'நல்ல கீரை' ஜெகன்னாதன்
"டிகிரி முடிச்சா போதும் மாப்பிள... நான் பிபிஓ, கால்சென்டர், சாஃப்ட்வேர்னு ஐ.டி. பக்கம் போயி அப்படியே யூஎஸ்ல போயி செட்டிலாயிருவேன்" என்போரை நீங்கள் பார்த்திருக்கக் கூடும். ஆனால், பன்னாட்டு நிறுவனத்தில் உயர் பொறுப்பில் பணியாற்றி, அந்த வேலையை விட்டுவந்து விவசாயத்தில் சாதித்தவரை உங்களுக்குத் தெரியுமா? கார்ப்பொரேட் நிறுவனத்தில் உயர்பதவியில் இருந்த ஜெகன்னாதன், திருநின்றவூரை அடுத்த பாக்கம் கிராமத்தில் நிலத்தைக் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவருகிறார். நண்பர்களுடன் இணைந்து 'நல்ல கீரை' என்ற அமைப்பை ஏற்படுத்தி அதன்மூலம் கீரை விற்பனை செய்து வருகிறார். அவர் செய்வது இயற்கை விவசாயம். அமெரிக்காவில் செய்த உயர்பணியை விட்டுவிட்டு, கடந்த ஆண்டு இந்தியா திரும்பி ஜெகன்னாதனுடன் கை கோர்த்திருக்கிறார் சந்தைப்படுத்தல் வல்லவர் சரவணன். மிடில்பரியில் வாழ்ந்த சரவணன் தென்றல் வாசகரும்கூட. வாருங்கள், அவர்களுடன் பேசுவோம்.

கே: விவசாயத்தின் மீது ஆர்வம் வந்தது எப்படி?
ஜெகன்னாதன்: நான் விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல. சொந்த விவசாய நிலமும் எனக்கில்லை. நான் நிறைய நூல்களை வாசிப்பவன். ஜே.சி. குமரப்பாவின் கிராமப் பொருளாதாரம் என்னை மிகவும் பாதித்தது. நான், சரவணன் எல்லாம் சிறுவயது முதலே ஒன்றாகப் படித்தவர்கள். எங்களுக்கு கல்வி, கிராமப் பொருளாதார வளர்ச்சி, கிராம முன்னேற்றம் இவற்றின்மீது ஆர்வம் அதிகம். அதனால் 2011ல் 'சிறகு' என்ற பள்ளியை ஆரம்பித்தோம். பத்தாம் வகுப்புவரை அங்கு இலவசக் கல்வி. ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் அதில் படிக்கிறார்கள். அங்கு படித்த சிலர் வெளிநாடுகளில் ஆராய்ச்சிப் படிப்பைத் தொடர்கிறார்கள். 'சிறகு' மாணவர் மேலே படிக்க, வெளிநாட்டு நண்பர்கள் நிதியுதவி செய்கிறார்கள்.

ஒருமுறை ஒரு மாணவனின் ஸ்காலர்ஷிப் சம்பந்தமாக அவர் வீட்டுக்கு இரவில் சென்றேன். அங்கு எல்லோரும் வயிற்றில் ஈரத்துணியைக் கட்டிக்கொண்டு படுத்திருந்தார்கள். எனக்கு ஒரே அதிர்ச்சி. அவருக்கு நான்கு குழந்தைகள். இரண்டு ஏக்கர் நிலமும் இருந்தது. குறு விவசாயி. ஆனால் விளைச்சல் இல்லை. நான் கிராமத்தில் பிறந்து வளர்ந்தவன். பெற்றோருக்கு ஒரே பையன். பெற்றோர் இருவருமே வேலை பார்ப்பவர்கள். அதனால் வறுமை என்றால் என்னவென்று எனக்குத் தெரியாது. ஆனால் அன்று அதைக் கண்ணால் பார்த்தேன். அப்போதுதான் புரிந்தது 'கல்வி' மட்டுமே கிராமப் பொருளாதார முன்னேற்றத்திற்கு உதவிவிடாது; விவசாயம்தான் ஆணிவேர் என்பது. பசி என்று வரும் குழந்தைக்கு முதல் தேவை சாப்பாடுதானே தவிர, கல்வி அல்ல. ஆகவே ஆணிவேரான அந்த விவசாயத்தை மேம்படுத்தும் பணியைச் செய்ய முடிவு செய்தேன்.



