இரண்டு தலை கொக்கு
மீன் வேட்டையாடச் சென்ற கொக்கு ஒன்றை வேடனின் அம்பு தாக்கியது. பறக்க முடியாத அது ஊர்ந்து ஊர்ந்து ஆற்றின் அருகே இருந்த முனிவரின் குடிலுக்குச் சென்றது. கொக்கின் நிலையைப் பார்த்த முனிவர் இரக்கம் கொண்டார். தன் தவ ஆற்றலால் அதன் காயங்களைப் போக்கியவர், "உனக்கு என்ன வேண்டுமோ கேள், தருகிறேன்" என்றார், அன்புடன்.

'வேடன் பின்னாலிருந்து என்மீது அம்பு எய்ததை என்னால் காண முடியாததால்தானே எனக்கு இந்த நிலைமை ஏற்பட்டது' எனக் கொக்கு சிந்தித்தது. பின் முனிவரிடம், "முனிவர் பெருமானே, எனக்கு முன்னும் பின்னுமாக இரண்டு தலைகள் வேண்டும். அதை வரமாகத் தாருங்கள்" என்றது.

அதைக் கேட்ட முனிவர் திகைத்தார். "இதோ பார். அந்த வரத்தினால் உனக்கு நன்மையைவிடத் தீமைதான் ஏற்படும். அது வேண்டாம்" என்றார்.

"நீங்கள் சொன்னதால்தான் அந்த வரத்தைக் கேட்டேன். முடிந்தால் வரத்தைத் தாருங்கள். இல்லாவிட்டால் நான் என் வழியில் செல்கிறேன்" என்றது கொக்கு.

"சரி, சரி. உன் இஷ்டப்படியே ஆகட்டும். எல்லாம் நன்மைக்கே" என்று வரமளித்த முனிவர், காட்டுக்குள் தவம் செய்யச் சென்றார்.

அதுமுதல் கொக்கிற்கு இரண்டு தலை ஆனது. அதனால் அது ஆற்றுக்குள் இறங்கி முன்னும் பின்னுமாக தலையைச் சாய்த்து ஏகப்பட்ட மீன்களைத் தின்று கொழுத்தது. அதன் வினோத உருவத்தைக் கண்டு பிற பறவைகள் அஞ்சின. அது பறவைகளின் அரசனாக உயர்ந்தது. ஆணவம் தலைக்கேற, மீன் பிடிக்க வந்த பிற பறவைகளை விரட்டியது. சில மாதங்கள் கழிந்தன.

ஒருநாள் கொக்கிற்கு மிகுந்த பசியாக இருந்தது. எந்த மீனும் உணவுக்குச் சிக்கவில்லை. அதனால் வேறு நீர்நிலைகளைத் தேடிச் சென்றது. ஒரு குளத்தில் நிறைய தவளைகள் இருந்தன. அதைப் பார்த்த கொக்கின் முதல் தலை ஒரு தவளையை விழுங்க எண்ணியது. இரண்டாம் தலையோ அதைத் தடுத்து, "அதை உண்ணாதே! அது விஷம் உள்ளது. அதைத் தின்றால் இறந்து விடுவோம்" என்றது.

"நீ யார் எனக்கு அறிவுரை சொல்ல. உன் பேச்சை நான் கேட்க முடியாது. எனக்கு மிகவும் பசியாக இருக்கிறது. நான் உண்ணுவேன்" என்றது முதல் தலை.

"வேண்டாம். அது விஷத்தவளை. நமக்குத் தலை இரண்டானாலும் உடல் ஒன்றுதான். மரணம் நிச்சயம்" என்று எவ்வளவோ கூறியது இரண்டாம் தலை. ஆனால் முதல் தலை அதைக் கேட்காமல் ஒரு தவளையைக் கொத்தித் தின்றது. பின் கொக்கு ஆனந்தமாக வானில் பறந்தது. சற்று நேரத்தில் விஷம் பரவி, பறக்க முடியாமல் கீழே விழுந்தது. தவித்தது.

"ஐயோ. நான் எவ்வளவோ சொன்னேனே. நீ கேட்கவில்லையே. இப்போது பார்த்தாயா. நாம் இறக்கப் போகிறோம்" என்றது கொக்கின் இரண்டாம் தலை. "ஆமாம். நான் தெரியாமல் தவறு செய்துவிட்டேன். இனி இப்படிச் செய்ய மாட்டேன். இனிமேல் நமக்கு இரண்டு தலை வேண்டாம், ஒன்றே போதும். நம்மைக் காப்பாற்றுவார் யாரும் இல்லையா?" என்று சொல்லி அழுதது.

அப்போது காட்டிலிருந்து வந்து கொண்டிருந்தார் முனிவர். கீழே கிடந்த கொக்கின் நிலைமையைப் பார்த்ததும் நடந்ததை அறிந்து கொண்டவர், "ம்ம்ம். இதற்காகத்தான் நான் அன்றே சொன்னேன் 'உனக்கு இதனால் நன்மையைவிடத் தீமைதான்' என்று. இப்போது பார்த்தாயா?" என்றார். விஷத்தின் தாக்கத்தால் பதில் பேச முடியாமல் தவித்தன கொக்கின் இரு தலைகளும்.

"சரி, சரி. இனிமேலாவது பேராசைப்படாமல் தகுதிக்கேற்றவாறு வாழ்" என்று சொல்லித் தன் தவ ஆற்றலால் அதை உயிர்ப்பித்து மீண்டும் அதை ஒருதலைக் கொக்கு ஆக்கினார். நன்றியோடு பறந்து சென்றது கொக்கு.

சுப்புத்தாத்தா

© TamilOnline.com