ஆரம்பநிலை நிறுவன யுக்திகள் (பாகம்-10b) – (தொடர்ச்சி)
இதுவரை: ஆரம்பநிலை நிறுவனங்கள் தழைத்து வளர வேண்டுமானால், அவை கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள், யுக்திகள் யாவை எனப் பலர் என்னைக் கேட்பதுண்டு. அவர்களுடன் நான் பகிர்ந்து கொண்ட சில குறிப்புக்களே இக்கட்டுரைத் தொடரின் அடிப்படை. வடிவமைப்புக் கோவைக்காக இக்கட்டுரை வரிசை CNET தளத்தில் வந்த Startup Secrets என்னும் கட்டுரைத் தொடரின் வரிசையைச் சார்ந்து அமைத்துள்ளேன். ஆனால் இக்கட்டுரைத் தொடர் வெறும் தமிழாக்கம் அல்ல. இந்தத் கட்டுரை வரிசையில் என் அனுபவபூர்வமான கருத்துக்களோடு, CNET கட்டுரையில் உள்ள கருத்துக்களையும் சேர்த்து அளித்துள்ளேன். அவ்வப்போது வேறு கருத்து மூலங்களையும் குறிப்பிட்டுக் காட்டுவதாக உத்தேசம். இதுவரை ஆரம்பநிலை நிறுவனங்களுக்கு குழு எவ்வளவு முக்கியம், மாற்றங்களை எவ்வாறு மேற்கொள்ள வேண்டும், விற்பதா/வளர்ப்பதா, ஆராய்வதா/ஆரம்பிப்பதா, விமர்சகர்கள் முக்கியத்துவம், வருமான/லாப திட்டம், விற்பனை வழிமுறைகள் போன்ற பல யுக்திகளைப் பார்த்துள்ளோம். சென்ற பகுதியில் மென்பொருட்களுக்கான தற்கால எதிர்பார்ப்புக்களைப் பற்றி விவரிக்க ஆரம்பித்தோம். இப்பகுதியில் அதைத் தொடரலாம் வாருங்கள்!

*****


கேள்வி: கடந்த பல்லாண்டுகளாக மென்பொருள் துறை பல மாற்றங்களை அடைந்துள்ளது. இப்போது உருவாக்கப்படும் மென்பொருள் சேவைகளுக்கும், விற்பொருட்களுக்கும், அவற்றின் பயனர்களின் எதிர்பார்ப்புக்கள் என்ன? புது மென்பொருள் உருவாக்குகையில் நான் எந்தெந்த அம்சங்களுக்கு அதிக கவனம் செலுத்த வேண்டியுள்ளது?

கதிரவனின் பதில்: மென்பொருட்களில் பலவகை உள்ளதால் ஒவ்வொரு வகைக்குமான எதிர்பார்ப்புக்கள் வித்தியாசமாக உள்ளன என்று பார்த்தோம். நுகர்வோர் மென்பொருட்கள், மின்வலை மற்றும் இணையச் சேவைகள், நிறுவன மென்பொருட்கள் (enterprise software), மற்றும் கட்டமைப்பு மென்பொருட்கள் என்னும் வகைகளைப் பற்றி குறிப்பிட்டோம். மேலும் முற்பகுதியில், கைக்கணினிகளில் நுகர்வோர் பயன்படுத்தும் மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்கள் என்னவெனப் பார்த்தோம். இப்போது மற்றவகை மென்பொருட்களுக்கான எதிர்பார்ப்புக்களைப் பற்றிப் பார்ப்போம்.

