தென்றல் வரத்தொடங்கி ஐந்து ஆண்டுகள் பூர்த்தியாகி விட்டன என்று படித்தேன். என்ன ஒரு சாதனை! உங்கள் குழுவினருக்கு என் வாழ்த்துகள்.
ஒவ்வொரு மாதமும் இவ்வளவு செம்மையாகத் தரம் குறையாமல் இதழைக் கொண்டு வர எத்தனை உழைப்பும் ஈடுபாடும் தேவைப்படும் என்று எனது தந்தையும் வியந்து கூறினார். தென்றலை அவர் மிகவும் ரசித்துப் படிக்கிறார்.
அம்பாள் பாலகிருஷ்ணன் சான் ஹோசே, கலி.
*****
தென்றல் நவம்பர் மாத இதழ் அழகாகவும் அடக்கமாகவும் அமைந்திருப்பது மிகவும் நன்று.
மணமிகுந்த ரமணசரிதத்தின் பிரதியைத் தென்றல் இதழ் சந்தாதாரருக்கு இலவசமாக அனுப்பியதற்கு நன்றி. நூலாசிரியர் மதுரபாரதியைப் பாராட்ட வேண்டும். எனக்கு ரமணரைப் பற்றிக் குறைவான விபரங்கள்தான் தெரியும். இப்புத்தகத்தைப் படித்தவுடன் என் மனதில் பலவித மாற்றங்கள், உணர்ச்சிகள் ஏற்பட்டன. பலவிதத் தோற்றங்கள், சம்பவங்கள், நடவடிக்கைகள் எல்லாம் அற்புதமாக இருந்தன. மிகவும் அனுபவித்துப் படித்தேன். ரசிக்கத் தகுந்த சில கதைகளையும் சம்பவங்களையும் காண முடிகிறது. வெளிநாட்டார் ஈடுபாட்டையும் காணமுடிகிறது. மிருகங்கள், பறவைகள் பங்கு கொண்டதையும் காண்கிறோம். வாசகர்கள் இப்புத்தகத்தைப் படிப்பதுடன் தங்கள் நண்பர்களுக்கும் கொடுத்துப் படிக்கச் செய்ய வேண்டும்.
வளர்க தென்றல்.
அட்லாண்டா ராஜன்
*****
நானும் எனது மனைவியும் மதுரையிலிருந்து இங்கு ஜூன் மாதம் வந்தோம். தென்றல் இதழ் படித்து மகிழ்ந்தேன்.
நம் ஊர் போல இவ்விடம் தனியாகப் போய் பேசிட, தமிழ் மொழி பேசும் நம்மவர்களே வணக்கம் சொல்லக் கூச்சப்படும் வேளையில் இந்நாட்டு மக்கள் 'குட்மார்னிங், ஹவ் ஆர் யூ?' என இந்திய மக்களுடன் அன்புடன் பேசுவது மகிழ்ச்சியாக இருந்தாலும் அதைவிட இங்கு பொழுதுபோக வைப்பது வீட்டிலேயே இருக்கும் எங்களுக்கு 'தென்றல்' இதழின் மகத்தான தமிழ்ச் சுவை ஒன்றே!
சி.பி. இராசேந்திரன் பால் ஜர்ஜ், வர்ஜீனியா
*****
இந்தியக் கடையில் பொருள் வாங்கச் சென்றபொழுது 'தென்றல்' தமிழ் மாத இதழ் கண்ணில் பட்டது. அதன் முகப்பு அட்டையே அதனைப் படிக்கும்படி என்னைத் தூண்டியது.
புத்தகத்தின் உள்ளடக்கம் அத்தனையும் முத்துகளாக இருப்பது படிக்கத் தொடங்கியவுடன் தான் புரிந்தது.
சுருக்கமான ஆசிரியர் பக்கம், அதனைத் தொடர்ந்து மாயா பஜார், நலம் வாழ, நிதி அறிவோம், சிறுகதைகள், அன்புள்ள சினேகிதியே, ஆன்மிகம், நிகழ்வுகள் என்று ஒவ்வொன்றும் புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் வாசிப்பைத் தொடரச் செய்தது. அடுத்த மாதம் 1-ம் தேதி எப்பொழுது வரும், தென்றல் எப்பொழுது படிப்போம் என்ற ஏக்கம் இருந்து வருகிறது.
நவம்பர் 2005 இதழில் பல சிறப்பு அம்சங்கள் உள்ளன. Real Estate Investment Trust-ல் நிர்வகிக்கும் தொந்தரவு இல்லாமல் சொத்தில் பணம் போடலாம் என்ற செய்தியும் பறவைக் காய்ச்சல் பற்றிய விளக்கமும் 1984-ல் சதுரங்கப் போட்டி அனடோலி கார்ப்போவிற்கும் காரி காஸ்பரோவுக்கும் இடையே 4 மாத காலம் நடைபெற்ற செய்தியும் விருந்தினரும் வீட்டு மனிதரும் கேள்வி பதிலும் குறிப்பாகக் கருத்துக் குவியலாகவும் விருந்தாகவும் உள்ளன.
மேற்குறிப்பிட்ட செய்திகளை வீட்டில் மனைவி, மகன் மற்றும் மருமகளுடன் கருத்துப் பரிமாற்றம் செய்தபொழுது இவ்வளவு அற்புதமான செய்திகள் தென்றலில் உள்ளதென்பதே எங்களுக்கு நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது என்று சொல்லி அவர்களும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கியுள்ளனர். அவர்களது பணியைத் தொடர எனது வாழ்த்துக்கள்.
எம். வி. கிருஷ்ணமூர்த்தி, சன்னிவேல், கலி.
*****
அமெரிக்காவிற்கு நான் 1972-லிருந்து பலமுறை வந்திருக்கிறேன். மரக்கறி உணவையே உட்கொள்ளும் நான் அப்போதெல்லாம் வெறும் காய்கறி சலாடுகள், பழச்சாறு, சாண்ட்விச், பால் இவற்றிலேயே உயிர்வாழ்வது வழக்கம். பிறகு யூஎன் பிளாசாவுக்கு அருகில் உட்லண்ட்ஸ் வந்தது. அப்போது சில சமயம் சிற்றுண்டிக்காக அங்கே போவதுண்டு. எனது இரண்டு மகள்களும் திருமணமாகி இங்கேயே இருக்கிறார்கள். உங்களைப் போன்றோரின் முயற்சியால் தற்போது அமெரிக்கா தமிழருக்கு இதமான இடமாகிவிட்டது.
நான் தென்றலைக் கண்டுபிடித்ததும் ஆர்க்கிமிடீஸ் 'யுரேகா' என்று கத்திய நிலையை உணர்ந்தேன். அமெரிக்கா வாழ் தமிழ்மக்களுக்கு இது ஒரு அற்புத வரம் தான். நீங்களும் உங்கள் குழுவினரும் சிறப்பான பணி செய்து வருகிறீர்கள். எமது பாராட்டு தலைச் சொல்லி அவர்களது நற்பணியைத் தொடரச் செய்யுங்கள்.
வி. சிவகுமார் பெங்களூர், இந்தியா
***** |