கழனியூரன்
தமிழ்ப் படைப்புகளில் வட்டார வழக்கைச் சுவைபடப் புகுத்தியதில் ஷண்முகசுந்தரம், பூமணி, பொன்னீலன், கி.ராஜநாராயணன் எனப் பலர் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்துள்ளனர். இவ்வரிசையில் ஒருவர் கழனியூரன். கவிஞர், எழுத்தாளர், ஆய்வாளர், நாட்டுப்புறக் கதைகள்-பாடல்கள் சேகரிப்பாளர், பத்திரிகை ஆசிரியர் என்று பன்முகங்கள் கொண்ட கழனியூரனின் இயற்பெயர் எம்.எஸ். அப்துல் காதர். திருநெல்வேலியில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில் பிறந்த இவர், ஊரின்மீது கொண்ட பற்றால் தன் ஊர்ப்பெயரையே தனக்கான புனைபெயராய் வைத்துக்கொண்டார். கழுநீர்குளத்தில் உள்ள மறவா நடுநிலைப்பள்ளியில் பயின்ற இவர், பின்னர் உயர்கல்வியை வீரகேரளம்புதூர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயின்றார். பள்ளிப் பருவத்திலேயே கவிதை ஆர்வம் வந்துவிட்டது. ஆசிரியர் பயிற்சிப் படிப்பின்போது நிறையக் கவிதைகள் எழுதியிருக்கிறார்.

எப்போதும் மத்தாப்பு
கொளுத்தி விளையாடுகிறது
மலையருவி

அன்புடைமை அதிகாரத்தை
ஆசிரியர் கற்பிக்கிறார்
கையில் பிரம்புடன்


போன்ற கவிதைகள் இவரது கவிதைத் திறனுக்குச் சான்று. "நட்சத்திர விழிகள்", "நிரந்தர மின்னல்கள்", "நெருப்பில் விழுந்த விதைகள்" போன்றவை இவரது முக்கியமான கவிதைத் தொகுப்புகளாகும். கரிசல் காட்டு எழுத்தாளர் கி. ராஜநாராயணனுடனான சந்திப்பும், தொடர்பும் இவரது எழுத்துக்கு விதையாகின. அவருடன் இணைந்து நாட்டுப்புறக் கதைகள் தொகுப்பு வெளிவர உறுதுணையாக இருந்தார். அந்த அனுபவங்களையும் தன் தொடர் சேகரிப்பில் கிடைத்தவற்றையும் தொகுத்து கட்டுரைகளாகவும் நூல்களாகவும் வெளியிட ஆரம்பித்தார். தன் படைப்புகள் பற்றி இவர், "ஆரம்பத்தில் கி.ரா.வுக்கு விதவிதமான பல்வேறு நாட்டுப்புறக் கதைகளைச் சேகரித்துக் கொடுத்தேன். அதனால் எனக்கு நெடிய களப்பணி அனுபவம் கிடைத்தது. சேகரித்த கதைகளை எப்படி எழுத்தில் பதிவு செய்யவேண்டும் என்ற வித்தையை, ஒரு குழந்தைக்குத் தாய் சொல்லிக் கொடுப்பதைப்போல நேரடியாகவும், மறைமுகமாகவும் கி.ரா. எனக்குக் கற்றுக்கொடுத்தார்'' என்கிறார்.

கழனியூரனின் நூல்களில் குறிப்பிடத்தகுந்தது கி.ரா.வுடன் இவர் இணைந்து எழுதிய, "மறைவாய்ச் சொன்ன கதைகள்". நூறு நாட்டுப்புறப் பாலியல் கதைகளின் தொகுப்பு இந்நூல். பெரும்பாலான கதைகள் ‘தாத்தா நாயக்கர்’ என்ற கதைசொல்லியின் கூற்றாக அமைந்திருக்கின்றன. பல சர்ச்சைக்குரிய விவாதத்தைத் தூண்டும் கதைகளும் இந்தத் தொகுப்பில் அடங்கியுள்ளன. "வெற்றிலை வந்த கதை", "வெண்டைக்காய் பிறந்த கதை", "கடல் தோன்றிய கதை" போன்றவை சுவாரஸ்யமானவை. நாட்டுப்புறப் பாலியல் கதைகள் இவ்வளவு விரிவாகத் தொகுக்கப்பட்டு வெளியாகியிருப்பது தமிழில் இதுவே முதல் முறையாகும். சிறுவர் கதைகள், நாடோடி இலக்கியம், நாட்டுப்புறக் கதைகள், சிறுகதைகள், கடித இலக்கியம் எனக் கிட்டத்தட்ட முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களைக் கழனியூரன் எழுதியிருக்கிறார். "செவக்காட்டு மக்கள் கதைகள்", "நெல்லை நாடோடிக் கதைகள்", "நாட்டுப்புறத்து நகைச்சுவைக் கதைகள்", "நாட்டுப்புற நீதிக்கதைகள்", "பன்னாட்டு சிறுவர் நாடோடிக் கதைகள்", "இரஷ்ய நாட்டு நாடோடிக் கதைகள்", "தாத்தா பாட்டி சொன்ன கதைகள்", "நாட்டுப்புறக் கதைக் களஞ்சியம்", "குறுஞ்சாமிகளின் கதைகள்", "நாட்டுப்புற வழக்காறுகள்", "நாட்டுப்புற நம்பிக்கைகள்" போன்ற தொகுப்புகள் குறிப்பிடத் தகுந்தவை. சாகித்ய அகாதமி, உயிர்மை, சந்தியா, மித்ரா, அமிர்தா, பூங்கொடி பதிப்பகம் உள்ளிட்ட பதிப்பகங்கள் இவரது நூல்களை வெளியிட்டுள்ளன.