மின்வலைச் சேவையாக அளிக்கப்படும் மென்பொருளானால்-இணைய வாணிகம், அல்லது மற்ற வலைநிறுவனமாயின்-இப்போதெல்லாம் அவற்றில் கைக்கணினிகளின் ஆதிக்கமே அதிகமாயுள்ளது. அதனால், முன்போல் இணைய தளமாகவே மட்டும் அளித்து கைக்கணினிகளிலிருந்தும் பிரவுசர் மூலம் மட்டும் ஒரே பயனர் இடைமுகம் வழியாகப் பயன்படுத்துமாறு கட்டாயப்படுத்தினால் படுதோல்வி அடைய வேண்டியதுதான்! கைக்கணினிளுக்கு கச்சிதமாகப் பயன்படுத்த வேண்டிய விசேஷ இடைமுகம் அல்லது கைக்கணினியிலியே நிறுவப்பட்டு அக்கணினிக்கு இயல்பாகச் செயல்படும் பயனர் மென்பொருளாக அமைக்கப்பட வேண்டும் என்றுதான் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது.

மேலும் இத்தகைய இணையச் சேவைகள் எல்லாவற்றிலுமே, சமூக அம்சங்கள் (social aspects) நிரம்பியிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. வணிகமானாலும், மற்றவர்கள் என்ன வாங்குகிறார்கள், அவர்களின் பரிந்துரைகள் என்ன, விமர்சனம் என்ன என்று கொடுத்தே ஆகவேண்டும். நெட்ஃப்ளிக்ஸ் போன்ற இணைய ஊடகங்கள்கூட இத்தகைய சமூக அம்சங்களை அளித்தேயாக வேண்டியுள்ளது.

அது மட்டுமல்ல. கைக்கணினி மென்பொருட்களில் ஸிரி போன்ற செயற்கையறிவை வைத்து அளிக்கப்படும் வசதிகளைப் பற்றி எதிர்பார்ப்புள்ளதாகக் கண்டோம் அல்லவா? அதே எதிர்பார்ப்பு மின்வலைச் சேவைகளுக்கும் ஊடுருவி உள்ளது. அமேஸான் இதை முதலில் ஆரம்பித்தது. நீங்கள் ஒரு பொருள் வாங்கினால், உங்கள் வாங்கும் பழக்கங்களை வைத்தும், உங்களைப் போன்ற மற்றவர்கள் வாங்கும் பொருட்களை வைத்தும் இன்னும் என்ன வாங்கலாம் என்ற பரிந்துரை அளித்தது. அதை நெட்ஃப்ளிக்ஸ் அட்டைக் காப்பி அடித்து, நீங்கள் பார்த்த படத்தை வைத்தும் உங்களைப் போன்றவர்கள் பார்க்கும் படங்களை வைத்தும் படம் பார்க்கப் பரிந்துரையளித்தது. இந்த மாதிரியான பரிந்துரைகள் அளிக்கப் பெரும் தகவல்துளி நுட்பம் (Big Data tech) வசதியளித்துள்ளது. அதனால் இப்போது ஏதாவது மின்வலைச் சேவை ஆரம்பிப்பதானால், இத்தகைய நுகர்வோர் பழக்கத்தை வைத்துப் பரிந்துரை அளிப்பது மிக நிர்ப்பந்தமான எதிர்பார்ப்பாகிவிட்டது.

அடுத்து நிறுவன மென்பொருட்கள். நிறுவன மென்பொருட்களும், கைக்கணினி மற்றும் சமூக அம்சங்களைக் கொண்டிருக்க வேண்டும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நிறுவன மென்பொருட்கள் இப்போதெல்லாம் சேவை மென்பொருளாகத்தான் அளிக்கப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வலுக்கட்டாயம் ஆகிவிட்டது. மைக்ரோசாஃப்ட் நிறுவனமே தனது ஆஃபீஸ் மென்பொருளை ஆஃபீஸ்-365 என்னும் சேவை மென்பொருளாக்கிவிட்டதென்றால் பாருங்களேன்!

