அன்புள்ள சிநேகிதியே
தென்றல் ஜூலை இதழில் ஒரு பெண்மணி இங்கே நாங்கள் எல்லோரும் கேலரி கணக்கு பார்த்து சமைக்கிறோம் என்று எழுதியிருந்தார். நல்லவேளை, மருமகளை மட்டும் சொல்லவில்லை; பெண் வீட்டுப் பிரச்சனையையும் எழுதியிருந்தார். பாவமாக இருந்தது. வயதானவர்கள் வந்தால் வாய்க்கு ருசியாக சமையல் செய்து போடவேண்டும் என்று ஆசையாகத்தான் இருக்கிறது. ஆனால், தினமும் காலை இட்லி, உப்புமா, மதியம் சாம்பார், கறி, இரவு சப்பாத்தி, குருமா என்று முடியமாட்டேன் என்கிறது. எனக்குப் போன வருடம் ஏற்பட்ட அனுபவத்தை எழுதுகிறேன்.
என் மாமியார் கிரேட் குக். முன்பெல்லாம் வந்தபோது அவர் ஆசை ஆசையாகச் சமைத்துப் போடுவார். நன்றாகச் சாப்பிட்டிருக்கிறோம். இல்லையென்று சொல்லவில்லை. ஆனால், போனமுறை அவர்கள் வந்தபோது, வயது, தளர்வு நன்றாகத் தெரிந்தது. அவ்வப்போது தலை சுற்றுகிறது என்று சொல்வார். நான் பயந்துகொண்டு கிச்சன் பக்கமே விடவில்லை. அவர்கள் வந்த சமயம் எனக்கு வேலைப்பளு வேறு அதிகமாக இருந்தது. ஏதோ அவசரத்தில் சாம்பார், ரசம் என்று காலையில் சமைத்து வைத்துவிட்டுப் போய்விடுவேன். என் மாமனார் முதலில் கொஞ்சம் கஷ்டப்பட்டார். பழையதையே சாப்பிடாத மனிதர். "அம்மா, நீ கஷ்டப்படாதே. தினமும் செய்ய வேண்டிய அவசியமில்லை. வீக் எண்டில் நிதானமாகச் சமை. நானும் ஹெல்ப் செய்கிறேன்" என்று முன்வந்தார். சனிக்கிழமைதோறும், ஒரு மூன்றுமணி நேரம் இதற்காக ஒதுக்கினோம். என் மாமியார் உட்கார்ந்தபடி கறிகாய் நறுக்கிக் கொடுப்பார். எங்கள் ஆறு பேரிடம் அவரவர் 'ஃபேவரிட் மெனு' கேட்போம். (எனக்கு 2 குழந்தைகள்) ஆறு நாட்களுக்கு வேண்டிய உணவை தயார் செய்வோம். என் மாமனார் அழகாக டப்பாவில் போட்டு மூடி, என்ன கிழமைக்கு எந்த ஐட்டம் என்று லேபிள் போட்டு பேஸ்மெண்ட் ஃபிரிட்ஜில் கொண்டுபோய் வைத்துவிடுவார். என் மாமியார் கரெக்டாக அளவு சொல்லுவார். அதனால், அதிகம் மிஞ்சாது. என் குழந்தைகளுக்காகக் கொஞ்சம் காரம் குறைத்துச் செய்து, அதைத் தனி டப்பாவில் போட்டு, அவர்கள் பெயரை எழுதி விடுவோம்.
இரண்டு, மூன்று வாரம் பழகியபின், ஏதாவது க்ரியேடிவ் குக்கிங் செய்யவேண்டும் என்று சொல்லி, எல்லோருடைய அபிப்பிராயமும் கேட்போம். அந்தச் சமயத்தில் கீன்வா, ஓட் மீல் என்று கலந்தடித்து விதவிதமாக முயற்சித்தோம். 70 வயதான என் மாமனாருக்கு பருப்பை வேகவைத்துச் சாம்பார் செய்ய வேண்டும் என்றுகூடத் தெரியாது. ஆனால், இங்கே சந்தோஷமாகக் கூடஇருந்து எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். மெள்ள சாலடின் மேல் காதல் கொள்ள வைத்தேன். அருமையாக இருந்தது, அவர்கள் வரவு. இந்த வருடமும் எதிர்பார்த்தேன். ஆனால் என் மாமியாருக்கு ஹார்ட் சர்ஜரி, மாமனார்தான் நன்றாகக் கவனித்துக் கொண்டார். உணவு விஷயத்தில். "ஐயோ மூன்று வேளை சமைக்க வேண்டுமே" என்று பயப்பட்டது போக, எனக்கு ஒரு நல்ல அனுபவம். நானும் நிறைய cooking tips, short cuts கற்றுக்கொண்டேன். என்னுடைய மாமனார், மாமியாருக்கும் "பழைய சாப்பாடு" பழகிப் போய்விட்டது. "ஊறுகாய் சாப்பிடுகிறோம், உலர்ந்த வற்றல் சாப்பிடுகிறோம், அதனால் என்ன!" என்று அவரே செய்ய ஆரம்பித்துவிட்டார். என்னுடைய பாக்கியம் கணவர் வழியில் எங்கள் குடும்பம் நன்றாக அமைந்திருக்கிறது.
இப்படிக்கு ...................
அன்புள்ள சிநேகிதியே,
உங்கள் இனிய அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டு பிரச்சனையை எழுதி, அதற்கு பதிலும் நீங்களே எழுதி விட்டீர்கள். படிப்பதற்கு ரசிக்கும்படியாக இருக்கிறது. உணவு விஷயத்தைப் பற்றி எழுதியிருப்பதால் மிகமிக ருசியாக இருக்கிறது. ஆனால், எல்லோருக்கும் அந்த ஈடுபாடோ, மற்றவரைப் புரிந்துகொள்ளும் தன்மையோ இருக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. Yours is a special situation for a general problem.
உங்கள் அனுபவத்தில் நான் விதவிதமான சமையல் வகைகளைப் பார்க்கவில்லை. உங்கள் மூன்று பேருக்கும் இருந்த உறவில் ஒரு இங்கிதமான அணுகுமுறையையும், பாங்கான செயல் முறையையுமே பார்க்கிறேன். இன்பமாக இருக்கிறது.
வாழ்த்துக்கள், டாக்டர் சித்ரா வைத்தீஸ்வரன் |