கே: உடனே வேளாண்மையில் ஈடுபட்டீர்களா?
ஜெ: இல்லை. முதலில் ஒரு சர்வே எடுத்தேன். நாங்கள் ஒரு கம்ப்யூட்டர் பயிற்சி மையமும் நடத்தி வந்தோம். அதன் மாணவர்களைக் கொண்டு ஊரிலுள்ள 210 குடும்பங்களில் ஆய்வு செய்தோம். அதன்மூலம் ரசாயன உரம், பூச்சிக்கொல்லி, மதுபானங்கள், புகையிலை, மருத்துவச் செலவுகள் என்று வருஷத்துக்கு ஒரு கோடியே 60 லட்சம் ரூபாயை அவர்கள் செலவு செய்வது தெரியவந்தது. கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தில் 60 சதவீதத்துக்கு மேல் யாருக்கோ போகிறது. இந்தப் பணம் வீணாகக் காரணம் செயற்கை உரங்களைப் பயன்படுத்துவதுதான். நமது பாரம்பரிய இயற்கை விவசாயம் செய்தால் பெருமளவு மிச்சமாகும் என்பதை உணர்ந்தேன். எனது கிராமத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்துவதுதான் ஆரம்பத்தில் எனது எண்ணமாக இருந்தது. இயற்கை விவசாயம் பற்றிய தேடலுக்குப் பின்தான் மக்கள் விஷத்தை உணவாக உண்கிறார்கள்; அதுவே பல நோய்களுக்குக் காரணமாக இருக்கிறது என்பதும், மண் மலடாகிவிட்டது என்பதும் தெரிய வந்தது. இயற்கை விவசாயம் செய்யும் பலரை நேரில் பார்த்து உரையாடினேன். பல மாதங்கள் அவர்களுடன் தங்கி எப்படி இயற்கை முறையில் விவசாயம் செய்கிறார்கள் என்பதைக் கற்றுக்கொண்டேன். பின்னர் இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டேன்.

கே: பல பயிர் வகைகள் இருக்க, கீரைகளின் மீது உங்கள் கவனம் சென்றது ஏன்?
ஜெ: நாம் நிலத்தில் உரம், பூச்சிக்கொல்லி போன்றவற்றைக் கிட்டத்தட்ட 50, 60 வருடங்களாகப் பயன்படுத்தி வருகிறோம். அதனால் மண் தனது வளத்தை இழந்து மலடாகி விட்டது. நீங்கள் ஒரு காட்டுக்குள் சென்று அங்கே ஒரு கைப்பிடி மண்ணை எடுத்து ஆய்ந்தால், அதில் ஆயிரக்கணக்கான நுண்ணுயிரிகள் இருப்பதைப் பார்க்கலாம். ஆனால் விஷம் போட்ட நம் நிலங்களில் எந்த நுண்ணுயிரையும் காணமுடியாது. அதில் நாம் செயற்கையாக விவசாயம் செய்து விஷத்தை உணவாகச் சாப்பிட்டு வருகிறோம். நமது உணவுக்கும் உணர்வுக்கும் தொடர்புள்ளது. விஷத்தைச் சாப்பிட்டால் என்ன ஆகும்? இன்றைய பல புதிய நோய்களுக்கும், உடல், மனநலக் குறைபாடுகளுக்கும் விஷ உணவுகளே காரணம். மனிதர்களின் வன்முறைக் குணத்துக்கும், கோப தாபங்களுக்கும், குற்றச் செயல்களுக்கும் விஷ உணவே காரணம்.

இதை மாற்ற வேண்டுமானால் மீண்டும் இயற்கை விவசாயம் செய்ய வேண்டும். ஆனால் மலட்டு மண்ணை மீண்டும் பழையபடி வளமாக்கக் குறைந்த பட்சம் மூன்றாண்டுகளாவது ஆகும். நிறையச் செலவாகும். நம் விவசாயிகளில் பெரும்பாலானோர் குறு விவசாயிகள். அவர்களால் அவ்வளவு காலம் காத்திருக்கவோ, செலவு செய்யவோ முடியாது. இயற்கை விவசாயம் செய்யவேண்டும்; அதுவும் குறுகிய காலத்தில். அது லாபம் தருவதாகவும் இருக்கவேண்டும் என்று யோசித்ததில் இரண்டு வழிகள் எங்களுக்கு இருந்தன. ஒன்று மலர்கள்; மற்றொன்று கீரை.

மலர்களில் எங்களுக்கு ஆர்வம் இல்லை. காரணம், அது பருவத்திற்கேற்ப விலை, விற்பனை மாறக்கூடியது. சந்தையை நம்மால் நிர்ணயம் செய்ய முடியாது. லாபமும் வரும், நஷ்டமும் வரலாம். ஆகவே கீரையைத் தேர்ந்தெடுத்தோம். விதைத்து 15-45 நாட்களில் கீரையை நாம் அறுவடை செய்யலாம். சிறிய நிலம் போதும். கீரைக்காக பெரிதாக மண்ணை மாற்றவேண்டிய அவசியம் இல்லை. பஞ்சகவ்யமோ, அமிர்தக் கரைசலோ கொடுத்து கீரையை எளிதில் விளைவிக்கலாம். இயற்கை விவசாயத்தில் கீரையை யாரும் பயிர் செய்வதில்லை. ஏனென்றால் அதற்கு நாள்தோறும் உழைப்பு தேவைப்படும். நாம் செய்து காண்பிப்போமே என்றுதான் தொடங்கினோம்.



