ஆத்ம சாந்தி
மறைமலை நகர் ஸ்டேஷனில் வண்டி நிற்கவும் பரத் தன் நினைவுகளிலிருந்து விடுபட்டுப் பரபரவென தன் உடையைச் சரிசெய்துகொண்டு, சர்டிஃபிகேட்டுகள் அடங்கிய ஃபைலை அள்ளிக்கொண்டு வண்டியிலிருந்து இறங்கினான். மறைமலை நகர் - ஒரு காலத்தில் ஈ, காக்காய் மட்டுமே இருந்த ஒரு குக்கிராமமாக சென்னைக்குத் துளியும் சம்மந்தமில்லாத ஒரு ஊராக இருந்தது. ஒரு தேசியக் கட்சியின் மாநாட்டுக்காக முப்பது வருஷத்துக்கு முன்பு தான் இந்த ஊருக்கு ஒரு ரயில்வே ஸ்டேஷனே வந்தது. இன்றோ ஆட்டோமொபைல் கம்பெனிகள் வந்து குவிந்ததில், உலகமயமாக்கலின் உதாரணமாக, அமெரிக்காவின் டெட்ராய்டுக்குச் சவால் விடும் வண்ணம் அடையாளம் தெரியாத ஒரு தனி நகரமாக ஆகியிருந்தது. ஆனாலும் அந்த ஸ்டேஷனில் பெரிய பரபரப்பு இல்லாமல் ஒருவித மந்தமான மத்தியானத்தை எதிர் நோக்கும் ஆயாசம் தெரிந்தது. ஒரு நவீன நகரத்தின் நுழைவாயில் என்ற அடையாளம் எதுவும் இல்லாமல் சற்றே ஏழ்மையான அன்னியத்தோடே அதன் சுற்றுவட்டாரம் இருந்தது.

பரத்துக்கு அது ஒன்றும் அதிசயம் தரவில்லை. இதை அவன் ஓரிருமுறை தன் நண்பர்களின் அமெரிக்க BPO வேலை இடங்களுக்கு அவர்களைப் பார்க்கப் போனபோது அனுபவித்திருக்கிறான். எல்லாமே ஒரு மாயக்கோட்டைதான். வாசல் கேட்வரை எல்லாம் சாதாரணமாக இருக்கும், கேட்டைத் தாண்டினதிலிருந்து வேறு உலகம்தான். உள்ளே செக்யூரிட்டியிலிருந்து, ரிசப்ஷனிஸ்ட் மற்ற வேலை பார்ப்பவர்கள் எல்லாரும் அந்த கார்ப்பரேட் கல்சரில் குளிப்பாட்டப்பட்டு புதிய மனிதர்கள்போல நடந்துகொள்வார்கள். கட்டிடமும், உள்ளே செல்லும் சாலைகள், அலுவலகம், தோட்டம் எல்லாமும் தரமாயும், சுத்தமாயும் இருக்கும். ஆனால் அந்தக்கட்டிடத்துக்கு வெளியே அதற்குச் சற்றும் சம்பந்தமில்லாமல் அழுக்கும், தூசியும், ஏன் ஏழ்மையும் கூட, பவனி வரும். இந்தப் பளபளா கட்டிடங்களிலும், வண்டிகளிலும் புழங்கும் மனிதர்கள்கூட வெளியே வந்தால் சர்வசாதாரணமாகத் தெருவில் எச்சில் துப்புவதையும், காலி கோக் டின்னை நடைபாதையில் எறிவதையும் பரத் பார்த்திருக்கிறான். அதைப்பற்றி யாருக்கும் யோசிக்கவோ, கவலைப்படவோ நேரமில்லை.

