மகாபாரதம் - சில பயணக் குறிப்புகள்
விலக்கப்பட்ட வேள்வி
ஏப்ரல் இதழில் நான் கேட்ட ஐந்தாவது கேள்வி இது: 'பாண்டவர்களுடைய வனவாச சமயத்தில், கந்தர்வர்களால் சிறைப்பிடிக்கப்பட்ட துரியோதனனை பீமார்ஜுனர்கள் மீட்டு வந்த சமயத்தில், அவமானத்தால் அவன் உயிர்விடத் துணிந்த சமயத்தில், கர்ணன் எத்தனையோ ஆறுதல் மொழிகளைச் சொல்லி-களத்தையும் துரியோதனனையும் ஒன்றாகக் கைவிட்டு முதலில் ஓடியவன் இவன்தான்-துரியோதனன் மேற்கொண்ட பிரயோபவேச (தற்கொலை) முயற்சியைக் கைவிடச் செய்தாலும், அந்தச் சமயத்தில் 'நாம் ஒரு ராஜசூய யாகம் செய்யலாமா' என்று கேட்ட துரியோதனைக் கர்ணன் 'உன்னால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது' என்று சொல்லி, அதற்கு மாறாக வைஷ்ணவப் பெருவேள்வியைச் செய்யலாம் என்று ஆலோசனை கூறினான். துரியோதன் ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாது என்று கர்ணனே சொல்லித் தடுத்த அந்தக் காரணங்கள் யாவை?'. இந்தக் கேள்வியில் ஒரு சிறிய திருத்தம்-துரியோதனனால் ராஜசூய யாகத்தைச் செய்யமுடியாது என்று கர்ணன் சொல்லவில்லை. கர்ணனிடம் அந்தணர்கள் சொல்கிறார்கள். எப்படி இருந்தாலும் காரணங்களில் என்னவோ எந்த மாற்றமும் இல்லை. துரியோதனன் அரசனாக இருந்ததில்லை என்ற நம் முடிவுக்கு வலுவான சான்று கிடைக்கும் இடங்களில் இதுவும் ஒன்று.

இந்தச் சம்பவம் நடக்கும் இடத்தை முன்னமேயே கோடி காட்டிவிட்டோம். மாடுகளைக் கணக்கெடுப்பதற்காக வனத்துக்குச் செல்வதாக துரியோதனன், கர்ணன் முதலானோர் பெரும்படையுடன் பாண்டவர்கள் வனவாசத்தில் கழிக்கும் இடத்துக்கு அருகில் தங்கி, அவர்களுக்குத் தம் செல்வச் செழிப்பையும் அவர்களுடைய தற்போதைய நிலையையும் பரிகசிப்பதற்காகச் செய்த முயற்சி இது. கோஷா யாத்ரா பர்வத்தில் இடம்பெறும் சம்பவம். இந்தச் சந்தர்ப்பத்தில் நடந்ததன் சுருக்கத்தை நம்முடைய கேள்வியிலேயே சொல்லியிருக்கிறோம். இப்படி துரியோதனனுக்கு ஆறுதல் சொன்ன பிறகு, பீஷ்மர் இடையிட்டு, கர்ணனுடைய பேச்சுகளுக்கு மறுப்பு தெரிவிக்கையில் "வீரனே! நீ பகைவர்களால் வலிந்து பிடிக்கப்பட்டாய். தர்மங்களை அறிந்த பாண்டவர்களால் விடுவிக்கப்பட்டவனாக இருக்கிறாய். உனக்கு வெட்கமில்லையா? பிரஜைகளுக்கு ரக்ஷகனே! காந்தாரீநந்தன! அப்பொழுது கர்ணன், போர் வீரர்களுடன் கூடின நீ பார்த்துக் கொண்டிருக்கையிலேயே, கந்தர்வர்களிடம் பயந்தவனாக யுத்தத்திலிருந்து ஓடினான். ராஜஸ்ரேஷ்டனே! ஸைனிகர்களுடன் (சேனை வீரர்களோடு) கூடின நீ அலறி அழைக்கும்பொழுது, பின்புறத்தில் அடிக்கடி திரும்பிப் பார்த்துக்கொண்டு, அந்த யுத்தத்தினின்று கர்ணன் ஓடினான்.......தனுர் வேதத்திலும் சௌர்யத்திலும் கர்ணன், மகாத்மாக்களான பாண்டவர்களுடைய நாலில் ஒரு பாகத்துக்கும் ஒப்பாகான்" என்று துரியோதனைப் பார்த்து சொல்கிறார். (கும்பகோணம் பதிப்பு, தொகுதி 3, வனபர்வம் பாகம் 2, 254ம் அத்தியாயம், கோஷாயாத்ரா பர்வம், பக்கம் 946)

