பாலசம்ஸ்கிருதி சிக்ஷா: ஆண்டு விழா
மே 24, 2014 அன்று சன்னிவேல் சனாதன தர்ம கேந்திரக் கோவிலில் 'பாலசம்ஸ்கிருதி சிக்ஷா' அமைப்பு தனது 4ஆம் ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. அதன் சிறார்கள் வழங்கிய கலைநிகழ்ச்சி இதில் இடம்பெற்றது. நிகழ்ச்சிக்கு சங்கரா கண் அறக்கட்டளையின் அமெரிக்கப் பிரிவு நிறுவனர் திரு. முரளி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார் .

பங்குபெற்ற அத்தனை குழந்தைகளும் 5 முதல் 10 வயதுக்கு உட்பட்டவர்கள். தெளிவான உச்சரிப்பு, சுருதி லயம், பக்தி நிரம்பிய குரலில் சமஸ்கிருத சுலோகங்களையும், ஸ்தோத்திரங்களையும், பஜனைப் பாடல்களையும் இசைத்தனர். தாம் இந்த ஆண்டு கற்ற, ஆதிசங்கரர் இயற்றிய, சிவ பிரதாஹ் ஸ்மராமி, சிவமானஸ பூஜை, ஹனுமான் சாலிஸா ஆகியவற்றை ஒருங்கிணைந்து அழகாக இசைத்தனர்.

மனித நேயத்தையும், தர்மத்தையும் பேண, சங்கரா கண் அறக்கட்டளை, சமுதாய சேவை (Community Seva) போன்ற அமைப்புகளை ஆதரிக்கக் கோரி வைபவ் என்ற சிறுவன் ஆற்றிய உரை மெச்சத் தக்கதாகும். 'ஹனுமான் - ராம தூதன், ராமதாசன்' என்ற நாடகத்தில் குழந்தைகள் நன்றாக நடித்தனர். ராவணவதம் முடிந்து ராமர் அயோத்தி திரும்பும் புஷ்பக விமானத்தை அழகாக வடிவமைத்திருந்தனர். 'ஓம் நமசிவாய' என்ற நாட்டியப் படைப்பின் மூலம் சிவபெருமானின் பஞ்சபூத பரிமாணங்களைக் கண்ணுக்கு விருந்தாக்கினர். நடனத்திற்கு முன் குழந்தைகள் பாடிய "நமசிவாயவே ஞானமும் கல்வியும்" என்ற அப்பர் தேவாரம் அருமையாக, பொருத்தமாக இருந்தது.
சிறப்பு விருந்தினர்களாக 'பிரியா லிவிங்' என்ற இந்திய முதியோர் இல்ல வாசிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர். நிகழ்ச்சியை INDTVUSA என்ற தொலைக்காட்சி ஒளிபரப்புச் செய்தது. பாலசம்ஸ்கிருதி சிக்ஷா அமைப்பு விரிகுடாப் பகுதி இநதியக் குழந்தைகளுக்கு இந்தியப் பண்பாடு, தெய்வ நம்பிக்கை, கலாசாரம் ஆகியவற்றை போதிக்கும் நோக்கத்துடன் நீரஜா பரமேஸ்வரன், மகேஸ்வரி ரங்கன் ஆகியோரால் 2010ம் ஆண்டு தொடங்கப்பட்டது. அமைப்பின் செயல்பாடுகளை சனாதன தர்ம கேந்திரத் தலைவர் ரமேஷ் ஹரிஹரன், பண்டிட். சோமயாஜி மற்றும் பண்டிட். ஜோஷி ஆகியோர் பாராட்டினர் .

செய்திக்குறிப்பிலிருந்து

© TamilOnline.com