பரத்துக்கு இரண்டு கனவுகள் இருந்தன. ஒன்று பலரும் தன்கீழ் வேலை பார்க்க ஒரு பெரிய நிறுவனத்துக்குச் சொந்தக்காரனாகி, பெரும்பணம் சம்பாதிப்பது. இரண்டு அமெரிக்காவுக்கோ, ஐரோப்பாவுக்கோ போய் சம்பாதித்த பணத்தை இன்னும் பெருக்கி, அனுபவிப்பது. என்ன தலைகீழாய் நின்றாலும் ஆங்காங்கே சொருகப்பட்ட இந்த சொர்க்கபுரிகள் பன்னாட்டு நிறுவனங்களின் தயவில் வந்தாலும் ஒட்டுமொத்தமாக வளர்ந்த நாடுகளில் தெருவெங்கும் தென்படும் சுபிட்சம் இந்தியாவில் வரவே வராது என்ற தவறான எண்ணத்தைத்தான் கொண்டிருந்தான். வேறு வண்ணங்களில் கிட்டத்தட்ட இதே கனவுகளைக் கொண்ட பரத் வயதையொத்த இளைஞர்கள் BPO, GRE என்ற ஏணிகளைச் சாமர்த்தியமாக அமைத்துத் தங்கள் கனவுகளை.எட்டிப் பிடித்துக் கொண்டிருக்க, என்ன படிப்பது, என்ன வேலை பார்ப்பது என்ற தெளிவு இல்லாத பரத் ஒரு நடுப்பகல் நேரத்தில் ட்ரெய்னி உத்யோகத்துக்காக மறைமலை நகரில் நின்று கொண்டிருந்தான்.

மெயின் ரோட்டிலிருந்து சற்று உள்வாங்கிய ரோட்டில் இருந்த பஸ் ஸ்டாப்பை அடைந்தான். அங்கிருந்து இரண்டு மைல் தள்ளி இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டில் இவன் வேலை பார்க்கப்போகும் கம்பெனி ஒளிந்திருந்தது. சாதாரணமாக இருந்தால் பரத் நடந்துபோயிருப்பான். நடுவில் வேறு தடைகள் எதுவும் இல்லாததால், தொலைவில் இருந்த இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டும், அதை ஒட்டி நெடுநெடுவென இருந்த ஆட்டோமொபைல் கம்பெனிக் கட்டிடங்களும் இங்கிருந்தே தெரிந்தன. ஆனால் இந்த வெயிலில், புழுதிரோட்டில் நடந்து போவதை விட, இண்டர்வியூவுக்கு, சாந்தி முகூர்த்தத்துக்கு பால்சொம்பு கொண்டுபோகும் பெண்ணைப்போல, அலுங்காமல் பஸ்ஸிலே போய்விடுவது உசிதம் என்று பஸ் ஸ்டாப்பில் நின்று விட்டான். அந்த பஸ் ஸ்டாப் காத்திருப்பு அவன் வாழ்க்கைப் பாதையையே அடியோடு மாற்றப்போவது அவனுக்கு அப்போது தெரியாது.

"கே.எம்" என்ற ஆங்கில எழுத்துக்கள் ஒரு பெரிய கட்டிடத்தின் மேல் சூரிய வெளிச்சத்தில் டால் அடித்துக்கொண்டிருந்தன. பரத் நின்றிருந்த பஸ் ஸ்டாப், சுற்றுப்பட்ட மரங்களைச் சுற்றியிருந்த வேலிகள் எல்லாமே "கேஎம்" உபயத்தில் நிழல் கொடுத்துக் கொண்டிருந்தன. "கேஎம்" கேந்திரா மோட்டார்ஸ், இந்தியாவில் பஜாஜ், மகிந்திரா போன்ற கம்பெனிகளைப் போல, சமீபகாலத்தில் அசுரவளர்ச்சி பெற்று இப்போது மோட்டார் எஞ்சின், உதிரிபாகங்கள் செய்வதில் நம்பர் ஒன்னாக இருப்பவர்கள். பரத் இந்தக்கம்பெனியைப் பற்றி நிறையக் கேள்விப் பட்டிருக்கிறான். கனகராஜ் கேடிகே மோட்டார்சின் உதிரிபாகங்களை வாங்கி விற்பவராதலால் அவர் வழியாகக் கேந்திரா மோட்டார்ஸ் பற்றியும் அவர்கள் தயாரிப்புகள் பற்றியும் பரத்துக்கு அத்துப்படி.

