2014 ஜூன் மாதத்தில், அம்மா ஸ்ரீ மாதா அமிர்தானந்தமயி தேவி அவர்கள் சான் ஃபிரான்சிஸ்கோ- விரிகுடாப்பகுதி, லாஸ் ஏஞ்சலஸ், சான்ட ஃபே, டாலஸ், சிகாகோ, பாஸ்டன் ஆகிய இடங்களுக்கு வருகை தந்திருந்தார். அன்பின் அடையாளமான அம்மா, தம்மைக் காணவந்தோரைப் பரிவோடு அரவணைத்து, அளவற்ற அன்பை வழங்கினார். தினமும் ஆன்மீகச் சொற்பொழிவு, தியானம், பஜனைகள் மற்றும் அம்மாவின் தரிசனம் நடைபெற்றன.
கலிஃபோர்னியாவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தின் 'கருணை மையத்தின்' அழைப்பின் பேரில், ஜூன் 2ம் தேதி அம்மா, 'கருணை கலந்துரையாட'லில் பங்குபெற்றார். 'கருணை மையத்தின்' மேலாளர் முனைவர். ஜேம்ஸ் டோடி அவர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். 90 நிமிடங்கள் நடந்த இந்த நிகழ்ச்சிக்கு 1700 பேர் வந்திருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் அம்மா பேசுகையில், "காருண்யம் வாழ்வில் மிக முக்கியம். இந்த முதல் அடியை நாம் தைரியமாக வைத்தால், பின் நமது எல்லாத் தீர்மானங்களிலும், செயல்களிலும், பலன்களிலும், அழகும், இயல்பும், சக்தியும் சேரும். மனித கணிப்புக்களில் தவறுகள் இருக்கலாம். ஆனால், காருண்யத்தில் இருந்து எழும் செயல்களில் தவறுகள் இருக்காது. ஏனென்றால், காருண்யம் இயற்கையின் விதி, இறைவனின் சக்தி, படைப்பின் மையம். நமது மனதைக் காருண்யத்தோடு சுரம் சேர்த்தால், பின் நாம் நமது செயல்களை நாமாகச் செய்யாமல், படைப்புப்பொருள் நம் மூலமாக செயல்பட அனுமதிக்கின்றோம். உண்மையில், ஆன்மிகப் பாதை தொடங்குவதும் முடிவதும் காருண்யத்தில்தான்" என்று கூறினார். முழு கலந்துரையாடலைக் காண: youtu.be/IjkDV1QUbdI
அம்மாவின் ஜூலை மாதப் பயணம்: வாஷிங்டன் டி.சி. 07.01 - 07.02 நியூ யார்க் 07.05 - 07.07 டொரான்டோ, கனடா 07.10 - 07.13
இலவசப் பொது நிகழ்ச்சிகளில் அம்மாவின் தரிசனம், ஆன்மீகச் சொற்பொழிவுகள், தியானம் மற்றும் பஜனை நடைபெறும். டொரான்டோவில் ஆன்மீக முகாம் (retreat) நடைபெறும். இதில், தியான வகுப்பு, தன்னலமற்ற சேவை, கேள்வி-பதில், உணவு பரிமாற்றம், ஒருங்கிணை அமிர்தா தியானம் (Integrated Amrita Meditation) ஆகியவை நடைபெறும்.
அம்மா ஆற்றும் பொதுநலத் தொண்டுகள் பற்றி அறிய: www.amritapuri.org/activity மேலும் விபரங்களுக்கு: www.amma.org
சூப்பர் சுதாகர் |