண் எது? ஏன்?
2) சோமுவின் வயது ராமுவின் வயதை விட 27 அதிகம். சோமு வயதின் இலக்கங்களைக் கூட்டினால் 9 வருகிறது. ராமு வயதின் இலக்கங்களைக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. ராமு, சோமு வயதின் முதல் இலக்கங்களைக் கூட்டினாலும், இறுதி இலக்கங்களைக் கூட்டினாலும் 9 தான் வருகிறது. அப்படியானால் ராமு, சோமுவின் வயது என்னென்ன?
3) ஒரு வண்டியில் 24 பெரியவர்கள் அல்லது 30 குழந்தைகள் மட்டுமே ஏறிக்கொள்ள முடியும். அந்த வண்டியில் தற்போது 20 பெரியவர்கள் ஏறி இருக்கிறார்கள் என்றால், இன்னும் எத்தனை குழந்தைகளை ஏறிக்கொள்ள முடியும்?
4) ஓர் எண்ணை 50ஆல் பெருக்கி அதனோடு 20ஐக் கூட்டி வரும் எண்ணும், அதே எண்ணை 60 ஆல் பெருக்கி அதிலிருந்து 20ஐக் கழித்து வரும் எண்ணும் ஒரே எண்தான் என்றால் அந்த எண் எது, விடையாகப் பெறும் எண் எது?
5) மூன்று வருடங்களுக்குப் பிறகு அமலாவின் வயது என்னவாக இருக்கிறதோ அதை மூன்றால் பெருக்கிவரும் விடையிலிருந்து, மூன்று வருடங்களுக்கு முன்னால் அமலாவின் வயது என்னவாக இருந்ததோ அதை மூன்றால் பெருக்கிவரும் விடையைக் கழித்தால் அமலாவின் தற்போதைய வயது கிடைக்கும் என்றால் அமலாவின் வயது என்ன?
அரவிந்த்
விடைகள்1) வரிசை 11, 15 (11+4), 19 (15+4) ஆகியவற்றின் வர்க்கமாக அமைந்துள்ளது. (11x11 = 121; 15x15 = 225; 19x19 = 361) ஆகவே அடுத்து வர வேண்டிய எண் 19 + 4 = 23ன் வர்க்கமான 23 x 23 = 529.
2) ராமுவின் வயது 36 (3 + 6 = 9)
சோமுவின் வயது, ராமுவின் வயதை விட 27 அதிகம்.
எனவே சோமுவின் வயது 36 + 27 = 63. (6 + 3 = 9)
இருவரது வயதுகளின் முதல் மற்றும் இறுதி இலக்கங்களைக் கூட்டினாலும் எண் 9 விடையாக வருகிறது. (3 + 6 = 9; 6 + 3 = 9). எனவே ராமுவின் வயது 36; சோமுவின் வயது 63.
3) 24 பெரியவர்களுக்குப் பதிலாக 30 குழந்தைகள் ஏறிக் கொள்ளலாம் என்றால் 8 பெரியவர்களுக்கு 10 குழந்தைகள் என்றாகின்றது. தற்போது 20 பெரியவர்கள் வண்டியில் ஏறி உள்ளனர். ஆக, மீதம் உள்ள 4 பெரியவர்களுக்கு பதிலாக 5 குழந்தைகள் ஏறிக் கொள்ளலாம்.
4) அந்த எண் 4. விடையாகப் பெறும் எண் 220.
4 x 50 = 200 + 20 = 220
4 x 60 = 240 - 20 = 220
5) அமலாவின் தற்போதைய வயது = x
மூன்று வருடங்களுக்குப் பிறகு அமலாவின் வயது = x + 3;
மூன்று வருடங்களுக்கு முன்னால் அமலாவின் வயது = x - 3;
இரண்டையும் மூன்றால் பெருக்க 3(x + 3) - 3 (x - 3) = x
= 3x + 9 - 3x - 9 = x;
x = 18.
மூன்று வருடங்களுக்குப் பிறகு = 18 + 3 = 21; 21 x 3 = 63;
மூன்று வருடங்களுக்கு முன்னால் = 18 - 3 = 15; 15 x 3 = 45;
ஒன்றிலிருந்து ஒன்றைக் கழிக்க = 63 - 45 = 18
ஆக, அமலாவின் தற்போதைய வயது = 18.