"கேந்திரா மோட்டார்ஸ்தான் இப்ப கேடிகேவுக்கு டஃப் காம்படிஷன் வேற வெளிநாட்டுக் கம்பெனிங்க இல்லை; நம்ம ஊரு கேந்திரா மோட்டார்ஸ்தான் பெரிய தலைவலி. இதனாலேயே ரெண்டு வருஷத்துக்கு ஒரு தடவை கேடிகே புது எஞ்சின் மாடல் கொண்டுவர வேண்டியிருக்கு. இவங்க கொண்டுவந்த ஒரு வருஷத்துலயெல்லாம் அதே தரத்தோட எப்படியோ கேந்திராவும் புதுமாடல் கம்மி வெலைக்குக் கொண்டாந்துடறாங்க. நான் எளுதித்தரேன் ஒரு நாள் இந்த கேந்திரா மோட்டார்சைக் கேடிகே வாங்கிருவாங்க. இல்லைனா, நானே கேந்திரா டீலர்ஷிப் வாங்கவேண்டியதுதான். தாக்குப் பிடிக்க முடியலை" என்று கனகராஜ் பலமுறை புலம்பி இருக்கிறார்.

கேந்திரா மோட்டார்ஸை பெங்களூரு ஐ.ஐ.எம்.மில் படித்த சில நண்பர்கள் சேர்ந்து ஆரம்பித்திருந்தாலும், நிறுவனர் விஷ்வநாத் அதன் பெரும்பங்குதாரர். அவரும் தன்னைப்போல அடிநடுத்தர வர்க்கத்திலிருந்து படிப்படியாக முன்னுக்கு வந்து இந்த சாம்ராஜ்யத்தை ஸ்தாபித்தவர் என்பதால் பரத்துக்கு அவர் ஒரு நம்பிக்கை தரும் முன்மாதிரியாகவும் இருந்தார். கேந்திரா மோட்டார்சை ஆரம்பிக்கும் முன், கொஞ்ச வருஷம் ஜெர்மனி கேடிகேயில் அவர் வேலை பார்த்தவரானதால், பலரும் அந்தக் கம்பெனியின் தயாரிப்பு ரகசியங்களைத் தந்திரமாகத் தெரிந்துகொண்டு, தப்பாட்டம் ஆடியவர் என்று விஷ்வநாத்தை குற்றம் சொல்பவர்களும் உண்டு. அவர்களுக்கெல்லாம் விஷ்வநாத்தின் ஒரே பதில் - இண்டெலிஜென்ஸ் எல்லாருக்கும் சொந்தம். இண்டெலெக்சுவல் ப்ராபார்ட்டி அந்த அந்த நிறுவனத்துக்கு சொந்தம். நான் என் இண்டெலிஜென்சை உபயோகப்படுத்தறேன். அவர்கள் இண்டலெக்சுவல் ப்ராபர்டியை இல்லை. அப்படித் தப்பாக யாராவது நினைத்தால் என்மேல் தாராளமாய் கேஸ் போடலாம். ஐ எம் ரெடி டு ஃபேஸ் தீஸ் அக்யூசர்ஸ் இன் தி கோர்ட், நாட் இன் தி மீடியா."

யாரும் கேஸ் போடாததால், பரத் விஷ்வநாத் பக்கம் நியாயம் இருப்பதாக நம்பினான். என்றாவது இதேபோலத் தானும் பெரிய சாதனை படைக்கமுடியும் என்றும் நம்பினான். இதே கேஎம் கம்பெனிக்கு பக்கத்தில் சோனிக் குழந்தைபோல ஒரு அப்ரசிவ் கம்பெனியில் லீகல் டிபார்ட்மெண்டில் ட்ரெயினி ஆக சேருவோம் என்று கனவிலும் நினைக்கவில்லை. பரமபதத்தில் அரிகிஷன் பாம்பில் சருக்கியதுபோல பரத்துக்கு பொங்கிப் பொங்கி துக்கம் வந்தது. பஸ்தான் வரும் வழியாகக் காணோம்.

