கச்சேரி: அனன்யா அஷோக்
ஜூன் 21, 2014 அன்று லாஸ் ஆல்டோஸ், ஈகிள் அரங்கத்தில் SIFA ஆதரவில் நடைபெற்ற குமாரி. அனன்யா அஷோக்கின் கர்நாடக சங்கீதக் கச்சேரி நடைபெற்றது. பாடல்கள் தேர்வு, அவற்றை பங்கிட்டு அளித்த வகை எல்லாவற்றிலும் முதிர்ச்சியும் திட்டமிடலும் தெளிவாக இருந்தன.

'ஏல நீ தயராது' என்னும் அடாணா கீர்த்தனையுடன் கச்சேரி தொடங்கியது. நீதிமதியில் கோடீஸ்வர ஐயரின் 'மோகனகர' அடுத்து வந்தது. பின்னர் 'நன்னுப்ரோவ' என்னும் சியாமா சாஸ்த்ரிகளின் லலிதா ராக கீர்த்தனை இதயத்தை நிறைத்தது. கச்சேரியின் பிரதான ராகமாகக் காம்போதியை எடுத்துக்கொண்டு விரிவாகக் கையாண்டார். 'ஓ ரங்கசாயி' என்னும் தியாகராஜ கிருதி, காம்போதியின் கம்பீரத்தைக் கண்முன் நிறுத்தியது. உடன் வாசித்த ஸ்ருதியின் வாசிப்பு ஞானம், பயிற்சி, கவனம் இவற்றின் ஒட்டுமொத்தப் படைப்பு.

நிறைவாகவும், வலிவு, மெலிவு என்று தக்கவாறு விரவியும் வாசித்த அமித் ரங்கநாதன், வளைகுடாவில் மிருதங்கம் பயின்று பெரிய வித்வான்களுக்கும் வாசிக்கும் கையாக வளர்ந்து வருவது கண்கூடு. நிதானமான, அழுத்தமான, அழகான வாசிப்பு. அடுத்துவந்த ராகம்-தானம்-பல்லவி சாரமதியில். "அதி சுந்தர மந்த்ரமே - ராமநாமாம்ருத சாரம்" என்று அந்தமும் ஆதியும் சேருமிடத்தில் ராகத்தின் பெயர் வருமாறு, திஸ்ரதிருபுடையில் அமைந்த பல்லவி. சற்றே விரைவாக முடிந்துவிட்ட உணர்வு ஏற்பட்டது உண்மை. ராகம் ஜோர்; தானம் பரவாயில்லை; பல்லவி நேர்த்தி! தஞ்சாவூர் சங்கர ஐயரின் தேஷ் ராகத்தில் அமைந்த "ராம நாம" என்னும் பாடலுடன் நிறைவு செய்தார் அனன்யா. நல்ல ஞானம், அழகான குரல், நல்ல பயிற்சி, விடாமுயற்சி என்று ஒரு நல்ல வளரும் கலைஞரை இக்கச்சேரி அடையாளம் காட்டியது.

வயலின் வாசித்த ஸ்ருதி சாரதியும், மிருதங்கம் வாசித்த அமித் ரங்கநாதனும், விரிகுடா கர்நாடக இசை வெளியின் நம்பிக்கை நட்சத்திரங்கள்.

பானு நவீன் தொரை

© TamilOnline.com