ஜூலை 2014: வாசகர் கடிதம்
தென்றல் சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்ற 'கப்பல் பறவை' கதை அற்புதம். ஓடும் கப்பலில் தனியாகச் சிக்கிக்கொண்ட பறவையின் உதாரணம் மிகப் பொருத்தம். வாழ்வை அதன் போக்கில் தைரியமாக ஏற்றுக்கொள்வது தான் கதை சொல்கிற சேதியோ? அப்பட்டமான உண்மை கதையின் ஜீவன். யதார்த்தமான விவரிப்பின் ஊடே மனம் நெகிழ்ந்ததும் உண்மை.

ஜீவி

*****


தென்றல் கதை, கட்டுரை, இதர விஷயங்களும் அருமையாக உள்ளன. கடல் கடந்து வாழும் தமிழ் அன்பர்களுக்குத் தென்றல் ஒரு இனிய விருந்து. தென்றல் ஆசிரியர் குழு மற்றும் அலுவலக நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்.

ரி. ராகவன் கிருஷ்ணமாச்சாரி,
டென்வர், கொலராடோ

*****


பாரதத்தை வல்லரசாக்கச் செயலாற்றிக் கொண்டிருக்கும் புதிய பிரதமர் நரேந்திர மோதியின் வண்ணமிகு முகப்பு அட்டையைத் தாங்கி வந்த ஜூன் மாதத் தென்றல் அற்புதம். 'கடுகு' அவர்கள் எழுதிய நாவல்கள், சிறுகதைகள் நிறைய விரும்பிப் படித்துள்ளேன். ஆனால் அவரைப் பற்றி முழுமையாகத் தென்றல் இதழில் படித்துதான் தெரிந்து கொண்டேன். வெற்றியாளர் அருணாசலம் முருகானந்தம் அவர்களின் 'நேர்காணல்' மனம் நெகிழவைத்தது. 'சிரிப்பானந்தா' அவர்களின் சிறந்த தொண்டினைப் பாராட்டுகின்றேன். முன்னோடி நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் அவர்களின் 130வது பிறந்த வருடத்தில் அவரது சாதனைகளை நினைவிற்குக் கொண்டுவந்த தென்றலுக்கு நன்றி.

தென்றல் சிறுகதைப் போட்டியில் வெற்றி பெற்ற 'கப்பல் பறவை', 'காத்திருப்பு' இரண்டு கதைகளுமே உயிரோட்டமிக்கவை. மனதைத் தொட்டன.

சசிரேகா சம்பத்,
யூனியன் சிடி, கலிபோர்னியா

*****


பெண்களின் தவிர்க்க முடியாத மாதவிலக்கின் வேதனையைச் சுயமாக உணர்ந்து, ஊக்கத்துடன் செயல்பட்டு, கண்டுபிடித்து, அவற்றைப் பெண்கள் மூலமாகவே விற்பனை செய்து பெண் குலத்துக்கு உதவும் அருணாசலம் முருகானந்தம் அவர்களுக்கு இதயபூர்வமான வாழ்த்துக்கள். ஜூன் மாத நேர்காணல் பகுதியில் தெள்ளத்தெளிவாக உரையாடிய முருகானந்தம் அவர்களை பல்லாயிரக்கணக்கான வாசகர்களுக்கு அறிமுகப்படுத்திய தென்றல் இதழுக்கு நன்றி.

கமலா சுந்தர்,
நியூஜெர்ஸி

© TamilOnline.com