ஓஎம்ஆரைத் தாண்டி, போரூர்-செங்கல்பட்டு ஹைவேயில் ஒரு நீலநிற பி.எம்.டபிள்யூ. அறுபது கிலோமீட்டர் வேகத்தில் பறந்து கொண்டிருந்தது. இதமான ஏசி, உயர்தர ஏர்ஃப்ரெஷ்னர், சொகுசான லெதர் சீட்டுகள் கொண்ட அந்த வெளிநாட்டுக் காரை சொட்டு நீலம் போட்டு வெளுத்த வெள்ளை யூனிஃபார்ம் போட்ட, அனுபவமிக்க கதிரேசன் வெண்ணையாகச் செலுத்திக் கொண்டிருந்தார். பின்னிருக்கையில் நவநாகரிக உடையணிந்து, 25-30 வயது எனத் தோற்றம் அளிக்கும் ஒரு ஆணும், பெண்ணும் உட்கார்ந்திருந்தார்கள். அந்தப் பெண் அந்த ஆணிடம் "யூ லுக் நெர்வஸ் வினய். ஆர் யூ?" என்றாள். "லிட்டில் பிட், வெல் நாட் ஷ்யூர். பட் ஃபீலிங் ஸோ எக்சைடட். நாம ரெண்டு பேரும் ஒண்ணாவே ஸ்கூலுக்கு போனோம், ஒண்ணாவே எஞ்சினியரிங் முடிச்சோம். தென், ஹையர் ஸ்டடிஸ், அமெரிக்காவுல ஒரே காலேஜ். எனக்கு இண்டியா வரணும்னு ஐடியாவே இல்லை. பட் ஒன்ஸ் யூ டிசைடட் டு ரிடர்ன், என்னவோ தோணுச்சு நானும் ஃபாலோ பண்ணனும்னு. ஹியர் அயம் வித் யூ, கோயிங் டு தி க்ரேட் 'கேந்த்ரா மோட்டார்ஸ்' ஹெட் குவாடர்ஸ். அப்பாவும், அங்கிளும் நம்ம வெச்சு ஏதோ பெரிய ப்ளான் வெச்சிருக்காங்கனு தோணுது."

"என்ன பெரிய சீக்ரெட் ப்ளான், அவங்க ஆரம்பிச்சு பெரிசா வளர்த்த இந்த கம்பெனிய அவங்களோட நெக்ஸ்ட் ஜெனரேஷன் நாம இன்னும் பெரிய அளவுல, ஒரு எம்பயர் மாதிரி கொண்டு வரணும்னு நினைக்கறாங்க."

"தட் இஸ் எ பிக் எக்ஸ்பெக்டேஷன். ஏதோ ஒரு செஞ்ச்சுரிக்கு ஒரு தடவை ரிலையன்ஸ் மாதிரி ஒண்ணு வரும். அதுவும் ஆட்டோமொபைல் இண்டஸ்ட்ரில இண்டியாவுல இன்னொவேஷன், ரிசர்ச்னு எல்லாம் பெருசா பண்ணமுடியாது. என்னைக் கேட்டா நாம டைவர்சிஃபை பண்ணனும். வீ கேன் ஆஃபர் சீப் லேபர் அண்ட் ஃபோகஸ் ஆன் அசெம்ப்ளிங்."

"என்ன வினய் இவ்வளவு நெகடிவா பேசறே? நீயே சொல்ற மாதிரி ரிலையன்ஸ் போன செஞ்ச்சுரிக்கு ஒரு மாடல்னா, ஏன் நாம இந்த செஞ்சுரிக்கு ஒரு மாடலா இருக்கக்கூடாது? ஒண்ணுமே இல்லாம, 30 வருஷத்துக்கு முன்னால இருந்த டெக்னாலஜி, இன்ஃப்ராஸ்ட்ரக்சரை வெச்சு இவ்வளவு பெரிய கம்பெனிய டெவலப் பண்ணியிருக்கும்போது, நாம இதைவிடப் பெருசா பண்ணமுடியாதா? கமான் வினய், இன்னிலேருந்து நாம இந்த கம்பெனி மேனேஜ்மெண்ட் ட்ரெய்னீஸ் கிடையாது, இன்னிக்கு போர்ட் மீட்டிங்ல நம்மள டைரக்டர்ஸா இண்டக்ட் பண்ணப் போறாங்க. பீ ரெஸ்பான்சிபிள். திங்க் டிஃப்ரண்ட்."

