ஜூலை 19, 2014 அன்று 'தீர்க்கதரிசி' (The Prophet) என்ற சமகாலக் கதையை பரதநாட்டிய வடிவில் 'சங்கம் ஆர்ட்ஸ்' திருமதி. சவிதா சாஸ்திரி அவர்கள் சான் ஹோசே, மெக்சிகன் ஹெரிடேஜ் பிளாசாவில் வழங்கவுள்ளார். ஏ.கே. ஸ்ரீகாந்த் அவர்கள் எழுதிய கதையை 70 நிமிடங்கள் இடைவிடாத நடனமாகக் கொணர்கிறார் சவிதா சாஸ்திரி.
தேவதத்தனின் வாழ்க்கைச் சரிதை இது. ஒரு சமநீதிச் சமூகத்தில் தனி மனிதனின் அடையாளம் என்ன? தனித்துவம் என்ன? இந்த இரு கேள்விகளை ஆராய்கிறது 'தீர்க்கதரிசி'. மதங்கள், மூடநம்பிக்கைகளின் வட்டத்துக்கு அப்பாற்பட்ட கதை என்பதால் அனைத்துச் சமூகத்தினரும் இதனைப் புரிந்து ரசிக்க முடியும். ராஜ்குமார் பாரதியின் இசையமைப்பு இதன் சிறப்பு. ஷெனாய் வாத்தியப் பேராண்மை, மற்றும் "ராக் ஸ்டார்" புகழ் பண்டிட் பல்லேஷ், பிரபல வித்வான் திரு. கடம் கார்த்திக், வயலின் வித்வான் எம்பார் கண்ணன், என்சொன் குரூப் போன்ற மேதைகளின் இனிய இசையைக் கொண்டுள்ளது. ஹிந்துஸ்தானி, ராக் போன்ற இசைகளின் ஊடுருவல் இதில் தெரிந்தாலும், கர்னாடக சங்கீதத்தின் இலக்கணம் பிசகாது. புது டில்லியின் அருண் திவாரி வடிவமைத்த நடன உடைகள், இப்படைப்புக்கு உயிர் கொடுக்கிறது. சென்னையைச் சேர்ந்த விக்டர் பால்ராஜ் அரங்க ஒளியமைப்பில் தனித்திறன் பெற்றவர்.
ஜூன் 14, 15 நாட்களில் சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற எத்னிக் டான்ஸ் விழாவில், சங்கம் ஆர்ட்ஸ் குழுவினர், பரதநாட்டியம், கதக்களி, மோஹினி ஆட்டம், குச்சிப்புடி, கதக், மணிப்புரி, ஸத்ரியா போன்ற .எட்டுவகை இந்திய நடனங்களை ஒரே மேடையில் அளித்துப் பிரமிக்க வைத்தனர்.
சங்கம் ஆர்ட்ஸின் தலைவி உஷா ஸ்ரீனிவாசன் அவர்கள், "சவிதா சாஸ்திரி, இந்தியர் மட்டுமல்லாது பிற நாட்டினரும் பாரதீயக் கலைகளை அறிய வேண்டும் என்ற ஆர்வமுடையவர்" என்று கூறினார்.
மேலும் விவரங்களுக்கு வலைமனை - www.sangamarts.org முகநூல் - www.facebook.com/sangamarts சீட்டுகள் வாங்க - prophet.brownpapertickets.com
செய்திக்குறிப்பிலிருந்து |