வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (வாழ்க்கைக் கையேடு) வாழ்க்கையில் வெற்றியடைய மனதிலிருந்து அகற்ற வேண்டியதில் முதன்மையானது எதிர்மறைச் சிந்தனை. பவளசங்கரியின் 'வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போம்' என்ற கட்டுரைத் தொகுப்பின் ஆணிவேர் மேற்கண்ட சிந்தனை. இதை முன்வைத்து 34 பகுதிகளாக வேறுபட்ட எளிய உதாரணங்களோடு அவர் எழுதியிருக்கும் விதம் நமக்குள் ஒரு நம்பிக்கையை உருவாக்குவது உண்மை. விவேகானந்தர், அன்னை தெரசா, ஹெலன் கெல்லர், புத்தர் போலப் போராடிப் புகழ்பெற்றோரின் வாசகங்களை முன்வைத்து எழுதினாலும், சிறு சிறு கதைகள் மூலமும் சொல்லியிருக்கும் பாங்கு சுவையானது.
'நேருக்கு நேர் கண்களைப் பார்த்துப் பேசினாலும் உற்றுப் பார்த்துப் பேசுவதைத் தவிர்க்கவேண்டும்' போன்ற பல பயனுள்ள கைகாட்டிகளைப் பார்க்க முடிகிறது. இது ஒரு நல்ல கையேடு. இளைஞர்கள் கண்டிப்பாகப் படிக்கவேண்டியது.
யாதுமாகி நின்றாய் (சிறுகதைத் தொகுப்பு) சிறுகதைகளின் தொகுப்பில் ஒவ்வொரு கதைக்கும் படம் சேர்த்து வெளியிடுவது நல்லதுதான். பவளசங்கரியின் 'யாதுமாகி நின்றாய்' தொகுப்புக்கு பிரபல எழுத்தாளர் சிவசங்கரி அணிந்துரை வழங்கியிருக்கிறார். கூலித்தொழிலாளியின் பெண்ணாகப் பிறந்த குழந்தை பேசத்தொடங்கிய போது தன் முன் ஜன்மத்தை மறக்காமல் பேசி அழுகிறது முதல் கதையான 'மோட்டூர்க்காரி'யில். இதைப் போன்ற நிகழ்வுகள் உலகின் ஏதோ ஒரு மூலையில் நடந்துகொண்டுதான் இருக்கின்றது. ஆசிரியர், அந்தக் குழந்தையின் முன் ஜென்மம் என்னவாக இருக்கும் என்பதை நமக்குக் கதைபோலத் தெரிவித்தாலும் பிறவி ரகசியங்களை அறிந்துகொள்வதால் பயன் ஏதுமில்லை என்பதையும் கடைசியில் சொல்லி முடித்திருப்பது ஒருவகையில் சரிதான்.
மாமியார்-மருமகள் இருவரும் ஒரே சமயத்தில் கர்ப்பம் தரித்துப் பிள்ளை பெறுவது பற்றிய கதை ஒன்றை எழுதியிருக்கிறார் ஆசிரியர். இந்தக் 'குரங்கு மனம்' கதை திசைமாறிப் போகும் வக்கிரகுணங்களையும் சித்திரிக்கிறது. கடைசியில் அன்பும், பாசமும் தியாகமும் உலகில் இன்னமும் வற்றவில்லை என்பதைச் சுட்டிக் காட்டியிருப்பது நெஞ்சைத் தொடுகிறது. மெய்கண்டார், காத்தரீனா, பாசச்சுமைகள் போன்ற கதைகள் நல்ல வலுவான கதையம்சத்தோடு எழுதப்பட்டவை.
கதைகளைச் சற்று நிதானமாகப் படிப்பது நல்லது. கடகடவெனப் படித்துவிட்டு மனதில் நிற்காமல் தூக்கிப் போடப்படும் தற்காலப் புத்தகங்களின் மத்தியில் பவளசங்கரியின் 'யாதுமாகி நின்றாய்' மாறுபட்டு நிற்கின்றது.
கதை கதையாம் காரணமாம் (சிறுவர் கதைகள்) குதூகலத்தின் மாறுபெயர் குழந்தைகள். அவர்களுக்கெனத் தனியொரு எழுத்து தேவை. குழந்தைகளை மகிழ்விப்பதோடு, நல்ல கருத்துக்களையும் பரிசாக அளிக்கிறது 'கதை கதையாம் காரணமாம்'. பவளசங்கரியும் குழந்தையாக மாறி அவர்களுக்குக் கதை சொல்கிறார். 'ஹாய் குட்டீஸ் நலமா?' என வாஞ்சையோடு கேட்டுத் தொடங்குவது மனதில் பதிகிறது. கட்டுரைகளோடு படங்களும் சேர்ந்து அமர்க்களமாகச் சொல்லப்பட்டுள்ளது.
'உயிரா, மானமா' 'கூடிவாழ்ந்தால் கோடி நன்மை' போன்ற அறிவுரைக் கட்டுரைகள் 'குட்டீஸ்' மட்டுமின்றி இன்றைய பெரியவர்களுக்கும் மிகவும் பொருந்தும் என்றே சொல்லவேண்டும். ஆசிரியருக்கு வாழ்த்துகள்.
(வெற்றிக்கனியை எட்டிப் பறிப்போம் (ரூ. 120); யாதுமாகி நின்றாய் (ரூ. 125); கதை கதையாம் காரணமாம் (ரூ. 105); பழனியப்பா பிரதர்ஸ், சென்னை.)
திவாகர் |