நாம் எழுப்பிய ஆறு கேள்விகளில் முதற் கேள்விக்கு விடை சொல்லும் விதமாகச் சென்ற இதழில், முறைப்படி முடிசூட்டப்பட்டு அரியணை ஏறியவன் பாண்டுவே; அவனுடைய புத்திரர்களுக்கே முறைப்படி அரசுரிமை சென்றாக வேண்டும் என்ற விடையை பீஷ்மர் வாய்மொழியாகப் பார்த்தோம். இரண்டாவதாக ஒரு கேள்வியை எழுப்பியிருந்தோம்: 'அரியணையில் அமர்ந்த பாண்டு எப்போது வேட்டைக்குச் சென்றான்? அவன் அரசாண்டானா அல்லது வேட்டை மட்டுந்தான் ஆடினானா? ஆட்சிக்கு வந்த அவன், தன் பங்காக, நாட்டை விரிவுபடுத்த ஏதேனும் செய்தானா அல்லது சும்மா ஒப்புக்கு அரியணையில் அண்ணனுக்கு மாற்றாக அமர்ந்திருந்தானா?' இந்தக் கேள்விக்கு விடையைப் பார்த்துவிட்டு, திருதிராஷ்டிரன் ஒருபோதும் சக்ரவர்த்தியாக இருந்ததே இல்லை; துரியோதனனும் இளவரசுப் பட்டம்கூட சூட்டப்படாதவனாகத்தான் இருந்தான் என்பதற்கான வெகு முக்கியமான ஆதாரத்தைப் பார்க்கலாம்.
பாண்டு அரசேற்றதும், வனம் புகுந்ததும் வெகு சுருக்கமாக ஆதி பர்வத்தில் விவரிக்கப்படுகின்றன. இந்த இடைப்பட்ட காலத்தில்தான் அவன் குந்தியையும் மாத்ரியையும் மணந்திருந்தான் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இவையும் ஆதி பர்வத்தில் மிகச் சுருக்கமாகப் பேசப்படுகின்றன. இந்த இரண்டு திருமணங்களும் முடிந்த பிறகு, பாண்டுவின் திக்விஜயம் பேசப்படுகிறது. குரு வம்சத்துக்குத் தீங்கு செய்தவர்களாகிய தசார்ண தேசத்தரசர்களை முதலில் வென்று, அதன் பிறகு தீர்க்கன் என்ற மகத தேசத்தரசனைக் கொன்று அவன் நாட்டை வென்று, காசி தேசம், ஸும்ஹதேசம் என்று பல இடங்களை வென்று, குரு வம்சத்தின் புகழ்க்கொடியை திசையெங்கிலும் பறக்கவிட்டு, நாட்டைப் பேரளவில் விரிவுபடுத்தி, வென்ற அனைத்தையும் பீஷ்மருக்கும் தாயார் சத்தியவதிக்கும், விதுரருக்கும் திருதிராஷ்டிரனுக்கும் காணிக்கையாக்கினான். இது ஆதிபர்வம், நூற்றிருபத்து மூன்றாவது அத்தியாயம், ஸம்பவ பர்வத்தில் விவரிக்கப்பட்டுள்ளது. 'அந்த வீரனாகிய பாண்டுவின் பராக்கிரமத்தினால் திருதிராஷ்டிரன் லக்ஷக்கணக்கான தக்ஷிணைகளுடன் அஸ்வமேதத்துக்கொப்பான அனேகம் பெரிய யாகங்களைச் செய்தான்.' (ஆதி பர்வம் : அத். 143 : பக். 450).
