TNF ஃபிலடெல்ஃபியா: ஈகைத் திருவிழா
மே 31, 2014 அன்று தமிழ்நாடு அறக்கட்டளை (TNF) ஃபிலடெல்ஃபியா கிளையின் ஈகைத் திருவிழா வெஸ்ட்செஸ்ட் நகரில் நடைபெற்றது. இவ்விழாவில் நியூ ஜெர்ஸி ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ் நாடகக் குழுவின் 'பஞ்ச தந்திரம்' நகைச்சுவை நாடகம் நடைபெற்றது. நாடகத்தைப் பார்த்து, பேசிய எழுத்தாளர் லேனா தமிழ்வாணன், "இன்று நடைபெற்றது நாடகமல்ல, சரித்திரம்' என்று சொல்லி நாடகக் குழுவினரையும், எழுதிய ஹூஸ்டன் சந்திரமௌலியையும் பாராட்டினார். இதனைச் சீர்காழி 'அன்பாலயம்' மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கு வாழ்வு கொடுக்கும் ஈகைத் திருவிழாவாக மாற்றிய தமிழ்நாடு அறக்கட்டளையைப் பாராட்டினார் அவர்.

அன்பாலயத்தில் கட்டப்பெறும் கல்வி மையத்திற்கு 'ஸ்டேஜ் ஃப்ரெண்ட்ஸ்' பெயர் சூட்டப்படும் என அறக்கட்டளையின் துணைத்தலைவர் சோமலெ சோமசுந்தரம் அறிவித்தார். இவ்விழாவில் திரட்டப்பட்ட $25,000 சிறுதுளி பெருவெள்ளம் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு. 150க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் ஒருநாள் உணவிற்கான நூறு டாலர் வழங்கினர். எட்டு வயது ப்ரீத்தி பாஸ்கரும், ஒன்பது வயது சாந்தி பாஸ்கரும் விழாவில் தாங்கள் செய்த பிரேஸ்லெட்டுகளை விற்று அறக்கட்டளைக்கு நிதி சேர்த்தனர். கார்த்திக் சுந்தர், அருள் சின்னக்கருப்பன், அபிராமி சின்னக்கருப்பன், சினேகா முத்தையா ஆகிய சிறுவர் சிறுமியர் இதற்காக மல்லிகைப்பூ, தேநீர் விற்றனர். திருமதி. சுந்தரி விஸ்வநாதனும் திருமதி. வள்ளி செல்லப்பனும் சமோசாக்களைச் செய்து விற்று நிதி உதவினர்.

அறக்கட்டளையின் சென்னை நிர்வாக இயக்குநர் திருமதி. மன்மதா தேவியும், திருமதி. வசுமதி பென்னியும் அமெரிக்கத் தமிழர்களின் வேறுபட்ட நிதி திரட்டும் முயற்சிகளைப் பாராட்டினர். திருமதி. சுந்தரி விஸ்வநாதனும் திருமதி. இந்திரா விஸ்வநாதனும் திரு. லேனா தமிழ்வாணனுக்கு நினைவுப் பரிசுகளை வழங்கினர்.

ஸ்ரீராம் கீர்த்தி,
ஃபிலடெல்ஃபியா, பென்சில்வேனியா

© TamilOnline.com