இரட்டை லட்டு
தென்னிந்திய ரவா லட்டும், வடக்கிந்திய கடலை மாவு லட்டும் (பேசின் லாடு) பலருக்குத் தெரிந்ததே. தெற்கும் வடக்கும் இணையும்போது கிடைக்கும் இந்த ட்வின் லட்டு கூடுதல் சுவை.

தேவையான பொருட்கள்
கடலை மாவு -1 கிண்ணம்
ரவை - 1 கிண்ணம்
சர்க்கரை- 3 கிண்ணம்
தண்ணீர் - 1 கிண்ணம்
பால் - 1 மேசைக்கரண்டி
நெய் - 1 கிண்ணம்
முந்திரிப் பருப்பு - தேவைக்கேற்ப
ஏலப்பொடி - தேவைக்கேற்ப
திராட்சை - தேவைக்கேற்ப
கேசரிப் பொடி - தேவைக்கேற்ப

செய்முறை
கடலை மாவு, ரவை இரண்டையும் சேர்த்து, நெய்யில் சிவக்க வாசனை வரும் பதத்தில் வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும். அடுப்பிலிருந்து எடுக்கும்போது, ஒரு தேக்கரண்டி பால் விட்டுக் கலந்து வைக்கவும். பிறகு வாணலியில் ஒரு கிண்ணம் தண்ணீர் விட்டு, சர்க்கரை கலந்து, பாகு காய்ச்சவும். கம்பிப்பாகைவிடச் சிறிது மேலாக, சற்றுக் கெட்டியாக வரும் பதத்தில் அடுப்பிலிருந்து இறக்கி வைத்துக்கொள்ளவும். இதில் சிறிது கேசரிப் பொடி, முந்திரி, வறுத்த திராட்சை, ஏலப்பொடி கலந்து வைக்கவும். இந்தப் பாகில், வறுத்த ரவை மற்றும் கடலை மாவைச் சேர்த்து, ஐந்து நிமிடத்துக்கு ஒருமுறை கிளறிவிடவும். கலவை கெட்டியாக வரும்போது அடுப்பை நிறுத்தவும். ஆறியவுடன் உருண்டைகளாகப் பிடிக்கவும்.

கமலா ராமஸ்வாமி,
கனெக்டிகட்

© TamilOnline.com