வலைமேகக் கணிப்பு வெகுவாகப் புழங்க ஆரம்பித்துள்ளதால், சேவை மென்பொருட்களிலும் மாற்றம் வந்துள்ளது. முன்பெல்லாம் சேவை மென்பொருள் என்றால் அளிப்பாரே தம் கணினிகளையும் மின்வலையையும் கொண்டு சேவையளிக்க வேண்டியிருந்தது. பல வாடிக்கையாளர்கள் ஒரே குழுக் கணினிகளையும், சேமிப்பகத்தையும் சேர்ந்து பயன்படுத்த வேண்டியிருந்தது. இதனால், சில நிறுவனங்களும் சேவை மென்பொருட்களைப் பயன்படுத்தத் தயங்கின. ஆனால் இப்போதோ, அத்தகைய மென்பொருள் சேவையை, வாடிக்கையாளரான நிறுவனத்தின் மெய்நிகர்த் தனி வலைமேகத்திலேயே (virtual private cloud – VPC) பாதுகாப்பாக மென்பொருளை நிறுவி, அவர்களுக்கான தனிப்பட்ட மேகக் கணினிகளயும், தனிக்கப் பட்ட சேமிப்பகத்தையும் பயன்படுத்த முடிவதால், இன்னும் அதிகமான நிம்மதியோடு சேவைக் கணினிகளைப் பயன்படுத்துகிறார்கள்.

அது மட்டுமல்ல, அவர்களது தகவல் மையத்திற்குள்ளேயே, தனி வலைமேகத்தை (private cloud) உருவாக்கும் வசதி இப்போது வந்துள்ளதால், முன்போல் மென்பொருள் நிறுவுவதற்கு, மாதக் கணக்கில் தகவல் நுட்பத்தார் உதவிக்குக் காத்திராமல், தாங்களே பொது வலைமேகத்தைப் பயன் படுத்துவது போலவே தனி உள்வலை மேகத்தைப் பயன்படுத்தித் துரிதமாக மென்பொருட்களை நிறுவிப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். சேவை மென்பொருள் அளிப்பவர்களைக் கூட VPC தனி மேகத்திலல்லாமல், தங்கள் தகவல் மையத்திலேயே எழுப்பப்பட்ட உள்தனி மேகத்திலேயே தமது மென்பொருளைத் தாமே நிறுவி உள்ளிருந்தே சேவை அளிக்குமாறும் வைத்துக் கொள்கிறார்கள். இவ்வாறு தனி வலைமேகத்தில் நிறுவுவது சேவை மென்பொருட்களுக்கான புது எதிர்பார்ப்பு.

நிறுவன மென்பொருட்களின் சமூக அம்ச எதிர்பார்ப்பைப்பற்றி முன்பு மேலோட்டமாகக் குறிப்பிட்டோம். இது மிகவும் பரவலாகிவிட்டது. எல்லா மென்பொருட்களிலும், குறிப்பாகச் சேவை மென்பொருட்களில் பயனர்கள் ஒருவருக்கொருவரோ, குழுக்களாகவோ உரையாடிக்கொண்டு வேலை நடத்திக்கொள்வது அதிகமாகிவிட்டது. இதில் மிக வெற்றி பெற்றது Linked In. இது ஒட்டுமொத்தமாக நிறுவன மென்பொருள் இல்லையென்றாலும், அதன் வெற்றி, வேறு நிறுவன மென்பொருள் சேவையாளருக்குப் பாடமாகிப் பரவிவிட்டது. இந்த வகையில் Box.net நிறுவனத்தையும் குறிப்பிடலாம். இதனால் நிறுவன மென்பொருள் என்றால் கலந்து வேலை செய்யும் அம்சம் இருந்தாக வேண்டும் என்ற ஆழ்ந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இவையெல்லாம் சரிதான், ஆனால், கட்டமைப்பு மென்பொருட்களுக்குத்தான் இன்னும் மிக மாறுபட்ட புது எதிர்பார்ப்புகள் உள்ளன என்பது என் கருத்து. அடுத்த பகுதியில் கட்டமைப்பு மென்பொருட்களுக்கான அத்தகைய புது எதிர்பார்ப்புகளைப் பார்ப்போம்.

(தொடரும்)

கதிரவன் எழில்மன்னன்

© TamilOnline.com