கே: சரி, அது என்ன பஞ்சகவ்யம், அமிர்தக் கரைசல்? கொஞ்சம் விளக்குங்களேன்!
ஜெ: பஞ்சகவ்யம் என்பது சாணம், தயிர், பால், நெய், கோமயம் எனப் பசுவிடமிருந்து கிடைக்கும் பொருட்களைக் குறிப்பிட்ட விகிதாசாரத்தில் கலந்து தயாரிக்கபடுவது. அதில் கள் அல்லது ஈஸ்ட், இளநீர், கனிந்த வாழைப்பழம், கரும்புச்சாறு போன்றவற்றை நன்றாகக் கலந்து, 21 நாள் வைத்திருந்து 300 மி.லி.க்கு 10 லிட்டர் தண்ணீர் வீதம் கலந்து தெளித்தால் அற்புதமான விளைச்சலைக் கொடுக்கும். இவை மண்ணுக்குள் சென்று நுண்ணுயிரிகளைப் பெருக்கும்.

அமிர்தக் கரைசல் உடனடியாக பலனைக் கொடுக்கும். 200 லிட்டர் பேரலில் தண்ணீருடன் 20 லிட்டர் கோமயம், 20 கிலோ சாணம், 2 கிலோ வெல்லம் இவற்றோடு ஒரு கைப்பிடி மண் போட்டுக் கலந்து மண்ணில் அடித்தீர்கள் என்றால் மண் வளமாகிவிடும். ஒரு டிராக்டர் சாண எருவுக்கு இந்த 200 லிட்டர் பேரல் அமிர்தக் கரைசல் சமம். இது தவிர EM எனப்படும் Effective Micro Organism என்ற ஒன்றும் உண்டு. பரங்கி, பப்பாளி, வாழைப்பழம், வெல்லம், நாட்டுக்கோழி முட்டை, வேர் முடிச்சு, கைப்பிடி மண் இவற்றைக் குறிப்பிட்ட விகிதத்தில் சேர்த்து 10 மி.லி.க்கு 10 லிட்டர் தண்ணீர் கலந்து தெளித்தால் 15 நாட்களில் மண் வளமாகிக் கொழிக்கும். மண்ணை வளப்படுத்தவும், செடிகளின் வளர்ச்சியை அதிகரிக்கவும் இவை உதவுகின்றன. இவ்வித இயற்கை உரத் தேவைகளுக்காகவே நாங்கள் மாடுகளை வளர்க்கிறோம்.

கே: எந்தெந்தக் கீரைகளைப் பயிரிடுகிறீர்கள்?
ஜெ: அரைக்கீரை, சிறுகீரை, பொன்னாங்கண்ணி, முளைக்கீரை, அகத்திக்கீரை, புதினா, வெந்தயக் கீரை என சுமார் 10, 15 வகைகள் மட்டுமே பொதுவாக எல்லோரும் அறிந்திருப்பார்கள். ஆனால் நாங்கள் இங்கே 45 வகையான கீரைகளைப் பயிரிடுகிறோம். அதாவது முன்பு நம் வழக்கத்தில் இருந்து பின்னர் இல்லாமல் போன கீரைகளையும், நம் நாட்டிலிருந்து வெளிநாட்டுக்குச் சென்ற கீரைகளையும் விளைவிக்கிறோம். உதாரணமாக 'பேசில்' என்பது. இதை உலக நாடுகள் பலவற்றிலும், குறிப்பாக இத்தாலியன் 'பாஸ்தா' செய்யப் பயன்படுத்துகிறார்கள். அது நமது திருநீற்றுப்பச்சை தான். துளசி குடும்பத்தைச் சேர்ந்தது. மன்னர்கள் காலத்தில் அதைப் போர் வீரர்களுக்கு உணவில் கலந்து கொடுப்பார்கள். நுரையீரலுக்கு நல்லது. எவ்வளவு ஓடினாலும் மூச்சிரைக்காது. நாம் இதைப் பயன்படுத்துவதில்லை. அமெரிக்காவில் சவாய் ஸ்பினாய்ச்சி என்ற கீரை பிரபலம். அதை சாலட் ஆகச் சாப்பிடுவார்கள். இங்கே ஸ்டார் ஹோட்டல்களில் கான்டினென்டல் ஃபுட்டில் அதுவும் உண்டு. இப்படிப் பலதரப்பட்ட கீரைகளைப் பயிரிடுகிறோம்.

கே: பயிர்களில் பூச்சி பாதிப்பை எப்படிக் கட்டுப்படுத்துகிறீர்கள்?
ஜெ: பூச்சிகள் அறிவற்றவை என்றாலும், எது நல்ல கீரை என்று தெரிந்துதான் சாப்பிட வருகின்றன. ஆனால், கீரையில் சின்னச்சின்ன ஓட்டைகள் இருந்தால் பூச்சியரித்த கீரை என்று மக்கள் வாங்க மறுக்கிறார்கள். இயற்கை முறையில் விளைவித்த கீரை இப்படித்தான் இருக்கும். பூச்சிகளைக் கட்டுப்படுத்த, இஞ்சி, பச்சை மிளகாய், பூண்டு இவற்றைத் தலா 200 கிராம் எடுத்து, நன்கு அரைத்து அதை 1 லிட்டர் கோமயத்தில் கலந்து 1 : 10 என்ற விகிதத்தில் தண்ணீரில் கலந்து ஸ்பிரே செய்தால் பூச்சிகள் வரவே வராது. ஆனால் நாங்கள் அதைப் பயன்படுத்துவதில்லை.