கழனியூரனின் கதைகள் மண்வாசம் கொண்டவை. கிராமப்புற மக்களின் நம்பிக்கையைப் பேசுபவை. மக்களிடையே நிலவும் சில நம்பிக்கைகள் சிலரால் மூடநம்பிக்கையாகக் கருதப்பட்டாலும் அவ்வகை நம்பிக்கைக்கு காரணம் என்ன, ஏன் என்பது குறித்தெல்லாம் பல இடங்களுக்கும் பயணம் செய்து, அலைந்து பலரைச் சந்தித்து, ஆராய்ந்து கட்டுரைகளாகவும் நூல்களாகவும் தந்திருக்கிறார். அந்த வகையில் குலசாமிகள் என்றும், குறுஞ்சாமிகள் என்றும் அழைக்கப்படும் கிராமப்புற சிறுதெய்வங்களின் வரலாற்றைக் கல்கி வார இதழில் தொடராக எழுதினார். அவை பின்னர் "குறுஞ்சாமிகளின் கதைகள்" என்ற தலைப்பில் நூலாக வெளியானது. இச்சாமிகள் மக்களோடு மக்களாக வாழ்ந்து, ஏதோ ஒரு விதத்தில் மற்றவர்கள் மனதில் தெய்வ நிலை எய்தியவர்கள் என்பதை இந்நூலில் ஆதாரத்துடன் சுட்டியிருக்கிறார். வீரச்செயல் புரிந்து மாண்ட வீரன், கொடுமையால் தீப்பாய்ந்து இறந்த பெண், அநீதியாக தவறுதலாகக் கொல்லப்பட்ட மனிதன் போன்றோர்களே பின்னாளில் சிறு தெய்வமாக, வழிபாட்டுக்குரியவர்களாக வளர்ந்தனர் என்னும் இவரது ஆய்வு முடிவு சிந்திக்கத்தக்கது. நாட்டார் வழிபாட்டில் இவரது நூல் ஒரு முக்கிய ஆவணமாகக் கருதத்தக்கது. "மண்பாசம்" நூல் மண்ணின் மாண்பினையும், தமிழர்களின் நம்பிக்கைகள், திருவிழாக்கள், மரபுகள், புதிர்கள், பழக்க வழக்கங்கள் குறித்தான முற்றிலும் மாறுபட்ட ஓர் ஆவணமாகத் திகழ்கிறது. "மண்ணின் கதைகள் மக்களின் கதைகள்" என்பது 111 நாட்டுப்புறக் கதைகளின் தொகுப்பு. "சமரசம்" இதழில் "இஸ்லாமிய நாட்டுப்புறக் கதைகள்" என்ற விரிவான ஆய்வுத் தொடரையும் எழுதியிருக்கிறார். சிறந்த படைப்பாளிக்கான கரிசல் திரைப்படச் சங்க விருது, சிறந்த சாதனையாளருக்கான அன்பு பாலம் விருது போன்ற விருதுகளைப் பெற்றிருக்கிறார். கதைகளின்மீது இருக்கும் ஆர்வத்தால் "கதை சொல்லி" என்ற இதழையும் தொடங்கி நடத்தி வருகிறார்.

தன்னையும், தன் கதைகளையும் பற்றிச் சொல்லும்போது, "என் கதைகளில் வரும் கதாபாத்திரங்கள் பலரும் இவ்வூரைச் சேர்ந்தவர்களே. நான் படித்தது, பணி செய்வது என எல்லாமே இந்தக் கிராமம்தான். ஆணி அடித்ததைப் போல் எங்கும் இடம்பெயராத ஓர் எழுத்தாளன் நான். சில எழுத்தாளர்களுக்கு பணி நிமித்தம் மற்றும் பல காரணங்களால் வேறு ஊருக்கு இடம்பெயரும் நிலை கிட்டும். ஆனால், பிறந்ததில் இருந்தே சொந்த ஊருடனும் சொந்த ஊர் மக்களுடன் வாழும் பேறு பெற்றவன் நான்!" என்கிறார், பெருமையுடன்

பள்ளித் தலைமையாசிரியராகப் பணிபுரிந்து பணி ஓய்வுபெற்ற இவரது பயணம் நாட்டுப்புறவியலில் இளம்முனைவர் பட்டம், முனைவர் பட்டம், முதுநிலை ஆய்வுகள் என்று விரிகிறது. மதுரை காமராஜர் பல்கலைக்கழகம், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகம் எனப் பல கல்லூரிகளிலும், தமிழக அரசின் ஏழாம் வகுப்பு தமிழ்ப்பாட நூலிலும் இவரது சிறுகதைகள் பாடமாக வைக்கப்பட்டுள்ளன. கி. ராஜநாராயணன் கரிசல் காட்டு கதை சொல்லி என்றும், நெல்லை மண் சார்ந்த படைப்புகளைத் தரும் கழனியூரனை செவக்காட்டு கதை சொல்லி என்றும் இலக்கிய உலகம் அடையாளப்படுத்துகிறது. தமிழ்ச் சிறுகதை உலகில் ஆசிரியப் பணியோடு எழுத்துப் பணியையும் ஒரு வரமாகக் கருதிப் படைப்பிலக்கியம் வளர்த்தவர்கள் பலர். அ.சீ.ரா., டாக்டர் மு.வ., இந்திரா பார்த்தசாரதி எனப் பலரை இதற்கு உதாரணமாகச் சுட்டலாம். அந்த வரிசையில் செவக்காட்டு கதைசொல்லி கழனியூரனுக்கும் மிகமுக்கிய இடமுண்டு.

அரவிந்த்

© TamilOnline.com