"ஓகே, ஓகே. ஐ எம் திங்கிங் டிஃபரன்ட்லி. ஒண்ணாவே படிச்சாலும், வீ நெவர் ஸ்பெண்ட் க்வாலிடி டைம் டுகெதர். என்னதான் சொன்னாலும் இதுல இருக்கிற ஹார்ட் வொர்க்குக்கு சரியான லாபம் இல்லை. இதுல 8 மணி நேரம் போடற எஃபோர்ட்டை, 1 மணி நேரம் ஸ்டாக் மார்க்கெட்டை அனலைஸ் பண்ண செலவழிச்சா இதைவிட அதிக லாபம் கிடைக்கும். நாம ரெண்டு பேரும் நம்ம பெர்சனல் லைஃபை ஆரம்பிக்க ஒண்ணா செலவழிக்கலாம் இல்லையா?"

"வினய் யூ நாட்டி பாய்" என்று அவன் காதைத் திருகி, "எனக்கு அதெல்லாம் யோசிக்க டைம் இல்லை. எனக்கு ரொமான்ஸ், லவ் இதையெல்லாம் பத்தி யோசிக்க நேரமே இருந்ததில்லை. மே பீ நீ என் கூடவே இருந்ததாலே எல்லாரும் நாம ரெண்டு பேரும் லவர்ஸ்னு நினைச்சு என்னை தொந்தரவு பண்ணாம விட்டிருக்கலாம். உன்னை ஒரு ஃப்ரெண்டாதான் பாக்க முடியுது, லவர், ஹஸ்பெண்ட்... இப்படியெல்லாம் நெனச்சா – ஹாஹ்ஹா.." என்று சிரிக்கத் தொடங்கினாள்.

இது எதற்கும் தனக்கும் எந்த சம்மந்தமும் இல்லாதது மாதிரி, போதி மரத்தடியில் ஞானம் வந்த புத்தரின் மனோபாவத்தோடு கதிரேசன் மெஷின் போல வண்டியை மறைமலை நகர் மெயின்ரோடில் திருப்பி, வண்டியின் வேகத்தை வெகுவாகக் குறைத்து இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்டை நோக்கி வண்டியைச் செலுத்தினான். டேஷ் போர்டில் இருந்த கடிகாரம் 11 மணி என்றது.

"கதிரேசன், வண்டியை ஏன் மெதுவா ஓட்டறீங்க, 11.30க்கு போர்ட் மீட்டிங். வேகமாவே போங்க" அவசரப்படுத்தினான் வினய்.

"இல்லீங்க இப்ப சைட்ரோடு வந்துட்டோம், அதுலயும் மேடு, பள்ளமாயிருக்கு ரோடு. வேகமா போகமுடியாது. இதோ வந்துட்டோம், இன்னும் ரெண்டு மைல் கூட இல்லை, நேர் ரோடு. டயத்துக்கு போயிரலாம்."

வண்டி இப்போது லேசாகக் குலுக்கிக் குலுக்கிப் போட்டது. எஞ்சின் வெப்பமானி அதிக வெப்ப நிலை அடைந்ததைக் காட்டியது. வண்டியின் உள்ளேயும் ஏசியையும் மீறி அனல் அடிக்கத் தொடங்கியது.

"என்ன ஏசி ஏதாவது ப்ராப்ளமா? உள்ளே ஒரே அனல் அடிக்குது?" போட்டுக்கொண்டிருந்த கோட்டும், மூடிய ஜன்னலும் இப்போது வெப்பத்தை அதிகப்படுத்தினதால், "ஜன்னலை இறக்குங்க" என்றான் வினய். இப்போது வண்டியின் முன்பக்கம் வெகுவாகக் குலுங்கவே, கதிரேசன் ஒன்றும் புரிபடாமல் காரின் கண்ணாடி ஜன்னலை வேகமாக இறக்கி, எப்படியாவது கம்பெனிக்கு ஓட்டிக்கொண்டு போய்விட வேண்டும் என்று சாமியை வேண்டினான்.

வராத பஸ்ஸுக்காகக் காத்திருந்த பரத்தைத் தாண்டி குலுங்கியவாறே மெதுவாக அந்த வண்டி கடந்து செல்லும்போது, கண்ணாடிக்கதவுகள் இறக்கப்பட்டன. திடுமென அடித்த காற்றில் அலைந்த ஹென்னா போட்ட கரும்-ப்ரவுன் கூந்தலை, பெடிக்யூர் செய்யப்பட்ட விரல்களால் ஸ்டைலாகத் தள்ளி, வெயிலின் கூச்சம் தாங்காமல் கண்களைச் சற்றே சுருக்கியதில் அந்த யுவதி பரத்தைக் கடந்து சென்ற ஒரு செகண்டில் அவனுக்குப் பேரழகியாகத் தெரிந்தாள்.

