மார்க்கெடிங் விருது பெற்ற கணபத் (ராமு) வேலு
அமெரிக்கத் தமிழ் மாணவர் கணபத் (ராமு) வேலு டெக்சஸ் மாநில அளவில் மார்க்கெடிங் விருது பெற்றுச் சாதனை படைத்துள்ளார். டாலஸ் ஃபோர்ட்வொர்த் அமெரிக்கன் மார்க்கெடிங் அசோசியேஷன், ஆண்டுதோறும் மார்க்கெட்டிங் துறையில் சாதனை புரிந்தவர்களுக்கு, விருது வழங்கி கவுரவிக்கிறது. டெக்சஸ் மாநிலத்தின் அனைத்துக் கல்லூரி, பல்கலைக் கழகங்களிலிருந்தும் பங்கேற்றவர்களில், ராமு முதல் பரிசை வென்றார்.

Click Here Enlarge14 பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன. அவற்றுள் சோசியல் மார்க்கெட்டிங், மொபைல் மார்க்கெட்டிங் உட்பட 12 பிரிவுகளில் பல்வேறு நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டன. இரண்டு மட்டுமே தனி நபர் பிரிவுகள். கல்லூரி/பல்கலைக்கழகப் பிரிவில் கணபத் ராமு வெற்றிபெற்றார். தனது பல்கலைக்கழக மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு மையத்திற்காக (career center) விளம்பரப் படத்தை வடிவமைத்து, வீடியோ வெளியிட்டிருந்தார்.அதன்மூலம் கடந்த ஆண்டுகளைவிட மாணவர்களின் வருகை எண்ணிக்கை அதிகரித்தது இது மார்க்கெடிங் யுத்தியின் பெரிய வெற்றி என்று பல்கலைக்கழக இயக்குனர் ஜூலி ஹேவொர்த், ராமுவை விருதுக்குப் பரிந்துரைத்தார். கருத்தாக்கம், வடிவாக்கம் மற்றும் தலைமைப் பண்பு ஆகிய அடிப்படையில் கணபத் ராமுவுக்கு இந்த விருது வழங்கப்பட்டதாக விருதுக் குழுவினர் தெரிவித்தனர். பல்கலைக்கழகத்தின் சார்பில், மார்க்கெடிங் துறை டீன் மற்றும் பேராசிரியர்கள் ராமுவுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.



Click Here Enlargeகணபத் ராமு வேலு, டெக்சஸ் பல்கலை, டாலஸில் நான்காம் ஆண்டு இளங்கலை படித்து வருகிறார். தமிழகத்தில் பிறந்த இவர், பெற்றோருடன் நான்கு வயதில் டாலஸ் வந்தார். அவருடைய பெற்றோர் வேலு–விசாலாட்சி தம்பதியினர், பல்வேறு தமிழ்ப்பணிகளும் சமூகப்பணிகளும் ஆற்றி வருகின்றனர். அவர்களுக்கு உறுதுணையாக கணபத் ராமு பணியாற்றுவதுடன், ஃபெட்னா உள்ளிட்ட தமிழ் அமைப்புகளிலும் பங்கேற்கிறார். திரு வேலு ராமன் குறித்து அறிய பார்க்க: தென்றல், டிசம்பர், 2013

© TamilOnline.com