ஆதியோகிக்கு அர்ப்பணம்: ராதே ஜக்கியின் பரதநாட்டியம்
மே 17, 2014 அன்று செல்வி. ராதே ஜக்கி 'ஆதியோகிக்கு அர்ப்பணம்' என்ற பெயரில் நாட்டிய நிகழ்ச்சி ஒன்றைப் பாலோ ஆல்டோவின் ஆல்பர்ட் ஸ்கெல் யூத சமுதாய மையத்தில் வழங்கினார். ராதே ஜக்கி, மனிதநேய ஆர்வலரும் ஞானியுமான சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களின் மகள் ஆவார்.

ஆதியோகி திட்டத்தைச் செயல்படுத்துவதில் கைகொடுக்கவே இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டது. யோக கலாசாரத்தைத் தோற்றுவித்த முதல் யோகிக்கு அர்ப்பணமாக இத்திட்டம் அமைவதுடன், மக்களில் உயர் பிரக்ஞையை ஏற்படுத்தவும் வகைசெய்கிறது. கேம்பிரிட்ஜ் பல்கலை, வெஸ்ட்மின்ஸ்டர் அபே போன்ற புகழ்பெற்ற இடங்களில் நடனம் ஆடிய பெருமைக்குரியவர் ராதே.

முதல் நடனத்தைப் புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரும், நடன ஆசிரியருமான சாயலி கோஸ்வாமி வழங்கினார். திருமதி. கோஸ்வாமியின் நடனம் தியானத்தைக் குறிப்பிடும் விதமாக அமைந்தது. இறுதி நிகழ்ச்சியை நிஹாரிகா மொஹந்தி மற்றும் நவ்யா நடராஜன் வழங்கினர். இருவரும் வெவ்வேறு பாரம்பரிய நடனங்களில் சிறந்து விளங்குபவர்கள். "இது இருவேறு நடன முறைகளின் சங்கமம்; ஒரு புத்துருவாக்கம்" என இதைப்பற்றி மொஹந்தி கூறினார். செல்வி. நவ்யா "நீங்கள் நடன அசைவுகளை உணரும்போது நடனத்தை உணர முடியும்" என்று குறிப்பிட்டார். ஆதியோகிக்கு அர்ப்பணிப்பாக அன்று நடனத்தை வழங்கிய அனைத்துக் கலைஞர்களிடத்தும் ஆனந்தம் பொங்கிப் பெருகியதென்னவோ உண்மை.

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com