கே: ஏன்?
ஜெ: ஒருமுறை இங்கே இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வார் வந்திருந்தார். அவர், இரண்டிரண்டு பாத்திகளுக்கு இடையே அகத்திக் கீரையை நடச் சொன்னார். எதற்கு என்று கேட்டதற்குப் பூச்சிகள் முதலில் அகத்தியைத் தாக்கும், மற்றக் கீரைகளை விட்டுவிடும். அதனால் அவை பாதுகாக்கப்படும் என்று சொன்னார். அதையே இங்கு பின்பற்றி வருகிறேன். நிறைய குறுமரங்களை நட்டு வளர்க்க வேண்டும். அங்கு பறவைகள் வந்து அமரும். அவை பூச்சிகளைச் சாப்பிடும். இதனாலும் பயிர்கள் பாதுகாக்கப்படும். அகத்தியின் வேர் முடிச்சு காற்றிலுள்ள நைட்ரஜனைப் பிரித்து மண்ணில் தக்கவைக்கும். இதனால் மண் வளமாகிறது. யூரியா போட்டால், மண்ணிலுள்ள நைட்ரஜனை உறிஞ்சிச் செடிகளுக்குக் கொடுக்குமே தவிர, தானாக காற்றிலுள்ள நைட்ரஜனை ஈர்த்து மண்ணில் வைக்காது.

மற்றபடி கீரைப் பாத்திகளுக்கு அருகில் சாமந்தி, ஆமணக்குச் செடிகளை நட்டு வைத்தால் பூச்சிகள் வராது. அதையும் மீறி பூச்சித்தொல்லை இருந்தால் மஞ்சள்நிறப் பெயிண்ட் அடித்த டப்பாக்களில் கிரீஸ் தடவி, பாத்திகளின் அருகில் போட்டுவிட்டால் போதும். பூச்சிகள் தேடி வந்து அதில் ஒட்டிக்கொள்ளும். அகத்தி, துவரை, ஆமணக்கு, காட்டாமணக்குச் செடிகளை பயிர்களைச் சுற்றி நட்டு விட்டால் அவை பூச்சிகளைத் தம்பக்கம் ஈர்த்து விடும்.

பூச்சிகளால் பயிர்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிலத்தைப் பாத்திகளாகப் பிரித்துக் கீரை சாகுபடி செய்யவேண்டும். பாத்திகளின் இடைவெளியில் அகத்தி, வல்லாரை, தூதுவளை, பிரண்டை மாதிரியான பயிர்களைப் பயிரிட வேண்டும். ஒரு பாத்தியில் தூவிய ரகத்தை அடுத்த பாத்தியில் தூவக்கூடாது. ஒரே ரகத்தைப் போட்டால், நோய்த்தொற்று ஏற்படும். அதனால், முதலில் தூவிய ரகத்தை மூன்று பாத்திகள் தள்ளித்தான் தூவ வேண்டும். இது மிகவும் முக்கியம். இம்முறையைப் பின்பற்றினால் பூச்சி பாதிப்பு வராது. இதெல்லாம் Natural Pest Management. நம் முன்னோர்கள் பின்பற்றி வந்ததுதான்.

கே: கீரையை எல்லாக் காலங்களிலும் விளைவிக்க முடியுமா?
ஜெ: நிச்சயமாக. மழையிலிருந்து பாதுகாக்க பாலி ஹவுஸ் போடுவதன் மூலமும், வெயிலிருந்து பாதுகாக்க கிரீன் ஹவுஸ் போடுவதன் மூலமும், பூச்சிகள் உள்ளே வராமல் இருக்க ஷேட் கேட் போடுவதன் மூலமும் எல்லாக் காலங்களிலும் கீரைகளை விளைவிக்கலாம். ஆனால் சீசனைப் பொறுத்து மாறுபடும்.

கே: உங்கள் விளைச்சலை எப்படிச் சந்தைப்படுத்துகிறீர்கள்?
சரவணன்: இயற்கை முறையில் விளைந்த கீரைகளில் ரசாயன ஆபத்தில்லை என்பதால் மக்களிடையே நல்ல வரவேற்பு உள்ளது. மூன்று விதங்களில் விற்பனை செய்கிறோம். நாங்களே மக்களிடம் கொண்டுசெல்வது என்ற வகையில் சென்னையில் உள்ள இயற்கை அங்காடிகள் மற்றும் கடைகள் மூலம் விற்பனை செய்து வருகிறோம். கார்ப்பரேட் குழுமங்களின் பணியாளர்களிடம் விற்பனை செய்வது இரண்டாவது. அதன்படி ஒன்பது நிறுவனங்களில் ஸ்டால்கள் அமைத்து விற்கிறோம். மூன்றாவதாக, சென்னையில் இருக்கும் ஆர்கானிக் அங்காடிகளுக்கு சப்ளை செய்கிறோம். தமிழகம் முழுவதும் விற்பனை செய்யும் எண்ணமும் இருக்கிறது. சென்னை மார்க்கெட்டே பெரிதென்பதால், அது ஸ்டெபிலைஸ் ஆன பின்னர் விரிவாக்கம் செய்யலாம் என்று திட்டமிட்டுக்கொண்டிருக்கிறோம்.