"இந்தப் பொட்டலில் ஒரு பாக்தாத் பேரழகியா? என்று நினைத்துக்கொண்டான். இன்னொரு முறை பார்க்க மாட்டோமா? இங்கே வேலை பார்த்தால் இவளை அடிக்கடி பார்க்க முடியுமா? இப்போது பரத்துக்கு அந்த இடம் அவ்வளவு இழிந்ததாகத் தெரியவில்லை. அவ்வளவெல்லாம் அதிர்ஷ்டம் இருந்தால் நாம ஏன் இந்த பஸ் ஸ்டாண்டில் வேகுவேகுனு நிக்கப்போறோம். அவளோட அந்த பி.எம்.டபிள்யூ. கார்ல பக்கத்துல இல்ல போய்கிட்டிருப்போம்."- பெருமூச்சு விட்டான் பரத்.

பரத்தைக் கடந்த கார் சில அடிகள் கடந்ததும் அதன் எஞ்சின் 'வ்ரூம்' என்று அபாய சத்தமிட்டு சில தொடக் தொடக்குகளுக்குப் பின்னர் பொட் என்று நின்று போனது. எஞ்சினிலிருந்து பெரும்புகை வரவே, வண்டியை அணைத்துவிட்டுக் கவலையோடு கதிரேசன் கீழே இறங்கினான்.

"கெளம்பும்போதே சொன்னேன் என்னோட புது மெர்சிடஸ்ல போலாம்னு. நீதான் ஏதோ ப்ரபோசல்ஸ் பாக்கணும், கதிரேசனே ஓட்டட்டும்னு இந்த வண்டில போகலாம்னு சொன்னே. வீ ஆர் கோயிங் டு பீ லேட் ஃபார் அவர் ஃபர்ஸ்ட் போர்ட் மீட்டிங்."

"கூல் டௌன் வினய். கதிரேசன் சரி பண்ணிடுவார். இல்லைனா, கம்பெனிக்கு கால் பண்ணினா, உடனே ஒரு வண்டி அனுப்புவாங்க. நோ வொரிஸ் வண்டி திடுமென நின்றதைப் பார்த்த பரத், ஓட்டமும் நடையுமாக வண்டியை நாலே எட்டில் அடைந்தான். கதிரேசன் பானெட்டைத் திறந்து பார்த்துக்கொண்டிருந்தார். பரத் கிடைத்த வாய்ப்பைக் கதிரேசனிடம் செலவிடத் தயாராயில்லை. திறந்திருந்த ஜன்னலின் அருகே போய் "எக்ஸ்க்யூஸ் மீ, ஐ எம் பரத். என்ன ப்ராப்ளம். மே ஐ ஹெல்ப் யூ" என்றான். இன்னும் அருகாமையில் அவள் இன்னும் ஜொலித்தாள், ஃப்ரெஞ்ச் சென்ட் மணம் உறுத்தாமல் பழையகாலப் படங்களின் சொர்க்கலோக செட்டுக்கு மானசீகமாக இட்டுச்சென்றன.

அளவான ஒரு புன்சிரிப்போடு, "தேங்க்ஸ், என்ஜின் ஏதோ ப்ராப்ளம் போலிருக்கு. முடிஞ்சா டிரைவருக்கு ஹெல்ப் பண்ணுங்க" என்று அவள் சொல்லவும், வினய் "ஜஸ்ட் சீ திஸ், நோ சிக்னல், என் ஃபோன்லயும் ஒன் ஃபோன்லயும் டவர் எடுக்க மாட்டேங்குது. நாம இந்த வெயில்ல ஃப்ரை ஆகி, லேட் ஆகி.. வீ ஆர் டூம்ட் கேந்திரா" என்று சொல்லவும் சரியாக இருந்தது., கேந்திரா மோட்டார்ஸ் மேனேஜிங் டைரக்டரின் ஒரே மகளான கேந்திரா என்ற அந்த யுவதியும் இப்போது சற்றே கவலையானாள்.

சந்திரமௌலி,
ஹூஸ்டன்

(தொடரும்)

© TamilOnline.com