அழகாபுரியை அமரசேனர் என்ற மன்னர் ஆண்டு வந்தார். அமைச்சர் அமுதவாணரின் ஆலோசனைப்படி நீதி, நேர்மையுடன் அவர் அரசாண்டார். மக்கள் நிம்மதியாக, மகிழ்ச்சியாக, சண்டை சச்சரவுகளின்றி வாழ்ந்தனர். இது அண்டை நாட்டின் அரசரான அருளப்பருக்குப் பிடிக்கவில்லை. நம் நாட்டைவிட மிகச் சிறியதான அந்த நாட்டு மக்கள் நம் மக்களைவிட மகிழ்ச்சியாக வாழ்கின்றனரே என்று பொறாமை கொண்டார். இதற்கெல்லாம் காரணம், அமைச்சர் அமுதவாணர்தான் என்பதை உணர்ந்த அவர், அமரசேனரை விடத் தான்தான் சிறந்தவன் என்று இரு நாட்டு மக்கள் முன்னிலையில் அமுதவாணர் ஒப்புக்கொள்ள வேண்டும் என்றும், இல்லாவிட்டால் அழகாபுரியின் மீது தான் படையெடுத்து அழிப்பேன் என்றும் தூதுவன் மூலம் தகவல் அனுப்பினார்.
தகவலைப் பார்த்த அமரசேனர் கடுஞ்சினம் கொண்டார். அதே சமயம் போரையும் அவர் விரும்பவில்லை. எனவே என்னசெய்வதென்று அமைச்சர் அமுதவாணரிடம் ஆலோசனை கேட்டார்.
சற்று நேரம் யோசித்த அமுதவாணர், "மன்னா, வரும் பௌர்ணமி அன்று ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்யுங்கள். அன்று மன்னர் அருளப்பரையும் அவர் நாட்டு முக்கியஸ்தர்களையும் அழையுங்கள். இரு நாட்டு மக்கள் முன்னிலையில் நான் கூறப்போவது எல்லோருக்கும் நன்மையில் முடியும். என்னை நீங்கள் நம்பலாம்" என்றார். மன்னரும் அவ்வாறே தகவல் அனுப்பினார்.
பௌர்ணமி வந்தது. அகம் கறுத்து, முகப் பொலிவுடன் அருளப்பர் தனது பரிவாரங்களுடன் வந்து சேர்ந்தார். அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தடபுடலான விருந்தும் நடந்தது.
அன்று மாலை பௌர்ணமி நிலவில் ஆடல், பாடல் விழாக்கள் நடந்தன. அதைக் கண்டுகளித்த மகிழ்ச்சியில் அருளப்பர், "என்ன அமுதவாணரே, உங்கள் நாட்டைவிட எங்கள் நாடு பெரியது. ஆள், அம்பு, படை, பரிவாரங்களும், செல்வ வளங்களும் அதிகம் உள்ளன. ஆகவே, மன்னராகிய எங்கள் இருவரில் மிக உயர்ந்தவர் யார், சொல்லுங்கள்?" என்றார், அதிகாரத் தொனியுடன்.
உடனே அமுதவாணர், "சந்தேகம் என்ன, நீங்கள் மலைபோல் இருக்கிறீர்கள். எங்கள் மன்னர் நதியைப் போல் இருக்கிறார். இருவரில் உயர்ந்தவர், சிறந்தவர் யார் என்பதை நான் இதற்கும்மேல் சொல்லவும் வேண்டுமோ?" என்றார்.
உடனே அருளப்பர், "சபாஷ். எல்லோர் முன்னிலையிலும் நான்தன் உயர்ந்தவன் என்பதை ஒப்புக் கொண்டமைக்கு நன்றி. அமரசேனர்தான் பாவம்..." என்றார் கிண்டலாக.
அமரசேனரும், மக்களும் இதைக் கேட்டு மனம் வருந்தினர். உடனே அமுதவாணர், "அருளப்பரே, அவசரப்படாதீர்கள். நீங்கள் மலை போன்றவர் என்றுதான் சொன்னேன். அதன் உண்மையான பொருள் என்ன தெரியுமா? நீங்கள் மலைபோல் ஓரிடத்தில் உயர்ந்து இருக்கிறீர்கள்; உங்கள் செல்வமும் வளமும் அந்த மலைபோல் ஓரிடத்தில் - அதாவது - அரண்மனையில் மட்டுமே குவிந்திருக்கிறது. அதனால் மக்களுக்கு ஏதும் பயன் விளையவில்லை. நீங்களும் மலைபோல் அசையாது ஆட்சி செய்கிறீர்களே தவிர, மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை. அதையே அப்படிச் சொன்னேன். ஆனால், எங்கள் மன்னர் அமரசேனரோ, நதியானது நிலமெங்கும் பாய்ந்தோடி எல்லா மக்களுக்கும் நன்மை புரிவதைப் போல மக்களின் நலனில் அக்கறை கொண்டு, தனது செல்வம் எல்லாவற்றையும் அவர்களுக்காகச் செலவிட்டு சிறப்பாக ஆட்சி செய்கிறார். அதனாலேயே அவரை நதியோடு ஒப்பிட்டேன். இப்போது நீங்களே சொல்லுங்கள், உங்களில் யார் சிறந்தவர் என்பதை!" என்றார்.
இதைக் கேட்டு முதலில் ஒரு கணம் திகைத்தாலும் அருளப்பர் உண்மையை உணர்ந்தார். "சந்தேகமென்ன? உங்கள் மன்னர் அமரசேனர்தான் சிறந்தவர், உயர்ந்தவர். நானும் இனிமேல் அவரைப்போல் ஆட்சி செய்யப் போகிறேன். அதற்கான சந்தர்ப்பத்தையும், அறிவுரையையும் தந்து, எனது ஆணவத்தை அழித்தமைக்காக உங்கள் எல்லோருக்கும் மிக்க நன்றி" என்று சொல்லி மகிழ்வுடன் தன் நாட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார் அருளப்பர்.
அரவிந்த் |