கே: இதில் போதிய லாபம் கிடைக்கிறதா?
ஜெ & சரவணன்: நிச்சயமாக. ஒரு பாத்தியில அதிகபட்சம், 100 கட்டுக் கீரை பறிக்க முடியும். ஒரு கட்டு 15, 20 ரூபாய்க்குக் குறையாமல் விற்பனை செய்ய முடியும். காசினிக் கீரையை ஒரு கட்டு 30 ரூபாய் என்றால் வாங்க யோசிப்பார்கள். அதையே பவுடராக்கி 100 கிராம் 100 ரூபாய் என்றாலும் சந்தோஷமாக வாங்குவார்கள். எதையுமே மக்கள் விரும்பும் வகையில் கொடுத்தால் நிச்சயம் லாபம் கிடைக்கும். சொல்லப்போனால் கீரையைப் பொருத்தவரை தேவையை விட சப்ளை மிகமிகக் குறைவாக இருக்கிறது. 0.001% தான் தற்போது செய்கிறோம். 10 சதவீதமாவது செய்ய வேண்டும் என்ற முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறோம். முறையாகச் செய்தால் இதில் நல்ல லாபமீட்ட முடியும்.



கே: விவசாயத்தில் எதிர்காலமே இல்லை என்கிறார்களே, சரிதானா?
ஜெ: விவசாயம் நலிந்து போய்விட்டது உண்மைதான். நல்லபடியாக இருந்தால் எல்லோரும் விவசாயம் செய்வார்களே. எதற்காகத் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்? அழிவை நோக்கி நாம் போய்க் கொண்டிருக்கிறோம். அதைத் தடுத்து நிறுத்தியாக வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். அதற்குச் செய்ய வேண்டியது என்னவென்றால், மாற்று வழிக்கு, அதாவது நமது பண்டைய, பாரம்பரிய இயற்கை விவசாயத்திற்குத் திரும்புவதுதான்.

ஆனால், பாரம்பரிய விவசாயிகள் இதில் ஈடுபாடு காட்டவில்லை. அது குடிகாரர்களைத் திருத்த முயற்சிப்பது போன்றது. பூச்சிக்கொல்லிகள், ரசாயன உரங்கள் இல்லாமல் பயிர் செய்யமுடியாது என்ற எண்ணம் பலரது மனதிலும் ஆழமாகப் பதிந்திருக்கிறது. ஐந்து ஏக்கரில் நெல் சாகுபடி செய்தால்தான், இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் லாபம் கிடைக்கும். ஆனால், அரை ஏக்கரில் கீரை பயிரிட்டு, இருபத்தைந்து ஆயிரம் ரூபாயைப் பெற முடியும். இதை விவசாயிகள் உணர்வதில்லை. அவர்களை மாற்றுவது மிகக் கடினம்.

இந்த மாற்றத்தைப் புதிய நபர்களால் கொண்டு வர முடியும். விவசாயத்திற்குத் தேவை ஆர்வமும் உழைப்பும்தான். படித்த, விவசாயத்தில் ஆர்வமுடைய இளைஞர்கள் நிச்சயம் செய்வார்கள், மாற்றம் கொண்டு வருவார்கள் என்று நான் நம்புகிறேன். இளைஞர்கள் முன்வந்தால் மட்டுமே அந்த மாற்றம் நிகழும்.

கே: விவசாய வேலைக்கு ஆள் கிடைப்பதில்லை என்கிறார்களே....
ஜெ: மற்றப் பயிர்களுக்கு நடவின்போது மட்டும் ஆட்கள் தேவைப்படுகின்றனர். பின்னர் ஓரிரு மாத இடைவெளியில் களையெடுக்க ஆட்கள் தேவைப்படுவர். அப்புறம் அறுவடையின் போதுதான். அதைக்கூட மெஷின்கள் செய்துவிடுகின்றன. விவசாயத்தில் நிரந்தரமான வேலைவாய்ப்பு குறைந்து விட்டது என்பதால்தான் அவர்கள் வேறு வேலைகளுக்குச் செல்கின்றனர். ஆனால் கீரை அப்படியல்ல. பாத்தி கட்ட, விதை விதைக்க, களை எடுக்க, பறிக்க, பறித்ததைக் கட்ட என்று தினமும் அதற்கு வேலை செய்யவெண்டும். தினந்தோறும் வேலையும், சம்பளமும் கிடைக்கிறதென்றால் அந்த வேலைக்கு மக்கள் வருவார்கள். அதனால் கீரையைப் பொருத்தவரை வேலையாள் பிரச்சனை என்பது அறவே இல்லை. மேலும், பிற வேலைகளை முடித்து, ஓய்வு நேரத்தில் இந்த வேலையைச் செய்யலாம் என்பதால் பெண்கள் நிறைய இந்த வேலைக்கு வருகின்றனர்.

