சென்னை மாநகரத் துணைமேயர் கராத்தே தியாகராஜன் இரண்டு மாதங்களாகத் தலைமறைவாகிவிட்டார்.
இதனை அடுத்துச் சென்னை மாநகராட்சி யின் பல்வேறு அலுவல்கள் மாநகர ஆணையர் விஜயகுமார் தலைமையில் நடைபெற்று வருகின்றன. மூன்று மாதங் களுக்கு ஒருமுறை மாமன்றத்தைக் கூட்ட வேண்டிய நிலையில் துணைமேயரும் இல்லாதபோது கூட்டத்தை யார் கூட்டுவது என்கிற கேள்வி எழுந்தது. இதுபற்றிப் பல்வேறு சட்ட நிபுணர்களுடன் அரசு கலந்தாலோசித்து வருவதாகச் செய்திகள் வந்தன. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னையில் வெள்ளநிவாரணப் பணிகள் மற்றும் மீட்புப் பணிகள் அனைத்தும் விஜயகுமாரின் நேரடிப் பார்வையில் நடைபெற்றன.
மழை வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்பு கள் குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தன. இம்மன்றம் கடைசியாக ஆகஸ்ட் மாதம் கூட்டியது. ஆகவே தற்போது மாநகராட்சி அவையைக் கூட்ட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் மாமன்றக் கூட்டத்தை நடத்தத் தமிழக அரசு உத்தரவிட்டது. இதையடுத்து நவம்பர் 21-ம் தேதி மன்றக் கூட்டம் நடைபெறும் என்று மாநகராட்சி அறிவித்தது.
இதற்கிடையில் ''மன்றக் கூட்டத்தை நவம்பர் 21-ம் தேதி நடத்தத் தன்னிச்சையாக முடிவு செய்துள்ளதாக அறிந்தேன். துணை மேயர் இருக்கும் போது ஜனநாயக ரீதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சிலர்கள் பங்கேற்கும் மன்றக் கூட்டத்தைத் தன்னிச்சை யாக நடத்த ஆணையருக்கு அதிகாரம் கிடையாது. எனது உத்தரவின் பேரில் மன்றக் கூட்டத்தை வருகிற நவம்பர் 28-ம் தேதி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும்'' என்று விஜயகுமாருக்குத் துணைமேயர் கடிதம் ஒன்றை அனுப்பியது குறிப்பிடத் தக்கது.
ஆணையர் விஜயகுமார் மாநகராட்சிக் கூட்டத்தை கூட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று சென்னை மாநகர 39வது வார்டு கவுன்சிலர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்தார். ஆனால் இவரது மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விஜயகுமார் கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடை விதிக்க முடியாது என்றும் தெரிவித்தது. இந்நிலையில் ஆணையர் விஜயகுமார் மாநகராட்சி கூட்டத்தைக் கூட்டுவதற்குத் தடைவிதிக்க வேண்டும் என்று வழக்குத் தொடுத்த கவுன்சிலர் முதலமைச்சரை அவதூறாகப் பேசினார் என்று கூறித் திடீரென்று கைதுசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நவம்பர் 21-ம் தேதி கூட்டப்பட்ட மாநகராட்சி மன்றக்கூட்டத்தில் விஜயராமகிருஷ்ணராவ் குரல்வாக்கெடுப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் வெள்ளநிவாரணம் அனைத்துப் பகுதி களுக்கும் அளிக்கப்பட வேண்டும் என்று தி.மு.க.வினர் தீர்மானம் கொண்டுவர அதை அ.தி.மு.க கவுன்சிலர்கள் எதிர்த்த தனால் தி.மு.க.வினர் வெளிநடப்பு செய்தனர்.
கராத்தே தியாகராஜன் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்வார் என்று எதிர்பார்க்கப் பட்டது. ஆனால் அவர் கலந்து கொள்ளவில்லை.
கேடிஸ்ரீ |