இன்றைய இந்திய அரசியல் பற்றிய நையாண்டி நாடகம் அமெரிக்கத் தமிழரிடம் வரவேற்பைப் பெறுமா என்ற கேள்விக்கு விடையாக அமைந்தது TV S. வரதராஜன் மற்றும் ஹூஸ்டன் மீனாட்சி தியேட்டர்ஸ் குழுவினர் இணைந்து வழங்கிய 'இது நம்ம நாடு'. ஜூன் 8 மற்றும் 22 நாட்களில் இருமுறை இந்த நாடகம் நடத்தப்பட்டது.
'துக்ளக் சத்யா' எழுதிய இந்நாடகம், ஒரு சாதாரண மனிதனின் அசாதாரணமான பயணத்தை, இன்றைய அரசியல் நிகழ்வுகளுடன் கலந்து சுவையாகப் படம் பிடித்துக் காட்டியது. பட்டாபி ஒரு துணிக்கடை குமாஸ்தா. அவருக்கு பூர்விக சொத்தாக 25 கோடி ரூபாய் வருகிறது. அதை வைத்து அவர் சினிமா, பத்திரிகை என்று தொழில்கள் தொடங்க, அவருக்கு கிடைப்பதெல்லாம் தோல்வியும், அரசியல்வாதிகளின் விரோதமுமே. எதிப்புகளைச் சமாளிக்க (கொஞ்சம் நல்லதும் செய்ய) அவர் தொடங்கும் அரசியல் கட்சி என்ன ஆகிறது என்பதுதான் கதை.
'நமோ.. நமோ..', 'ராகுல் காலம்', 'சோனி-ஆ?', என்ற அரசியல் வசனங்களை பார்வையாளர்கள் ரசித்தனர். கடைசிக் காட்சியின் கோர்ட் வசனங்களும், அதன்பின் வந்த நீதிபதியின் சரியான தீர்ப்பும், இந்தியாவின் மீது இருக்கும் நம்பிக்கையை உறுதிப்படுத்துவதாக அமைந்தது. பட்டாபியாக நடித்த TV வரதராஜன் கதையின் நாயகன். ஒரு சாமானியனாக ரவுடிகளிடம் பம்முவது, கட்சி தொடங்கிய பின் வீரம் காட்டுவது, பதவி ஏற்ற பின் நாட்டின் நிலைமை புரிந்து பொருமுவது, கடைசியில் கோர்ட்டில், அடிவருடிகளின் அக்கிரமத்தைச் சினத்தோடு வெளிப்படுத்துவது, இப்படி நாடகம் முழுக்க இவரது நடிப்பின் ஆளுமை அபாரம்.
இவரது நண்பர் ராமசேஷன் பாத்திரத்தை ஏற்ற மருத்துவர் சாரநாதனின் நடிப்பில் திறமையும், அனுபவமும் வெளிப்பட்டன. நாடகம் முழுக்க நாயகனுக்கு இணையாக வந்து, பட்டாபிக்கு வரும் சிக்கல்களை எதிர்கொள்ளத் துணையாக இருந்து, கடைசியில் கோர்ட்வரை செல்லும் ஓர் உயிர் நண்பனைக் கண்முன் கொண்டு வந்து நிறுத்தினார். குடும்பத் தலைவியாக வந்து அரசியல் தலைவியாக மாறிய பாக்கியமாக லலிதா, மூத்த அமைச்சர் முருகேசனாக திலக், சென்னைத் தமிழில் 'பூந்து விளையாடிய' கணேஷ் ரகு மற்றும் வினோத், 'ஹை கமாண்ட்' அபேஸ் சிங் சிவா, மாமனாராக வந்த ராமன், சென்னை அரசியல்வாதியை நகல் எடுத்தது போலவே மணி, தொலைக்காட்சி தொகுப்பாளினி இளைய தலைமுறை ஹரிப்ரியா, வக்கீல் திருமதி. நளினி, செக்ரட்டரி மகேஷ், சி.பி.ஐ. ஆபிசர் சந்திரமௌலி என்று பல கதாபாத்திரங்கள், பொருத்தமான கலைஞர்கள், அருமையான ஒலி, ஒளி, மேடை அமைப்பு என நாடகம் சிறப்பாக அமைந்தது.
சினிமா, பத்திரிகை, டி.வி. என மற்ற ஊடகங்கள் தொடர்பாகவும் பல நகைச்சுவைக் காட்சிகள் இடம்பெற்றன. இது குழந்தைகளையும், இந்திய அரசியலை அதிகம் தொடராத பெரியோரையும் வெகுவாகக் கவர்ந்தது. ஆக மொத்தம், 'துக்ளக்' பாணி அரசியல் நாடகத்தைக் கொண்டு வந்து, சிரிக்க வைத்ததுடன், இந்தியாவைப் பற்றிச் சிந்திக்கவும் வைத்தது 'இது நம்ம நாடு'.
நடராஜ கிருஷ்ணன், ஹூஸ்டன் |