கே: இன்னும் என்னென்ன பயிரிடலாம் என்று நினைக்கிறீர்கள்?
ஜெ: கத்தரி, வெண்டை, தக்காளி போன்றவற்றைப் பயிரிடுகிறோம் என்றாலும் எங்கள் நோக்கம் இதில் மற்றவர்களை ஈடுபடுத்த வேண்டும் என்பதுதான். நாங்கள் செய்திருப்பது ஆரம்பம்தான். நாங்கள் கீரை பயிர் செய்தால் வேறொருவர் காய்கறிகள் பயிரிடலாம். மற்றவர் வாழை பயிரிடலாம். இன்னொருவர் நெல், மற்றொருவர் கரும்பு என்று செய்யலாம். பெரிய அளவில் நிலம் வைத்திருப்பவர்கள் நிலத்தின் ஒரு பகுதியில் கீரையை விவசாயம் செய்வது, அவர்கள் பொருளாதாரத்திற்கும் உதவும். மண்ணைப் படிப்படியாக இயற்கை விவசாய முயற்சிகளுக்கு தயாராக்கவும் உதவும். எங்கள் நோக்கம் இதன்மூலம் இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பதுதான்.

கே: நீங்கள் ஏதேனும் பயிற்சி வகுப்புகள் நடத்துகிறீர்களா?
ஜெ: எங்களிடம் பயிற்சி எடுத்த ஒருவர் சென்னையை அடுத்து சிறு பண்ணையில் இதைச் செய்து வருகிறார். பெங்களூரில் ஒருவரும் மதுரையில் ஒருவரும் செய்கின்றனர். ஆர்வமுள்ளோரும், பள்ளி, கல்லூரி மாணவர்களும் இங்கு வந்து பார்த்துத் தகவல் பெற்றுச் செல்கிறார்கள். நானும் பல பள்ளி, கல்லூரிகளில் பேசியிருக்கிறேன். எல்லோருக்கும் நான் சொல்வது என்னவென்றால், நான் பேசுவதைக் கேட்பதைவிட இங்கு வந்து தங்கி, மண்ணை வளப்படுத்துவது, கீரை விதைப்பது, களை எடுப்பது, பறிப்பது, கீரையைப் பராமரிப்பது போன்றவற்றைக் கற்றுக் கொண்டால் நல்ல பலனைத் தரும் என்பதுதான். அனுபவ அறிவுதான் முக்கியம். புத்தகத்தைப் படித்தோ, பேசுவதைக் கேட்டோ எல்லாவற்றையும் கற்றுக்கொள்ள முடியாது. மேலும் நாங்கள் யாரையும் போட்டியாளராக நினைக்கவில்லை. எல்லோருக்கும் கற்றுத் தருவோம்.

வெளிநாடுகளுக்குச் சென்று உழைக்கும் பலருக்கு நம் நாட்டில் விவசாயம் செய்யும் ஆவல் இருக்கிறது. ஆனால் அது வெற்றிகரமாக இருக்குமா, லாபம் வருமா என்ற அச்சமும் இருக்கிறது. அப்படி ஆர்வம் உள்ளவர்களுடன் எங்கள் அனுபவத்தை, தொழில்நுட்பங்களைப் பகிர்ந்து கொள்ளத் தயாராக இருக்கிறோம். விவசாயம் செய்தால் சம்பாதித்ததையெல்லாம் இழந்து விடுவோம் என்ற எண்ணத்தை நாங்கள் மாற்றியமைக்க விரும்புகிறோம். இதற்கு ஆர்வம் உள்ளவர்கள்தான் தேவையே தவிர, அனுபவம் உள்ளவர்கள் அல்ல. அந்த அனுபவத்தை இயற்கை தானாகத் தரும். interest மற்றும் investment உள்ளவர்களால் இதை வெற்றிகரமாகச் செய்ய முடியும். Farm to Consumer Pvt. Ltd என்பது பதிவு செய்யப்பட்ட எங்கள் நிறுவனம். இதன் வழியே தனியார் முதலீட்டில் (private equity) நிதி திரட்டி இதை வெற்றிகரமாக்குவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். Vertical farming கொண்டுவரும் எண்ணமும் உள்ளது. ஆகவே ஆர்வமுள்ள இளைஞர்களை, அவர்கள் எங்கு இருந்தாலும் சரி. அன்போடு அழைக்கிறேன். வாருங்கள். கற்றுக் கொள்ளுங்கள். இயற்கை நமக்கு எல்லாவறையும் கற்றுத்தரும்.

கே: எதிர்கால இலக்குகள் என்ன?
ஜெ & சரவணன்: கீரையைப் பொருத்தவரை ஏற்கனவே மார்க்கெட் இருக்கிறது. ஆனால் குறித்த நேரத்திற்குள் அதைக் கொண்டுபோய்ச் சேர்ப்பது மிக முக்கியம். அதுபோலக் கீரைகளின் பயன்களையும் மக்களிடம் கொண்டுசேர்க்க வேண்டியது அவசியம். கீரையை அப்படியே விற்காமல் அதை பேக் செய்து தருவது அல்லதுச் சமைக்கத் தயாராக ஆய்ந்து அதை பேக் செய்து தருவது, பேஸ்ட் ஆக, பவுடராக விற்பனை செய்வது என்று பல திட்டங்கள் இருக்கின்றன. வீட்டுக்கு வீடு பாலைப் போல கீரைகளை டோர் டெலிவரி செய்யும் என்ற திட்டமும் உள்ளது.

