மருதமலை முருகன் ஆலயம்
தமிழ்நாட்டின் கோவை மாநகரில் இருந்து 14 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது மருதமலை. மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் அமைந்துள்ள இத்தலம் மிகவும் புகழ்பெற்ற முருகன் தலமாகும். குன்றின்மேல் ஆலயம் அமைந்துள்ளது. இதனை 837 படிகள் ஏறி அடையலாம். படி ஏற இயலாதவர்கள் கார், பேருந்து மூலமும் அடையலாம். இறைவனின் நாமம் தண்டபாணி. தீர்த்தம்: மருதசுனை தீர்த்தம். தல விருட்சம்: மருதமரம்.

காசிப முனிவரின் புதல்வர்களான பத்மாசுரன், சிங்கமுகன், தாரகன் ஆகிய மூவரும் கடுந்தவம் புரிந்து ஆதிசிவனிடத்தில் அற்புத வரங்கள் பெற்று அனைத்து அண்டங்களிலும் ஆட்சி செலுத்தினர். அசுரர்களால் துன்பமுற்ற இந்திரன் முதலான தேவர்கள் திருக்கைலாயம் அடைந்து சிவபெருமானிடம் அசுரர்களை அழித்து தங்களைக் காப்பாற்றுமாறு வேண்டினர்.

சிவனும் அசுரர்களை வெல்லத் தம் நெற்றிக் கண்ணிலிருந்து ஆறுமுகன் தோன்றும்வரை அனைவரும் இன்றைய பேரூர் ஆகிய ஆதிபுரியை அடைந்து அங்கே வசித்து வரும்படி ஆணையிட்டார். ஆதிபுரியின் அருகே உள்ள மருதமலையானது முருகனின் வடிவு என்றும், மருதமரம் முருகனது வேல் என்பதால் அசுரர்கள் தொல்லை அவ்விடத்தில் அணுகாது என்றும் ஈசன் பகன்றார். சிவபெருமான் ஆணைப்படி இந்திரன், தேவர்கள் திருப்பேரூரை அடைந்து சிவபூஜை செய்து முருகனை நோக்கி கடுந்தவம் செய்தனர். முருகன் அவர்கள்முன் தோன்றி வேண்டுவது என்ன என்று கேட்க, தேவர்கள், சூரன் முதலானோர் செய்யும் கொடுமைகளுக்கு முடிவுகட்டித் தங்களைக் காக்க வேண்டினர். முருகனும் அவ்வாறே வரம் தந்து, சூரசம்ஹாரத்திற்குப் பின் தேவர்கள் விருப்பப்படி மருதமலையிலும் எழுந்தருளினார்.

மலையின் படிகளில் ஏறிக் கோயிலுக்குச் செல்பவர்கள் வழியில் வள்ளிநாயகி சன்னதி, தான்தோன்றி விநாயகர், ஆலயத்தின் செல்வங்களைக் கவர்ந்து சென்ற கள்வர்கள் மூவரை வேடனைப்போல் முருகன் குதிரை மீதேறித் துரத்திக் கல்லாகச் சபித்த கள்வர்களின் கற்சிலைகள், இடும்பன் ஆகியோரை தரிசிக்கலாம். படிகளின் முடிவில் கோவில் வாசலில் முதலில் ஆதி மூலவர், அடுத்து அரசு, ஆல், வேம்பு, வக்கணை, நுணா ஆகிய பஞ்ச விருட்சங்களின் அடியில் பஞ்ச விருட்ச விநாயகர் எழுந்தருளி உள்ளார். ஐந்து மரங்களும் ஐம்பூதங்களைக் குறிப்பதாக ஐதீகம். ஐங்கரத்தானை ஐந்துமுறை வலம் வந்து வணங்கினால் நம்முள் இருக்கும் பஞ்ச பூதங்களும் சுத்தி அடைந்து தேக ஆரோக்கியம் மேலோங்கும்.

