குஷ்புவுக்கு எதிராகப் போராட்டம்
எய்ட்ஸ் நோய் பற்றிப் பத்திரிகை ஒன்று நடத்திய கருத்துக் கணிப்பில் நடிகை குஷ்பு திருமணத்துக்கு முன் உடலுறவுபற்றிக் கூறிய கருத்து இன்று தமிழகத்தில் பரப்பரப்பான சூழலை உருவாக்கியுள்ளது.

இதற்கிடையில் குஷ்புவுக்கு எதிரான போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சிகள் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. குஷ்புவின் கருத்துக்கு உடன்பாடு இல்லாதவர்கள் மறுப்புக் கட்டுரை, செய்திகள் வெளி யிடலாமே ஒழிய ஜனநாயக நெறிகளுக்கு மாறான முறையில் இயக்கங்கள் நடத்து வதைக் கைவிடவேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக் கொண்டுள்ளது.

குஷ்பு சொன்ன கருத்துக்காக நடிகர் சங்க செயற்குழுவில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்று சிலர் கூறுவதையும், அவர் மறுபடியும் அனைவரிடமும் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வற்புறுத்துவதையும் நடிகர் சங்கப் பொதுச்செயலர் சரத்குமார் மறுக்கிறார். அதுமட்டுமல்லாமல் குஷ்புவுக்கு எதிராக நடைபெறும் செயல்கள் ஏற்கத் தக்க செயல்கள் அல்ல என்று கூறிய அவர் இப்பிரச்சனையை முதலமைச்சரிடம் விரைவில் எடுத்து செல்லப் போவதாகவும், இதுபற்றித் தணிக்கைக்குழு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகத்திற்கு எடுத்துச் செல்லப்போவதாகவும் கூறி குஷ்பு, சுகாசினிக்கு நடிகர் சங்கத்தின் ஆதரவுக் கரத்தை நீட்டியுள்ளார்.

'கருத்து' என்கிற அமைப்பை சமீபத்தில் தொடங்கிய கருணாநிதியின் மகள் கனிமொழியும், ப. சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரமும் ஜனநாயக நாட்டில் அவரவர் கருத்துகளைச் சொல்ல உரிமை யுண்டு, அந்த வகையில் குஷ்புவின் கருத்து அவரது கருத்து. அதைச் சொல்வதற்கு அவருக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தின் முக்கியக் கட்சிகளான அ.தி.மு.கவும் தி.மு.க.வும் நடப்பனவற்றை உன்னிப்பாகக் கவனித்து வருகின்றன.

இந்நிலையில் இச்சம்பவங்களைப் பற்றி விரைவில் தமிழக அரசுக்கு அறிக்கை ஒன்றைச் சேலம் கலெக்டர் தாக்கல் செய்யவிருக்கிறார் என்றும் அந்த அறிக்கையின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என்றும் தெரிகிறது.

கேடிஸ்ரீ

© TamilOnline.com