வெளிநாடுகளில் வாழும் நம் மக்களுக்கு ஏற்றுமதி செய்யும் எண்ணமும் இருக்கிறது. விற்பனைச் சந்தையை நாங்கள் இணைய தளம், ஃபேஸ்புக் வாயிலாக விரிவாக்கம் செய்து கொண்டிருக்கிறோம். இன்னும் ஆண்ட்ராய்ட் போன்ற அப்ளிகேஷன்கள் மூலம் அதனை விரிவாக்கும் முயற்சிகளில் ஈடுபட்டிருக்கிறோம். பலரும் எங்களது நேர்காணல்களைப் பார்த்துவிட்டுத் தொடர்பு கொள்கின்றனர். இயற்கை விவசாயம் செய்ய, முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்கள் எங்களைத் தொடர்பு கொள்ளலாம். கிரவுட் சோர்ஸ், அதாவது எல்லோரும் சிறிய அளவில் பங்கு முதலீடு செய்து லாபத்தை அதற்கேற்பப் பிரித்துக் கொள்வது. அதற்கான பணிகளைச் செய்து கொண்டிருக்கிறோம்.

வலைத்தளம்: nallakeerai.com
மின்னஞ்சல்: contact@farm2consumer.com, sales@farm2consumer.com
முகநூல்: facebook.com/NallaKeerai

சந்திப்பு, படங்கள்: அரவிந்த் சுவாமிநாதன்

*****


கீரைகளின் பயன்கள்
இயற்கை விவசாயத்தால் விளையும் உணவு பொருட்களால் உடல்நலத்திற்கு தீங்கு ஏற்படாது. சமைக்கும்போதே அதன் மணத்தில் வேறுபாடு தெரியும், சாப்பிடும்போது ருசியில் வித்தியாசம் புரியும். கீரைகளை உண்ண ஆரம்பித்தால் குற்றவாளிகளின் மனநிலையில்கூட மாற்றம் ஏற்படுகின்றது. அவர்கள் உணர்வுகள் மென்மையாகின்றன என்று உளவியலாளர்கள் சொல்லியிருக்கிறார்கள். கீரை என்பது மிருதுவான உணவு. அதை உண்பவர்களிடமும் அந்தத் தன்மையை ஏற்படுத்துகிறது.

தூதுவளை (சளி, இருமல், கபம் தொல்லை நீக்குவது); முடக்கற்றான் என்னும் முடக்கத்தான் (மூட்டு வலியை நீக்குவது); வல்லாரை (மூளை வளர்ச்சிக்கு உதவுவது); கல்லிளக்கி (சிறுநீர்க் கற்களைக் கரைப்பது); கீழாநெல்லி (மஞ்சள் காமாலைக்கு மருந்து); மூக்கரட்டான் (உள்ளுறுப்புக்களைத் தூண்டிச் செயல்பட வைப்பது); காசினிக் கீரை (சர்க்கரை நோய்க்கு நல்லது. இன்சுலின் போட்டுக் கொள்பவர்களுக்குக் கூட இதைச் சாப்பிட்டால் நல்ல குணம் கிடைக்கும்); பிரண்டை, குப்பை மேனி, தும்பை, முள்ளுக் கீரை, குப்பைக் கீரை என்று பலதரப்பட்ட கீரைகளைப் பயிரிடுகிறோம். அகத்தி நம் உடம்பில் உள்ள அசுத்தங்களை, விஷங்களை வெளியேற்றி விடும். சித்த மருத்துவர்கள் மற்ற மருந்துகள் சாப்பிடும்போது அகத்தி சாப்பிடக்கூடாது என்று சொல்வதற்குக் காரணம் இதுதான். அந்த மருந்தையும் வெளியேற்றி விடும். கால்சியம் குறைபாடு நீங்க, குழந்தைப் பேறு பெற, உயிரணுக்கள் உற்பத்தி அதிகரிக்க, இரும்புச் சத்துக் குறைபாட்டை நீக்க, எலும்பு வளர்ச்சிக்கு எந்தெந்தக் கீரை உதவும் என்கிற தகவல்களை நாங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க விரும்புகிறோம்.

- ஜெகன்னாதன்

*****


இயற்கை விவசாய சாதனைகள்
இயற்கை விவசாயத்தில் 80 மூட்டை நெல்லை ஒருவர் கடந்த ஆண்டில் எடுத்திருக்கிறார். அவருக்குத் தமிழ்நாட்டிலேயே அதிக விளைச்சல் செய்தற்காக அரசாங்க விருதும் ஐந்து லட்சம் பணமும் கிடைத்தது. அவர் எப்படிச் சாதித்தார், பிறரும் எப்படி அதே விளைச்சலை உண்டாக்குவது என்பது பற்றியெல்லாம் யாரும் அக்கறை கொள்ளவில்லை. காரணம், அவர் இயற்கை விவசாயி! அவர் செயற்கை முறையில் உரம் போட்டு இவற்றைச் சாதித்திருந்தால் அந்தந்த நிறுவனங்களே மிகப்பெரிய விளம்பரம் செய்து, பரபரப்பை ஏற்படுத்தித் தங்கள் விற்பனையைப் பெருக்கிக் கொண்டிருக்கும். உலக அளவில் அதிகம் உருளைக்கிழங்கு விளைவித்திருப்பது நம் இந்தியாவில் உள்ள பீகாரில்தான். இது ஒரு கின்னஸ் ரெகார்ட். அவர் ஒரு இயற்கை விவசாயி. உலகின் பெரிய எலுமிச்சையை விளைவித்து, தமிழகத்தின் அந்தோணிசாமி தேசிய விருது பெற்றிருக்கிறார். அவர் ஒரு இயற்கை விவசாயி. செயற்கைமுறையில் சராசரியாகக் கரும்பு 40-50 டன்தான் விளைவிக்கிறார்கள். ஆனால் மைசூர் அருகே ஒரு விவசாயி கடந்த 17 வருடங்களாக 100 டன் விளைச்சல் காண்கிறார். அவரை கவனிக்க, அவரிடம் கற்க ஆளில்லை. இந்த நிலை மாறவேண்டும்.

