பிட்ஸ்பர்க்: TNF - தமிழ்ச் சங்கம் நிகழ்ச்சி
மே 30, 2014 அன்று, தமிழ்நாடு அறக்கட்டளையின் மேற்கு பென்சில்வேனியா கிளையும், பிட்ஸ்பர்க் தமிழ்ச்சங்கமும் இணைந்து சிந்திப்பும் சிரிப்பும் என்ற நிகழ்ச்சியை வழங்கின. சிறார் பாடிய தமிழ்த்தாய் வாழ்த்து, இந்திய மற்றும் அமெரிக்க தேசிய கீதங்களுடன் விழா துவங்கியது. பின்பு, சிறப்பு விருந்தினர் திரு. லேனா தமிழ்வாணன் "புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்றவையும் மற்றவையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். பெற்றவைகளை பட்டியலிட்டுப் பாராட்டியவர், மற்றவைகளைக் கேள்விகளாக்கி, கேட்பவர்களை சுயபரிசீலனை செய்யும் விதமாக அமைந்தது.

தமிழ்நாடு அறக்கட்டளைக் கிளைகள் மேற்பார்வைத் துணைத்தலைவர் திரு. சோமலெ சோமசுந்தரம், TNF-ABC கல்வித் திட்டம் மற்றும் அன்பாலயம் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பணித்திட்டங்களைப் பற்றி எடுத்துரைத்தார். அதன்பின், திரு. ஒய்.ஜி. மகேந்திரன் குழுவினர் வழங்கிய 'சுதேசி ஐயா' நாடகம் சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. நிகழ்ச்சியின் மூலம் வந்த நிதி, அறக்கட்டளையின் TNF-ABC கல்வித் திட்டம் மற்றும் மனவளர்ச்சி குன்றிய குழந்தைகள் பணித்திட்டங்களுக்கு வழங்கப்படவுள்ளது.

சோமலெ சோமசுந்தரம்,
பிட்ஸ்பர்க்

© TamilOnline.com