மே 31, 2014 அன்று மிஷன் சிடி சென்டர் ஆஃப் பெர்ஃபார்மிங் ஆர்ட்ஸில் நிருத்யகல்யா டான்ஸ் அகடெமி 'பால்யா' என்ற நடன நிகழ்ச்சியை நடத்தியது. ஜனனி நாராயணனின் இயக்கத்தில் இந்துமத இளம் கடவுளரின் கதைகள் கண்முன்னால் பரதநாட்டிய வடிவில் உருப்பெற்றன. பிள்ளையார், முருகன், ஹனுமான், கிருஷ்ணர், ராமர், பாலாம்பிகா, ஐயப்பன் கதைகள் இதில் சுவைபடச் சித்தரிக்கப்பட்டன. சிறு வயதிலே நாம்கேட்டு மகிழ்ந்த இந்தக் கதைகளை நாட்டிய வடிவில் பார்க்க ஆனந்த அனுபவமாக இருந்தது.
அனிதா தீக்ஷித் (பாட்டு), அஸ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்), கணேஷ் ராம்நாராயண் (மிருதங்கம்), சுபா நரசிம்ஹன் (வயலின்), சேதனா சாஸ்திரி (நட்டுவாங்கம்) என்று கலைஞர்கள் அனைவரும் பால்யாவுக்குச் சுவைகூட்டினர்.
சிவனின் கோபத்துக்கு ஆளாகி தலையை இழந்து யானைத் தலையை விநாயகர் பெற்ற கதையும் அதனைக் கண்டு நகைத்த சந்திரனை, வளர்ந்து தேயுமாறு விநாயகர் சபித்த கதையும் கண்டு ரசிக்க முடிந்தது. சிவகணங்கள் வந்து ஆடி மகிழ்ச்சியூட்டினர். சூரபத்மன் மயிலாக மாறுவதை அழகாகக் காண்பித்தனர். குழந்தை கிருஷ்ணனின் லீலைகள் பல செய்து, கடைசியில் குழந்தை உறங்க, அவையோர் கைதட்ட, யசோதை 'வேண்டாம், குழந்தை தூங்குகிறான்' என்று சைகையில் தடுத்தது அமர்க்களம். அபிநயம், மேடையமைப்பு, ஒலி, ஒளி அனைத்தும் சிறப்பாக அமைந்திருந்தன.
பனி படர்ந்த கயிலையும், ராமர் தாடகி வதம் செய்த சரயு நதிக்கரையும், இந்திரனது வஜ்ராயுதம் ஹனுமானைத் தாக்கவே கோபம் கொண்டு ஹனுமானின் தந்தையான வாயுதேவன் மறைந்து கொண்ட குகையும், சபரிமலை வாயிலில் 18 தங்கப் படிகளும், கோகுலமும் மேடையிலே அழகிய பின்னணிகளாய்த் தோன்றின.
சிறுவர் சிறுமிகளுக்கான சேவை நிறுவனமான 'அறம் செய்' அமைப்புக்கு 'பால்யா' நிதி திரட்டியதென்பது குறிப்பிடத்தக்கது.
ஆங்கிலமூலம்: தினேஷ் தமிழில்: சீனிவாசன், சன்னிவேல், கலிஃபோர்னியா |