ஆகவே, பாண்டு அரசேற்று ஏதோ ஒப்புக்கு அரியணையில் வீற்றிருந்திருக்கவில்லை. அவன் பெரிய திக்விஜயங்களைச் செய்து, மங்கத் தொடங்கியிருந்த குரு வம்சத்தின் புகழ் மீண்டும் பிரகாசிக்கத் தொடங்கியது. 'ராஜஸிம்மமான சந்தனு, சிறந்த புத்திமானான பரதசக்ரவர்த்தி இவர்களின் புகழினாலுண்டான பெயர் அழிந்து போயிருந்தது; பாண்டுவினால் மறுபடியும் கொண்டுவரப்பட்டது. கௌரவர்களின் தேசங்களையும் தனங்களையும் முன்னே எவர்கள் அபஹரித்தனரோ அவர்கள் அஸ்தினாபுரத்து ஸிம்மமான பாண்டுவினால் கப்பம் கொடுப்பவராகச் செய்யப்பட்டனர்' என்று இவ்வாறு ராஜாக்களும் ராஜமந்திரிகளும் பட்டணத்து ஜனங்களும் சேர்ந்து மிகச் சந்தோஷமுற்றவர்களாகப் பாண்டுவினிடம் அன்புகூர்ந்து பேசினர்'. (மேற்படி, பக். 449)
எனவே ஏறத்தாழ நசித்தே போயிருந்த குரு வம்சத்தின் புகழை மீண்டும் தூக்கி நிறுத்தியவனும், படையெடுக்கப்பட்டு, வெல்லப்பட்டிருந்த அஸ்தினாபுர அரசை மீண்டும் அதன் பழைய நிலையில் நிறுத்தி, அதை விஸ்தரித்தவனும் பாண்டுவே என்பது வெளிப்படை. இந்த அரசு, பாண்டுவினால் மீண்டும் உயிர்பெற்ற அரசு. இந்த திக்விஜயத்துக்குப் பின்னரே பாண்டு, நாடும் காடுமாக வேட்டையாடிச் சற்று பொழுதுபோக்கிய சந்தர்ப்பத்தில்தான் அந்த முனி-மானைக் கொல்ல நேர்ந்ததும்; சபிக்கப்பட்டதும்; மனமுடைந்த நிலையில் நாட்டைத் துறந்து நிரந்தரமாகக் காடேகியதும் நடந்தன. இப்படிக் கான் புகுந்த நேரத்தில்தான் நாட்டை ஆளும் பொறுப்பை யாரிடம் ஒப்புவிப்பது என்ற சிக்கல் தோன்றியதும், விதுரர் ஆட்சியை ஏற்க மறுத்த நிலையில், நாட்டை திருதிராஷ்டிரன்-விதுரர் இருவருக்குமாக சேர்ந்து கூட்டாகப் பொறுப்பை ஒப்படைத்து பாண்டு வனம் புகுந்தான். விதுரர் நிதியை மட்டும் தன் பொறுப்பில் ஏற்றுக் கொண்டார்; பீஷ்மர் சேனைக்குப் பொறுப்பேற்றார். இந்தச் சமயத்தில் தருமபுத்திரனோ, துரியோதனனோ பிறந்திருக்கக்கூட இல்லை என்பது நினைவில் கொள்ளத் தக்கது. நாம் சென்ற முறையே பார்த்ததைப் போல பாண்டு மட்டுமே முறைப்படி முடிசூட்டப்பட்ட அரசன். இப்போது நாடு இருவர் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. இது ஒரு care-taker government என்ற அளவில்தான் நிற்குமேயல்லாது, திருதிராஷ்டிரனுக்கு அரசுரிமை கிடைத்துவிட்டது என்று கொள்ள முடியாது. ஏனெனில், நான் முன்னரேயே பார்த்தைப் போல, அண்ணனான அவன் அரசனாவதை எது தடுத்ததோ அந்த status quo anteயில் எந்த மாற்றமுமில்லை. இப்போதும் அது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது.
எனவே, அவன் முழுமையான, உரிமையுள்ள அரசனாகக் கருதப்பட முடியாதவன். எல்லா முடிவுகளையும் விதுரனுடைய சம்மதத்தின் பேரிலேயே செயல்படுத்திக் கொண்டிருந்தனர். அவ்வளவு ஏன்? ஜயந்தம் என்ற இடத்தில் சூதாட்ட மனையைக் கட்டி, அதில் சூதாட்டத் திருவிழாவை நடத்தக்கூட விதுரனுடைய ஒப்புதல் வேண்டியிருந்தது. விதுரனுக்குத் தனிப்பட்ட முறையில் சம்மதம் இல்லாவிட்டாலும் துரியோதனனால் நெருக்கப்பட்டு இருதலைக் கொள்ளி எறும்பு நிலைக்குத் தள்ளப்பட்ட திருதிராஷ்டிரனுடைய நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாண்டவர்களிடம் தூதே சென்றான். இப்படி ஒவ்வொரு சமயத்திலும் முடிவுகளில் விதுரனைக் கலந்து கொள்ளாமல் துரியோதனனோ, திருதிராஷ்டிரனோ எடுக்க முடியவில்லை என்பது கவனத்துக்கு உரியது.
