மே 25, 2014 அன்று சிமி வேல்லியில் (கலிஃபோர்னியா) உள்ள தமிழ்ப் பள்ளியின் இரண்டாவது ஆண்டு விழா அங்குள்ள அட்வென்டிஸ்ட் பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் நிர்வாகி திரு. யோகா தொகுத்து வழங்கிய இந்நிகழ்ச்சிக்குப் பள்ளியின் துணை முதல்வர் திரு. டேவிட் நேசமணி தலைமை வகித்துச் சிறப்புரை ஆற்றினார். முன்னதாக திருமதி. சுபாஷிணி வரவேற்புரை வழங்கினார். பள்ளியின் நிதி அறிக்கையைத் துணை முதல்வர் திருமதி. நிர்மலா வாசித்தார்.
தமிழ்த் தாய் வாழ்த்துடன் நிகழ்ச்சி தொடங்கியது. "செந்தமிழ் நாடெனும் போதினிலே" என்ற பாரதியின் பாடலுக்குக் குழந்தைகள் ஆடிய பரதநாட்டியம் அருமை. திருமதி. மகாலக்ஷ்மியின் வகுப்புக் குழந்தைகள் 'பரமார்த்த குரு', 'தெனாலி' நாடகங்கள் அருமை. திருமதி. ஜெயஸ்ரீயின் வகுப்பினர் பஞ்சதந்திரக் கதைகளை நடித்தனர். திருமதி. சக்தி அவர்களின் வகுப்புக் குழந்தைகள் நடத்திய பொங்கல்பற்றிய நாடகம் இந்தியாவில் பொங்கல் கொண்டாடும் முறையை உணர்த்தியது.
திரு. ஷண்முக சுந்தரத்தின் வகுப்பு மாணவர்கள் வழங்கிய வில்லுபாட்டு, சமூக சிந்தனையுடன் அமைந்த தெருக்கூத்து ஆகியவை வெகு சிறப்பு. திருமதி. காந்திமதியின் வகுப்புப் பிள்ளைகள் வழங்கிய 'விக்ரமாதித்யன்', 'தலையின் சிறப்பு' நாடகங்கள் சுவையாக அமைந்திருந்தன. திரு. நாச்சியப்பன் வகுப்புக் குழந்தைகள் "என்ன கற்றோம்?" என்பதையே நாடகமாக வழங்கினர். திரு. யோகா அவர்களின் நன்றியுரையுடன் நிகழ்ச்சி நிறைவுற்றது.
சுபா, சிமி வேல்லி, கலிஃபோர்னியா |