கொடிமரம், பலிபீடத்தைக் கடந்து உள்ளே சென்றால் மூலவர் சன்னிதி. எழில் கொஞ்சும் தோற்றத்துடன் காட்சி தருகிறான் முருகன். அர்த்தஜாம பூஜையின்போது மட்டுமே சுயரூபத்தில் காட்சிதரும் முருகனின் திருவுருவம் பாம்பாட்டிச் சித்தரால் வடிவமைக்கப்பட்டு மூலஸ்தானத்தில் அமர்த்தப்பட்டது. தினந்தோறும் ராஜ அலங்காரம், விபூதிக் காப்பு, சந்தனக் காப்பு என்று மூன்றுவித அலங்காரங்கள் செய்யப்படுகின்றன. முருகனின் இருபுறமும் ஆலதேவர், சிவலிங்கம், பைரவமூர்த்தி. விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியம் என அனைத்து உற்சவ மூர்த்திகளும் காட்சி தருகிறார்கள்.

கருவறைக்கு வெளியே முருகனுக்கு வலப்புறம் வெள்ளிக் கவசத்தால் ஆன ஐந்து தலைநாகம் குடைபிடிக்கும் பட்டீஸ்வரரின் சன்னிதி உள்ளது. இவரை வழிபட்டுப் பிரகாரத்தை வலம் வந்தால் இடப்புறம் தனிச்சன்னிதியில் அன்னை மரகதாம்பிகை எழுந்தருளியுள்ளாள். அடுத்து நவக்கிரக சன்னிதி, சற்றே இடதுபுறம் வரதராஜப் பெருமாள் சன்னிதி. சிவன் சன்னிதிக்கு வலதுபுறம் பிரகாரத்தில் கோயில் படிகளில் இறங்கிச் சென்றால் தலவிருட்சமான மருத மரத்தையும் மருதசுனை தீர்த்தத்தையும் காணலாம். தலவிருட்சத்தின் நிழலில் சப்த கன்னியர் தரிசனம் தருகின்றனர்.

தலவிருட்சத்திலிருந்து பிரியும் இடதுபக்கப் பாதையில் பாம்பாட்டிச் சித்தர் குகையைக் காணலாம். இவர் சிறுவயது முதலே பாம்புகளைப் பிடிப்பது, விஷமுறிவு மருந்து தயாரிப்பது போன்றவற்றில் ஈடுபட்டு வந்தார். ஒருமுறை நாகரத்தினப் பாம்பைத் தேடி மருதமலை வந்தார். அப்போது சட்டை முனிவர் பாம்பாட்டிச் சித்தருக்கு காட்சி தந்து "உடலுக்குள் இருக்கும் பாம்பாகிய குண்டலினியைத் தேடுவதுதான் பிறப்பின் பொருள். அதைவிட்டு பாம்புகளைத் தேடி அலைவது வீண்" என உபதேசித்தார். அதனால் ஞானம்பெற்ற பாம்பாட்டிச் சித்தர் தியானத்தில் ஆழ்ந்தார். முருகனின் காட்சி கிடைத்தது. உபதேசமும் கிடைத்தது.

பாம்பாட்டிச் சித்தர் வாழ்ந்து சமாதியான குகை சன்னிதியில் வலது கையில் மகுடியினும் இடது கையில் தடியுடனும் காட்சி தருகிறார். சிவலிங்கமும், முருகன் விக்ரகமும் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. குகைக்கு வெளியே தியான மண்டபம் உள்ளது. சித்தர் சன்னிதியில் வழங்கப்படும் திருநீறுப் பிரசாதத்தை கரைத்துக் குடித்தால் நாகதோஷம், விஷப்பூச்சிக் கடியால் உண்டாகும் வியாதிகள் மற்றும் தோல் வியாதிகள் போன்றவை குணமடைகின்றன.

சீதா துரைராஜ்,
சென்னை

© TamilOnline.com