இதையெல்லாம் விடவும் முக்கியமான குறிப்பு ஒன்று உத்தியோக பர்வத்தில் கிடைக்கிறது. இதை கிஸாரி மோஹன் கங்கூலி இப்படி மொழிபெயர்க்கிறார். Those mighty car-warriors, the Pandavas (if peace be made) will install thee as the Yuvaraja, and thy father Dhritarashtra, that lord of men, as the sovereign of this extensive empire. (www.sacred-texts.com) பாண்டவர்களுக்காக தூது சென்ற கிருஷ்ணன், துரியோதனனிடத்தில் சொல்லும் வார்த்தைகள் இவை. அதாவது, பாண்டவர்களோடு நீ சமாதானம் செய்து கொண்டால் (1) உன்னை அவர்கள் இளவரசனாக்குவார்கள்; (2) உன் தந்தையாகிய திருதிராஷ்டிரனைச் சக்கரவர்த்தியாக்குவார்கள்.
சமாதானப் பேச்சு வார்த்தைகளில், அரசு பாண்டவர்களிடம் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் துரியோதனாதியர்களுக்கு ஏற்படும் நன்மைகளில் இரண்டு என்று கிருஷ்ணன் கொடுக்கும் உறுதிமொழியில் உள்ள தொனியைப் பாருங்கள். துரியோதனனை இளவரசனாகவும் திருதிராஷ்டிரனைச் சக்கரவர்த்தியாகவும் 'ஆக்குவார்கள்' என்றால், பொதுவாக நிலவி வரும் அபிப்பிராயப்படி துரியோதனன் மன்னனாக (அதாவது சூதில் கவர்ந்த நாட்டுக்கு மன்னனாக) இருந்திருந்தால், மன்னனுக்கு 'இளவரசுப்' பட்டம் சூட்டுவதாக உறுதிமொழி தருவதில் பொருளிருக்கிறதா? இந்தக் குறிப்பிலிருந்து நமக்குக் கிடைக்கும் மிக முக்கியமான செய்தி, (1) திருதிராஷ்டிரன் எப்போதுமே சக்கரவர்த்தியாக இருந்ததில்லை (2) துரியோதனன் முறைப்படியாக இளவரசுப் பட்டம்கூட சூட்டப் பெறாதவன்.
'இப்போதும் அதே status quo ante தொடரத்தானே செய்கிறது, இப்போது மட்டும் திருதிராஷ்டிரனுக்கு எப்படி சக்கரவர்த்தியாக முடிசூட்ட முடியும்' என்ற கேள்வி எழும். முதல்முறை இந்தச் சிக்கல் எழுந்தபோது அவனுக்கு வாரிசு இல்லை. இரண்டாம் நிலையில் இருந்தபடி, முழுப் பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள உதவியாளர்கள் இல்லை. இப்போது, அவனுடைய புத்திரர்களுக்குச் சமமான பாண்டவர்கள், தங்களுக்கு உரிய, சூதில் பதின்மூன்று வருட கால அளவுக்கு இழந்த அரசை, காலக்கெடு முடிவடைந்துவிட்ட காரணத்தால் கேட்கிறார்கள். அவ்வாறு திரும்ப ஒப்படைக்கப் படுமானால், தாம் அரசப் பொறுப்பில் இருந்து கொண்டு, சக்கரவர்த்தி பட்டத்தை திருதிராஷ்டிரனுக்குச் சூட்டி, அவனுடைய முதன்மையை ஏற்றுக்கொள்ளச் சம்மதிக்கிறார்கள் என்பது பொருள். இன்று மாறிவிட்டிருக்கும் சூழலில், இப்போது திருதிராஷ்டிரனுக்குப் பட்டம் சூட்டுவது சாத்தியமே. ஏனெனில் அவன் நேரடிப் பொறுப்பு எதையும் நிர்வகிக்கப் போவதில்லை. இந்திய குடியரசுத் தலைவரைப் போன்ற 'மேற்பார்வை' அரசைத்தான் இயக்கப் போகிறான் என்பதால் இப்போதைய சூழல் இதை ஏதுவாக்குகிறது. ஆனால், பாண்டவர்கள் சார்பாகக் கண்ணன் அளிக்கும் உறுதிமொழி தெள்ளத் தெளிவாக நிலைமையை விளக்கி விடுகிறதல்லவா?
இனி மற்ற கேள்விகளை எடுத்துக் கொள்வோம்.
(தொடரும்)
ஹரி கிருஷ்ணன் |