இந்தச் சொற்களால் பெரிதும் சீற்றமடைந்த கர்ணன், பீஷ்மரையும் பாண்டவர்களையும் வழக்கம்போல இகழ்ந்து பேசி, பாண்டவர்கள் நால்வர் திக்விஜயம் செய்து சாதித்தனவற்றைத் தான் ஒருவனாகவே நின்று சாதித்துக் காட்டப்போவதாகச் சொல்லி, திக்விஜயம் செய்ய அனுமதி கேட்கிறான். பல திசைகளுக்கும் பயணித்து, எல்லாத் திசை மன்னர்களையும் வென்று, அவர்களைக் கப்பம் கட்ட வைப்பதே திக்விஜயம் எனப்படுகிறது. திக்விஜயத்துக்குப் புறப்பட்ட கர்ணன் வென்ற தேசங்களின் பட்டியல் ஒரு முழு சர்க்க நீளத்துக்குப் பேசப்படுகிறது. இப்படி வென்றுவந்த தேசங்களை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டுமாறு வைத்தான் கர்ணன். இந்தப் பெருவெற்றியைத் தன் வெற்றியாகக் கொண்டாட விரும்பிய துரியோதனன் சொல்கிறான்: "புருஷஸ்ரேஷ்டனே! எவனுக்கு நீ உதவிபுரிபவனாகவும் அன்புள்ளவனாகவும் இருக்கிறாயோ, அவனுக்குக் கிடைக்க அரியது ஒன்றுமில்லை. நீ என்னுடைய க்ஷேமத்திற்காகவே நல்ல முயற்சியுள்ளவனாக இருக்கிறாய். ஆனால், எனக்கு ஓர் அபிப்பிராயம் இருக்கிறது. அதனை உள்ளபடி கேட்பாயாக. ஸூதநந்தன! (சூதபுத்திரனே*!) அப்பொழுது பாண்டனுடைய யாகங்களுள் சிறந்த ராஜஸூயத்தைக் கண்டு எனக்கு ஆவலுண்டாயிற்று. அந்த ஆவலை நீ நிறைவேற்றி வைப்பாயாக' என்று சொன்னான்." (மேற்படி, பக்கம் 951), (* கர்ணனை சூதபுத்திரன் என்று அழைப்பது ஏதோ இழிவான பேச்சன்று. அன்றாட வழக்கில், துரியோதனன் உள்ளிட்ட பலரும் இவ்வாறே அழைத்திருக்கிறார்கள். எனவே, இது இழிமொழியாகக் கொள்ளக்கூடிய ஒன்றன்று என்பதை விளக்கும் இடம் இது.) இதைக் கேட்ட கர்ணன், அந்தணர்களை வரவழைத்து, ராஜசூய யாகத்துக்கான ஏற்பாடுகளைச் செய்யச் சொல்கிறான். அவர்கள் சொல்கிறார்கள்:

"ராஜஸ்ரேஷ்டனே! கௌரவஸ்ரேஷ்டனே! யுதிஷ்டிரர் உயிரோடிருக்கும் போது, உன்னுடைய குலத்தில் அந்த ராஜஸூயமென்கிற சிறந்த யாகமானது, செய்வதற்கு சாத்தியப்படாதது. வேந்தே! உன்னுடைய பிதா நீண்ட ஆயுளுள்ளவராக ஜீவித்திருக்கிறார். அரசர்களுள் உத்தமனே! அதனாலும், இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது." (மேற்படி, பக்கம் 952.) இவ்வாறு சொன்னவர்கள், தொடர்ந்து, ராஜசூய யாகத்தைச் செய்ய முடியாவிட்டாலும், அதற்கு இணையான வைஷ்ணவம் என்கிற ஒரு யாகத்தை, துரியோதனனுக்குக் கப்பம் கட்டும் மன்னர்களிடமிருந்து தேவையான பொருட்களைப் பெற்று அவன் செய்யலாம் என்று யோசனை சொல்கிறார்கள்.

இரண்டு யாகங்களுக்குமுள்ள ஒற்றுமை என்னவென்றால், பல மன்னர்களை வென்று, அவர்களிடமிருந்து கப்பம் பெறுகின்ற சக்கரவர்த்தியே இவற்றைச் செய்யமுடியும் என்பது நமக்குக் கிடைக்கும் முக்கியமான குறிப்பு. பல மன்னர்களிடமிருந்து கப்பம் பெறும் நிலையிலிருந்தாலும், துரியோதனானால் ராஜசூயத்தைச் செய்ய முடியாது என்பது இதில் இன்னமும் முக்கியமான குறிப்பு. இதற்குக் காரணங்களாகச் சொல்லப்படுபவை: (1) யுதிஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான். (2) திருதிராஷ்டிரன் இன்னமும் உயிரோடிருக்கிறான்.