- ஜெகன்னாதன்

*****


விஷப் பயிர்கள்
இன்றைக்கு சந்தையில் விற்கும் பெரும்பாலான உணவுப் பொருள் விஷம் (உரம்) போடப்பட்டவை. கீரைகளை எடுத்துக் கொள்வோம். அவற்றின் விளைச்சல் காலமே 15-45 நாட்கள்தான். அந்தக் குறுகிய காலத்தில் அவ்வப்போது பூச்சிக்கொல்லி தெளிப்பார்கள். சில நாட்களில் அது நம் சமையலறைக்கு வரும். அந்த விஷக் கீரையை நீங்கள் என்னதான் கழுவிக் கழுவிப் பயன்படுத்தினாலும் அதிலிருக்கும் விஷம் போகவே போகாது. அத்தகைய கீரையைச் சாப்பிடுபவர்கள் நேரடியாக விஷத்தைச் சாப்பிடுகிறார்கள். ஒரு வாழைக்காய் மீது பூச்சிக்கொல்லி தெளித்திருந்தாலும், தோலை உரித்து விட்டுத்தான் பழத்தைச் சாப்பிடுகிறோம். பூச்சிக்கொல்லி அடித்த நெல், உமி நீக்கி, பாலிஷ் செய்யப்பட்டு உணவாக நம் மேசைக்கு வர மூன்று மாதம் ஆகலாம். ஆறு மாதம் ஆகலாம். ஏன் ஒருவருடமே கூட ஆகலாம். அதனால் அந்த வீரியம் குறைய வாய்ப்பு இருக்கிறது. கீரை அப்படியல்ல. மருந்தடிக்கப்பட்ட சில நாட்களிலேயே நமக்கு உணவாகிறது. அது நேரடியாக விஷம் சாப்பிடுவது போலத்தான். ஆகவே கீரையை மட்டுமாவது உரம், பூச்சிக்கொல்லி இல்லாமல் உற்பத்தி செய்ய வேண்டியது அவசியம். ஏனென்றால் கர்ப்பிணித் தாய்மார், குழந்தைகள், வயதானவர்கள் என்று பலரும் அதை உண்கிறார்கள்.

இந்த விஷ உணவுகளால் நோய்கள் பெருகுகின்றன. 12 சதவீதம் இருந்த புற்றுநோய் இன்றைக்கு 36 சதவீதம் ஆகிவிட்டது. சிறுநீரகத்தில் கல், சர்க்கரை என்று நோய்கள் இன்றைக்கு சிறுவர் முதல் பெரியோர்வரை பாதித்துள்ளன. பார்மசூடிகல் கம்பெனிக்காரர்கள் இந்தியாவின் மூன்றாவது பெரிய பணக்காரர்கள் லிஸ்டில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு என்ன அர்த்தம்? என் கிராமத்தில் பத்து, பதினைந்து வருடங்களுக்கு முன்பு மெடிகல் ஷாப்புகளே இல்லை. இன்றைக்கு ஏழு மெடிகல் ஷாப்புகள்! அந்த அளவுக்கு வியாதிகள் பெருகி இருக்கின்றன. காரணம் விஷ உணவு, விஷக் காற்று, விஷச் சூழல்.

இந்தியாவில் அதிகம் கேன்சர் நோயாளிகள் உள்ள மாநிலம் பஞ்சாப். தமிழ்நாட்டில் புற்று நோய் அதிகம் உள்ள மாவட்டம் ஈரோடு. இந்த இரு இடங்களிலுமே மற்றப் பகுதிகளைவிட மிக அதிக அளவில் உரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. சாப்பிடுவதால் மட்டும்தான் என்பதில்லை விஷ மருந்துகளைத் தெளிக்கும்போது அவை காற்றில் பரவி காற்றையும், மண்ணால் உறிஞ்சப்பட்டு நீராதாரங்களையும் பாதிக்கின்றன. அதனாலும் சூழல் மாசுபட்டு நோய்கள் பெருகுகின்றன. இயற்கை உணவுகளை, இயற்கையாக விளைந்த கீரை போன்றவற்றை உண்பது அதிகமானால், இந்த அளவுக்கு வியாதிகளோ, மருந்துக் கடைகளோ இருக்காது என்று நான் நம்புகிறேன்.

- ஜெகன்னாதன்

© TamilOnline.com