மாயா கணேஷ்: அரங்கேற்றம்
ஜூன் 1, 2014 அன்று டான்வில் நகரிலுள்ள மான்ட விஸ்தா உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் 'அல் ஜென்டில்' அரங்கத்தில் 'விருந்தாவன் இந்தியன் டேன்ஸ் அகாடமி' மாணவி செல்வி. மாயா கணேஷின் பரத நாட்டிய அரங்கேற்றம் நடந்தேறியது. இப்பள்ளியை நிறுவி டாக்டர். பிந்து S. சங்கர் அவர்கள் நடத்தி வருகிறார்.

கடவுள் வாழ்த்தாக நாட்டை ராகத்தில் "ஆனந்த நர்த்தன கணபதி" பாடலுக்கு ஆடினார். அடுத்து வந்தது ராகமாலிகை "சப்தம்". கிருஷ்ணனின் புல்லாங்குழலின் இனிய நாதத்திற்கு கோபியர்கள் மயங்குவதை மிக அற்புதமாகச் சித்திரித்தார். அடுத்து, மோகன ராக வர்ணமான "ஏன் பள்ளி கொண்டீரையா?" பாடலுக்கு விஷ்ணுவின் அவதாரங்கள் பலவற்றை அவர் ஆடிய நேர்த்தி கரகோஷம் பெற்றுத் தந்தது. ரேவதி ராகத்தில் "போ சம்போ" என்ற பாடலுக்கான விறுவிறுப்பான நாட்டியம் மெய்சிலிர்க்க வைத்தது. குறவஞ்சியும், பரதநாட்டியமும் இணைந்து 'திலங்' ராகத்தில் அமைந்த பந்தாட்டப் பாடலுக்கு ஆடிய துள்ளலான பந்தாட்டம் கண்கொள்ளாக் காட்சி. தோடி ராகத்தில் அமைந்த அஷ்டபதிக்கு அற்புதமாகப் பதங்கள் ஆடி அசத்தி விட்டார் மாயா.

ஹிந்தோளம் ராகத் தில்லானவுக்கு அதியற்புதமான தாளக்கட்டோடு இணைந்த தேவி தரிசனத்துடன் இனிதாக பரதநாட்டிய அரங்கேற்றம் நிறைவடைந்தது. குரு பிந்து சங்கர் (நட்டுவாங்கம்), திருமதி. ஜெயந்தி உமேஷ் (வாய்ப்பாட்டு), திரு. பாலாஜி மகாதேவன் (மிருதங்கம்), திருமதி. லக்ஷ்மி பாலசுப்ரமணியம் (வயலின்), திரு. அஷ்வின் கிருஷ்ணகுமார் (புல்லாங்குழல்) யாவும் சிறப்பாக இருந்தன.

சசிரேகா சம்பத்குமார்,
யூனியன் சிடி, கலிஃபோர்னியா

© TamilOnline.com