அப்படியானால், திருதிராஷ்டிரன் உயிரோடிருக்கும் நிலையில்தானே தருமபுத்திரன் ராஜசூயத்தைச் செய்தான்! எனவே, திருதிராஷ்டிரன் உயிரோடு இருப்பது தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தவில்லை. குலமுதல்வன் என்ற நிலையிலும், பெரியப்பா என்ற நிலையிலும் தருமபுத்திரனைக் கட்டுப்படுத்தாத ஒன்று துரியோதனனைக் கட்டுப்படுத்துகிறதே! தருமனுக்குப் பெரியப்பா, துரியோதனனுக்கோ தந்தை என்ற நிலைப்பாடு இருந்த போதிலும், தருமனுக்கு இந்த வேற்றுமை, ஒரு வேற்றுமையாக எப்போதுமே இருந்ததில்லையே! ஆகவே, இந்த இரண்டு காரணங்களில், திருதிராஷ்டிரன் உயிரோடு இருப்பதான காரணம் சற்றே தளர்கிறது. இப்போது எஞ்சியிருப்பது யுதிஷ்டிரன் உயிரோடிருக்கிறான் என்ற காரணம் மட்டும்தான்.

தருமபுத்திரன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனனை ராஜசூய யாகம் செய்ய முடியாமல் கட்டுப்படுத்தும்? இதற்கான விடையை பாரதம் நேரடியாகத் தரவில்லை. நாம் உய்த்துணர வேண்டியிருக்கிறது. அதாவது, இப்போது துரியோதனன் ஆள்வது, சூதிலே வென்றதாகிய தருமனுடைய அரசை. இதுவும்கூட, சூதாட்டத்தில் பேசப்பட்ட விதியின்படி, பன்னிரண்டு ஆண்டுகாலம் வனவாசம்; ஓராண்டு அக்ஞாத வாசம் என்று பதின்மூன்று ஆண்டுகளை அவர்கள் வெற்றிகரமாக முடித்துவிட்டால், அரசு அவர்களிடம் மீண்டும் ஒப்படைக்கப்பட வேண்டிய ஒன்று. இந்த நிலையில், கேள்விக்கு இடமில்லாத வகையில் சக்ரவர்த்தியாகத் திகழ்பவனே நடத்த வேண்டியதான ராஜசூய யாகத்தை, தருமபுத்திரன் உயிரோடு இருக்கும் வரையில் துரியோதனனால் நடத்த முடியாது. அப்படியானால், இந்த யாக நடைமுறையின்படி தற்போது அரசனாக இருப்பவன் யார்? நாடிழந்து வனவாசம் மேற்கொண்டிருக்கும் தருமபுத்திரனே அல்லவா? இல்லாவிட்டால், அவன் உயிரோடு இருப்பது எப்படி துரியோதனன் இந்த யாகத்தைச் செய்வதற்குத் தடையாக நிற்கும்? நாளைக்கு ஒருவேளை அவன் வனவாசத்தை முடித்துவிட்டு வந்தான் என்றால்-வருவது ஒருபுறமிருக்கட்டும்-அரசர்களுக்கு அரசனாக, சக்ரவர்த்தியாக இருப்பவன் மட்டுமே, தனக்குக் கப்பம் கட்டுபவர்கள் கொடுக்கும் பொருளை வைத்துக்கொண்டு செய்ய வேண்டியதான ராஜசூயத்தை, துரியோதனனால் எவ்வாறு செய்ய முடிந்தது என்ற கேள்வி எழும். ஆகவே, இவனால் அந்த யாகத்தைச் செய்ய முடியாது. ஆனால் அதற்கு இணையாகக் கருதப்படுவதும், அதைப்போன்றே, தனக்குக் கப்பம் கட்டும் சிற்றரசர்கள் தந்த பொருளால் நடத்தக் கூடியதுமான வைஷ்ணவ வேள்வியை துரியோதனனால் செய்யமுடியும் என்பது அந்தணர்கள் கூறிய முடிவின் உட்பொருள், அல்லவா?

எனவே, அரசில் முதல் உரிமை பெற்றவனும், சூதில் அரசை இழந்து வனவாசம் மேற்கொண்டிருந்தாலும், நாளை மீண்டும் அரசைப் பெறும் சாத்தியமுள்ளவனாகவும் தற்போதைய வனவாச காலத்திலும் தருமபுத்திரன் தொடர்ந்து கொண்டிருக்கிறான் என்பதும், திக்விஜயம் செய்து தான் வென்ற அரசுகளை எல்லாம் கர்ணன் துரியோதனனுக்கு உரிமையாக்கினாலும்கூட அவனுக்கு ராஜசூய யாகம் செய்ய இயலாத நிலை இருந்ததும் தெளிவாகின்றன. 'இந்த யாகமானது உனக்கு விலக்கப்பட்டிருக்கிறது' என்று அந்தணர்கள் சொல்வதைக் கருத்தில் கொண்டு பார்த்தால், இந்த முடிவுகள் வலுப் பெறுகின்றன.

தொடர்வோம்.

ஹரி கிருஷ்ணன்

© TamilOnline.com